வடமாகாண சபையை TNA கைப்பற்றுவது உறுதி விமல் நம்பிக்கை




வடக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்ணனியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மாகாண சபை அதிகாரங்களில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை முற்றாக நீக்கிவிட்டே ஜனாதிபதி வடக்கில் மாகாணசபைத் தேர்தலை செப்டம்பரில் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்துமானால் நாம் பெற்ற சுதந்திரத்தை மீளவும் குழிதோண்டி புலிகளின் கைகளில் கொடுத்தது போன்றதாகிவிடும்.
வடக்கில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் நிச்சயமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே அதன் ஆட்சியைக் கைப்பற்றும். இதன் பின் கூட்டமைப்பின் முன்னைய நிகழ்ச்சி நிரல்களில் உள்ள விடயங்கள் அரங்கேறும் என்றும் அவர் தெரிவித்தார்.
புலிகளின் ஆதரவாளர்களுக்கும் இந்த நாட்டினை பிரிக்க முற்படும் வெளிநாட்டு சக்திகளுக்கும் மீண்டுமொறு தமிழ் ஈழம் உருவாகவதற்கு வழிசமைத்துக் கொடுத்தது போன்றதாகி விடும்.
இந்த மாகாணசபை முறையை இந்தியாவின் தேவைக்காகவே அப்போது 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தனவும் ராஜீவ்காந்தியும் இலங்கையில் அமுல்படுத்தினார்.
யுத்த காலத்தில் 1980 களில் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள முஸ்லிம்களை மீளக் குடியேற்றவில்லை. தற்போதைய சமாதான சூழ்நிலையிலும் இம் மக்களை மீள குடியேற்ற முடியாமல் தமிழ்தேசிய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வடக்கு ஆட்சியைக் கொடுத்தால் கூட்டமைப்பு எவ்வாறு செயல்படும் என்றும் அவர் வினவினார்.
வடக்கு தேர்தல் நடந்தால் வடக்கில் ஆட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேட்கும். அதன் பின் தற்பொழுது ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள கிழக்கு மாகாணசபை ஆட்சியினை குழப்பி முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்து கிழக்கிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும்.
முஸ்லிம்களினை அரசில் இருந்து பிரிப்பதற்கே தெற்கில் உள்ள சிங்கள அமைப்பு ஒன்றுக்கு நோர்வே நிதி வழங்கி முஸ்லிம்களுக்கு எதிரான இனக்குரோத நிகழ்வுகளை தெற்கில் நடாத்துகின்றன.
இதனால், கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைவதையே விரும்புவார்கள். இதனையே எதிர்பார்த்து முஸ்லிம் காங்கிரஸ இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான ஒரு சட்டமுலத்தைக் இந்த இரு மாகாண சபையிலும் கொண்டு வந்து இரண்டு சபைகளையும் இணைத்து விடுவார்கள்.
அங்கு உள்ள பொலிசாருக்கு வேறு நிறத்திலான உடைகளை வழங்குவார்கள். காணி அதிகாரத்தின் கீழ் வட-கிழக்கில் உள்ள சகல இராணுவ முகாம்களை மூடி காணிகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறும்படி உத்தரவுவிடுவார்கள்.
ஆகவே, தான் இவ் விடயமாக எமது தேசிய சுதந்திர முன்னணி நாடு முழுவதிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கொழும்பு களுத்துறை, கண்டி, காலி போன்ற மாவட்டங்களில் மே மாதம் 18 ஆம் திகதி விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த உள்ளது.
எமது கட்சியின் அங்கத்தவர்கள் இணைந்து மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாக வடக்குத் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி பாரியளவில் கூட்டங்களையும் 10 இலட்சம் கையெழுத்து வேட்டையும் நடாத்தப்படும்.
அத்துடன், தெற்கில் உள்ள மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கும் நடவடிக்கையில் எமது கட்சி பிரதிநிதிகள் ஈடுபட உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger