சீனாவில் பஸ் தீப்பிடித்து எரிந்தது: 38 பயணிகள் உடல் கருகி சாவு / பத்திரிகையாளர் சந்திப்பில் தடுமாற்றம்: ஜப்பானை சீனா என்று குறிப்பிட்ட பிரான்ஸ் அதிபர்

 

சீனாவில் பஸ் தீப்பிடித்து எரிந்தது: 38 பயணிகள் உடல் கருகி சாவு-
சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரில் இன்று மாலை ஏராளமான பயணிகளுடன் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஜின்ஷான் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீ பிடித்ததை அறிந்த பயணிகள், பஸ்சின் அவசர வழி வழியாகவும், ஜன்னல்களை உடைத்துக் கொண்டும் வெளியே குதிக்க முயன்றனர். ஆனால், சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீ பரவி வெடித்து சிதறியதால், பலர் தீயில் சிக்கினர்.
இந்த கோர விபத்தில் சுமார் 38 பேர் உடல் கருகி இறந்தனர். 33 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவின் மோசமான சாலைகளால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு மத்திய சீனாவில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்ததில் 41 பேர் இறந்தனர்.
இது நாட்டின் மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது. அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷான்ஜி மாகாணத்தில் டபுள் டெக்கர் பஸ், டேங்கர் லாரியுடன் மோதியதில் 36 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் சந்திப்பில் தடுமாற்றம்: ஜப்பானை சீனா என்று குறிப்பிட்ட பிரான்ஸ் அதிபர்-
பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். 17 வருடங்களுக்குப் பின்னர், பிரான்ஸ் அதிபர் ஒருவர் ஜப்பானுக்கு செல்வது இதுவே முதன் முறையாகும்.
ஜப்பான் சென்ற ஹாலண்டே இன்று, டோக்கியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, அல்ஜீரிய பிணைக்கைதிகள் பிரச்சினையில் கடந்த ஜனவரி மாதம் ஜப்பானிய வீரர்கள் 10 பேர் இறக்க நேரிட்டதற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.
பிரெஞ்சு மொழியில் பேசிய ஹாலண்டே, ஜப்பான் என்று குறிப்பிடுவதற்கு பதிலாகத் தவறுதலாக சீனா என்று குறிப்பிட்டு விட்டார். அவருடன் இருந்த மொழிபெயர்ப்பாளர் சாதுர்யமாக அதனை மாற்றி ஜப்பான் என்றே தனது மொழிபெயர்ப்பில் கூறினார். அதிபர் தனது தவறினை உணரவில்லை. இருந்த போதிலும், பிரெஞ்சு மொழி அறிந்த ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவர் அதிபரின் தவறைக் கண்டு பிடித்தார்.
ஜப்பானுக்கும், சீனாவிற்கும் இடையேயான உறவுகள் வரலாற்றிலும் சுமூகமாக இருந்ததில்லை. தற்போதும் எல்லைப் பிரச்சினைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை இல்லை. இரண்டு நாடுகளின் எல்லையிலும், மற்ற நாட்டினைக் குறித்த அவநம்பிக்கை உள்ளது.
இரண்டு நாடுகளுமே, தங்களின் கொள்கைகளை மற்றவருடன் குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபரின் தவறுதலான குறிப்பீடு அவரையே தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger