18 படகுகள் கவிழ்ந்தன: பலரை காணவில்லை 4 மாகாணங்கள், கரையோர எச்சரிக்கை


காலி,பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலைகாரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
அந்த படகுகளில் சென்ற மீனவர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் அந்த இரண்டுசடலங்களும் ஹிந்தோட்டை மற்றும் பலப்பிட்டிய கரைகளில் ஒதுங்கியுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர். இதனையடுத்தே அவர்களை தேடும்பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
4 மாகாணங்கள், கரையோரங்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நீடித்துக்கொண்டிருப்பதனால் நான்கு மாகாணங்களில் வாழ்வோருக்கும் கரையோர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல்,மத்திய ,தென் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலேயே இந்த காலநிலையின் தாக்கம் அதிகரித்து இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
அத்துடன், கரையோரங்களைச்சேர்ந்த மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கடலலையின் வேகம் அதிகரித்திருப்பதனால் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
கடும்காற்று மட்டுமன்றி மின்னல் தாக்கமும் அதிகரித்திருக்கும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்திருக்கும் என்றும் அந்நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
பேருவளையில் கடலுக்கு சென்ற 12 மீனவர்களை காணவில்லை என்றும், எட்டுபேரின் சடலங்கள் இதுவரையிலும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மீனவர்களில் ஆகக்குறைந்தது 12 மீனவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி கண்டுப்பிடித்துதருமாறு பிரதேசவாசிகளை பேருவளை, மருதானை வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
12 பேரை காப்பாற்ற படையினர் பிரயத்தனம்
தெஹிவளை கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்கள் 12 பேரையும் காப்பாற்றுவதற்கு கடற்படையினரும் விமானப்படையினரும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் தெஹிவளை, ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடலில் சுமார் 100 கடல்மைல் தூரத்தில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்ற அந்த படகில் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும் ஹெலிகொப்டர் மூலமாக எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற மீனவர்களை மீட்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரும், இராணுவத்தினரும் உறுதியளித்ததையடுத்து தெஹிவளையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தினால் சில மணிநேரம் தடைப்பட்டிருந்த கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில் திணைக்கள கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger