நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பௌத்த மத மக்களின் உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் அவற்றை சீர்குலைக்கும் வேற்று மத அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவற்றைத் தடுக்க சட்டம் இல்லாவிடின் புதிய சட்டங்களை கொண்டுவரவேண்டும். அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாக பொதுபல சேனாசெயற்படவேண்டியேற்படும் என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
உடனடியாக இந்த விடயம் குறித்து கத்தோலிக்க சபை அல்லது கர்தினால் உடனாவது பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். இனிமேலும் பௌத்தர்களை சோதிக்கவேண்டாம். இதற்கு பின்னர் எங்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.பௌத்தர்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது சிங்கள பௌத்த நாடு என்பதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பௌத்தர்களின் உரிமைகளுக்காக வேலை செய்யக்கூடிய முதுகெலும்புள்ள ஒருவரை புத்த சாசன அமைச்சராக நியமிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுககின்றோம்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது
எமது நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்தினருக்கே அனைத்து தடைகளும் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பௌத்தர்களின் உரிமைகளுக்கே அதில் மறுப்பு உள்ளது. சிறுபான்மை மதங்களின் உரிமைகளுக்கு பிரச்சினை இல்லை. மாறாக அனைத்துப் பிரச்சினைகளும் பௌத்த மதத்துக்கே இருக்கின்றது.
இந்நிலையில் 400 க்கும் மேற்பட்ட வேற்று மத அமைப்புக்கள் பௌத்தர்களின் உரிமைகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டுவருகின்றன. பௌத்தர்களின் புனித நாட்களில் கூட நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இந்தஅமைப்புக்கள் செயற்படுகின்றன. எமது நாட்டின் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுகின்றன . எனவே இந்த விடயம் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். இல்லாவிடின் இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மத முரண்பாடு தோன்றுவதை தவிர்க்க முடியாதுபோய்விடும்.
இவ்வாறான வேற்று மத அமைப்புக்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லையெனின் புதிய சட்டங்களை உருவாக்கவேண்டும். அதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றோம். அரசாங்கம் இந்த விடயத்தில் ஒன்றும் செய்யாவிடின் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாக பொதுபல சேனா செயற்படவேண்டியேற்படும் என்பதனை அறிவிக்கின்றோம். எதிர்வரும் எசல போயாவுக்கு முன்னர் இந்த விடயம் குறித்து கத்தோலிக்க சபை அல்லது கர்தினால் உடனாவது பேச்சுவார்த்டதை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அந்தப் பேச்சுவார்த்தையில் நாங்களும் பங்குபற்றவேண்டும்.
நாட்டின் ஜனாதிபதியும் பௌத்த மத மக்களின் வாக்குகளினாலேயே ஆட்சிக்கு வந்தார். எனவே பௌத்த மத மக்களின் உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு அவருக்கு பொறுப்பு உள்ளது. குறிப்பாக புத்தசாசனம் என்றால் என்ன என்பது குறித்து ஒரு வரைவிலக்கணம் அவசியமாகும்.
புத்த சாசன அமைச்சிடம் நாட்டில் எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன என்ற தகவல் ஒழுங்காக இல்லை. ஆனால் எமக்குகிடைத்துள்ள தகவல்களின்படி நாட்டில் 10343 விஹாரைகள் உள்ளன. அதன்படி 1375பௌத்தர்களுக்கு ஒரு விஹாரை எனலாம். 5035 இந்து கோயில்கள் உள்ளன. 507 இந்துள்ளக்களுக்கு ஒரு கோயில் எனலாம். 2000 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. 983 முஸ்லிம்களுக்கு ஒரு பள்ளிவாசல் உள்ளது. கிறிஸ்தவ ஆலயங்கள் 1350 பதியப்பட்டுள்ளன. பதியப்படாமல் ஆயிரக்கணக்கில் உள்ளன. 1100 கிறிஸ்தர்வகளுக்கு ஒரு ஆலயம் எனலாம்.
இதிலிருந்து எந்த மதத்தினருக்கு அநீதி உள்ளது என்பதனை புரிந்துகொள்ள முடியும். பெரும்பான்மையான பௌத்த மதத்தினருக்கே அதிக அநீதி உள்ளது. எனவே இனிமேலும் எம்மால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. எமது பொறுமையைசோதிக்கவேண்டாம். உடனடியாக இது சிங்கள பௌத்த நாடு என்பதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பௌத்தர்களின் உரிமைகளுக்காக வேலை செய்யக்கூடிய முதுகெழும்புள்ள ஒருவரை புத்த சாசன அமைச்சராக நியமிக்கவேண்டும் என கோருகின்றோம் என்றார்.
Post a Comment