"கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா - தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்"
மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு - மனித உரிமை கலாசாரத்தை நோக்கி
இவர்கள் முணுமுணுக்க இடம் கொடுக்காமல் கூட புதைக்கப்பட்டிருக்கலாம். அது மிகப்பெரிய கொலைக்களமாக இருந்திருக்கும். தற்போது அவர்கள் 25 வருடங்களுக்கு பின்னர், மண்ணுக்குள் இருந்து வெளியில் வந்துள்ளனர். அவர்கள் சரியாக விடயங்களை வெளிப்படுத்தும் தருணத்தில் வந்துள்ளனர். அடையாளங்கள் இல்லாது காணாமல் போனதாக இவர்கள் வரலாற்றில் அழிந்து போய்விடுவார்கள் கொலையாளிகள் சிந்தித்திருக்க கூடிய ஜே.வி.பியின் இரண்டாம் தலைமுறை தற்போது இலங்கை அரசியலில் பொறுப்புக் கூறுவது தொடர்பாக கலந்துரையாடல்களில் புதிய எதிரொலியாக மாத்தளையில் தோன்றியுள்ளனர்.
10 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையான தமிழ் மக்களின் இனப்படுகொலைகள், போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக நான்கு புறம் இருந்து இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சுயாதீன விசாரணைகளை கோரி ஐக்கிய நாடுகள் அமைப்பில் யோசனை நிறைவேற்றப்பட்ட இந்த தருணத்தை தவிர வேறு சிறந்த காலம் காலம் இந்த சிங்கள இளைஞர்களின் கொலை குறித்து பேசுவதற்கு இருக்குமா?.
அது மாத்திரமா? இந்த சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் அரச இராணுவத்தின் பிரதானியான அன்றைய கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ஷ, கட்டளை அதிகாரியின் உதவியாளர் சவேந்திர சில்வா, கப்டன் ஜகத் டயஸ், கப்டன் சுமேத பெரேரா ஆகிய அதிகாரிகள் இறுதிப் போரின் கட்டளை அதிகாரிகளாக இருந்ததுடன் அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமையும் அதிசயமான தொடர்புகளாகும். இவர்கள் அனைவரும் கஜபா படைப்பிரிவின் அதிகாரிகள் அதன் முன்னைய தலைமையகம் மாத்தளையிலேயே அமைந்திருந்தது.
காணாமல் போன 18வயதான சுசந்தன ஜனக மற்றும் 17வயதான ரோஹன நிஷாந்த ஆகிய தனது இரண்டு பிள்ளைகளை தேடி அப்போதைய மாத்தளை கட்டளை அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷ சந்திக்க சென்ற தனக்கு, அவரை சந்திக்க சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என இளைஞர்களின் தாயான கமலாவதி என்பவர் அண்மையில் வாராந்த பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.
ஏமாற்றுவதற்காக மாத்தளையில் உள்ள இராணுவம் முகாம்கள் நோக்கி இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட கமலாவதி பின்னர் தமது பிள்ளைகள் தொடர்பான எதிர்பார்ப்பை கைவிட நேர்ந்தது. அப்போது மாத்தளை மாவட்டத்தின் தாய்மார் முன்னணின் அமைப்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்க இருந்தார்.
காணாமல் போகும் சம்பவங்களுக்கு எதிராக போராடிய தாய்மார் முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ என்பதால், அவரது சகோதரான லெப்டினட் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ஷவுடன் நந்திமித்ர ஏக்கநாயக்கவுக்கு நல்ல தொடர்புகள் இருந்தன. சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படவிருந்தவர்களில் ஜே.வி.பியுடன் சம்பந்தப்பட்டிருக்காத கதுருவலை சேர்ந்த விவசாய தலைவராக மாறியிருந்த 1971 ஆம் ஜே.வி.பியின் புரட்சியில் பங்குகொண்டிருந்த ஒருவரை ஏக்கநாயக்க காப்பாற்றி கொடுத்ததை இந்த எழுத்தாளன் தனிப்பட்ட ரீதியில் அறிந்துள்ளேன். எனினும் தன்னை வந்து சந்தித்து கோரிக்கை விடுத்த கமலாவதியின் பிள்ளைகள் இருவரை, ராஜபக்ஷ ஊடாக காப்பாற்றி கொடுக்க அவரால் முடியவில்லை.
மாத்தளை மனித படுகொலை தொடர்பான எதிர்க்கட்சிகளின் அரசியல் அக்கறை கோத்தபாய ராஜபக்ஷவை சிக்க வைக்கும் முயற்சி என ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் நீதிமன்றத்திற்கு அழைக்க வேண்டும் என ஜே.வி.பி பகிரங்கமாக தெரிவித்திருந்தது. எனினும் மாத்தளை பிரதேசத்தில் ஆட்கள் காணாமல் போனமை தொடர்பாக, மத்திய மாகாணத்தில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்திய சுந்திரலிங்கம் ஆணைக்குழுவின் முன் கோத்தபாய ராஜபக்ஷ பற்றிய எந்த சாட்சியங்களும் முன்வைக்கப்படவில்லை.
கிராமத்திற்கு கிராம் சென்று ஜே.வி.பியுடன் போரிடவோ, கைதுசெய்ய செல்லும் குழுவின் தலைவராகவோ செல்லவில்லை என்பதே இதற்கான காரணமாகும். எனினும் சுமார் 200 இளைஞர்களின் கொலையானது கோத்தபாய, மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியாக இருந்த காலத்தில் நடந்துள்ளது என தற்போது நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கட்டளையிடுத்தல் பொறுப்புக் கூறும் நியாயத்திற்கு அமைய அவரும் இந்த கொலைகளுக்கு பதில் கூறவேண்டும் என்பதை தவிர்ப்பது கடினமானது.
அன்றைய காலத்தில் காணாமல் போன பிள்ளைகள் பெற்றோர் உதவி தேடி மாத்தளை வாசியான சவேந்திர சில்வாவின் வீட்டுக்கு வர தொடங்கியதால், அவரது உயர் அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷ, அவரை அனுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
சர்வதேச சட்டத்தில் கட்டளையிடுவது தொடர்பான பொறுப்புக் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ள போதிலும் இலங்கையின் சட்டத்திலோ, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளிலோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 1994 ஆம் ஆண்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழு இவ்வாறான பரிந்துரையை செய்திருந்தது. ' கட்டளையிடும் பொறுப்பு தொடர்பான சட்ட ரீதியான நிலைமையை இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய உயர்நீதமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
பல பரிந்துரைகளை முன்வைத்தே இந்த பரிந்துரையும் முன்வைக்கப்பட்டது.
காணாமல் போனவர்கள் சம்பந்தமாக கடும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசேட காவற்துறை பிரிவொன்றினால் விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறைந்தது பிரதிக்காவற்துறை மா அதிபர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையாளர் அல்லது கணக்காய்வாளர் அல்லது நாடாளுமன்றத்தில் நிதியளிக்கப்படும் சுயாதீன மனித உரிமை வழக்குகளை தாக்கல் செய்யும் நிறுவனங்கள் அல்லது பிரதிநிதி இந்த காணாமல் போனமை தொடர்பான விடயத்திற்கு உதவியளிக்க வேண்டும்.
பலவந்தமாக காணமால் போக செய்த மற்றும் சட்டத்திற்கு முரணான கொலைகள் சம்பந்தமான சட்டமானது பொதுவான சட்டமாக இருக்க வேண்டும். எனினும் தடுத்து வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அந்த நபர் காணமால் போயிருந்தால், நடந்தது என்ன என்பதை தெளிவுப்படுத்தவும் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான பொறுப்பும் குற்றம் சுமத்தப்பட்டவருக்குரியது.
முழு இலங்கையிலும் விசாரணைகளை நடத்திய 1998 ஆம் ஆண்டின் மனோஹரி முத்தேட்டுவகம ஆணைக்குழு 2001 ஆம் ஆண்டு முன்வைத்த பரிந்துரைகளில் கட்டளையிடுதல் தொடர்பில் பொறுப்புக் கூறும் கோட்பாடுகளை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்திருந்தது.
1994 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர், பலவந்தமாக காணாமல் போக செய்வது கட்டாயமான அங்கமாக மாறியிருந்த யுத்தத்தை நோக்கி மீண்டும் சென்ற குமாரணதுங்க அரசாங்கத்திற்கு அந்த பரிந்துரைகளை குப்பை கூடையில் வீசுவதை தவிர வேறு மாற்று வழியிருக்கவில்லை.
நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எம்பிலிப்பிட்டியவில் 21 பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு போன்ற சில சம்பவங்கள் மாத்திரமே வெளிப்படையாக நடைபெற்றன. எனினும் காணாமல் போனமை தொடர்பாக வழக்குகளை தாக்கல் செய்ய சுயாதீன நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது, கட்டளையிடுதல் தொடர்பான பொறுப்பு ஆகிய முக்கியமான பரிந்துரைகளை குமாரணதுங்கவின் அரசாங்கம் புறந்தள்ளியது.
உண்மையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் 2011 ஆம் ஆண்டும், ஐக்கிய நாடுகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாடுகள் 2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைத்த காணாமல் போனவர்கள் தொடர்பான யோசனை மற்றும் பரிந்துரைகள் 1994 ஆம் ஆண்டு ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு இணையானது.
எனினும் விசேடமாக போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைள் மற்றும் பரிந்துரைகளில் ஒரு விடயம் விடயம் குறித்து மாத்திரம் 1994, 98 ஆம் ஆண்டு பரிந்துரைகளை தாண்டி செல்கிறது. போரில் ஈடுபட்ட மற்றைய தரப்பான விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அந்த பரிந்துரையாகும்.
1994 ஆம் ஆண்டு குமாரணதுங்க அரசாங்கம், 1988-1990 ஆண்டுகளின் வன்முறை காலம் சம்பந்தமாக செயற்பட்டமை அரசியல் காரணமாக பக்கசார்மாக மாறியது. அவர் தேசப்பற்றுள்ள மக்கள் அமைப்பு என்ற பெயரில் ஜே.வி.பியினரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறகள் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அது மாத்திரமல்ல விஜய குமாரணதுங்கவை கொலை செய்தது ஐக்கிய தேசியக்கட்சியே எனக் கூறி, அவர் ஜே.வி.பியின் கொலையாளிகளுக்கு வெள்ளை சுண்ணாம்பு பூசினார். இதனால் ஜே.வி.பியின் வன்முறை காலத்தில் அவர்களால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் குறித்த வரலாற்று அறிக்கை எதுவும் இலங்கையில் இல்லை.
மறுபுறம் தமது தலைமையின் கீழ் இயங்கிய ஆயுத குழுவினால் கொலை செய்யப்பட்ட நிராயுத பாணிகளான அமைதியான சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்பாக ஜே.வி.பி ஒருபோதும் பகிரங்கமாக மன்னிப்பு கோரவில்லை. அவ்வாறு செய்யாது, அந்த காலத்தில் கொலை செய்யப்பட்ட தமது உறுப்பினர்களின் உரிமைகள் குறித்து மாத்திரம் பேசுவதற்கு என்ன அரசியல் நாகரீகம் இருக்கின்றது என்ற கேள்வி எழுகிறது.
ரணில் விக்ரமசிங்கவை சிக்கவைக்கும் நோக்கில் பிற்காலத்தில் பட்டலந்த ஆணைக்குழுவை நியமித்த குமாரணதுங்க அரசாங்கம், மற்றுமொரு முக்கிய துறையை புறந்தள்ளியது. அதுதான் ஜே.வி.பியின் வன்முறை காலத்தில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளால் மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயமாகும்.
இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த அன்றைய இராணுவத் தளபதி ரொஹான் தலுவத்தை, கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல்களை அரசியல் பிரதானிகள் தன்னிடம் வழங்கியதாகவும் அந்த பட்டியலில் அப்பாவிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் இருந்தாக கூறினார். அவ்வாறான பட்டியல்களை கொடுத்த அரசயல்வாதிகள் அவர்களை சுத்தம் செய்து விடுங்கள் எனக் கூறியதாகவும் சாட்சியமளித்தார்.
அப்போது காவற்துறை மா அதிபராக இருந்த சிறில் ஹேரத், சாட்சியமளித்த போது, 15 சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர்களுக்கு பின்னால் இருந்த உடுகம்பெலவை பிரதிக்காவற்துறை மா அதிபராக நியமித்தன் மூலம் காவற்துறையை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தும் திட்டமிருந்ததை தான் கண்டதாக கூறினார். காவற்துறையில் தனியான கட்டளையிடும் முறை உருவாக்கப்பட்டிருந்தது எனவும் அவர் கூறினார். எனினும் அவ்வாறான விடயங்கள் குறித்து எந்த மேலதிக விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
மாத்தளை படுகொலையின் அரசியல் ஆவி தற்போது அதிகாரம் படைத்தவர்களின் பின்னால் பயமுறுத்துவது போல், நாடு முழுவதும் நடந்த இவ்வாறான கொலைகளின் (கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அருட் தந்தை மில்லர் வழங்கிய 07 ஆயிரம் பெயர்களை கொண்ட பட்டியல் குறித்து விசாரணை நடத்தாமல் அந்த பட்டியல் ஆணைக்குழுவின் ஆவணங்களுக்கு இடையில் இன்னும் இருக்கின்றது) புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும் என்பது உறுதியானது.
இதனால் சமூகம் என்ற வகையில், வன்முறை காலங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கு நீதி, நியாயத்தை பெற்றுக் கொடுத்து, அது தொடர்பாக இருக்கும் அச்சத்தை வரலாற்றில் வைத்து மனித உரிமை கலாசாரத்தை நோக்கி பயணிக்கும் சவாலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
1988 -1990 ஆண்டுகளின் வன்முறை காலம் நியாயத்தின் அடிப்படையில் அமைந்த நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவில்லை. விடுதலைப்புலிகளுடனான போரின் இறுதி காலம் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஓரளவு அந்த நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது. எனினும் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஓரளவு மாற்றத்திற்கு வழியை ஏற்படுத்திருக்கும். எனினும் அரசாங்கம் அந்த பரிந்துரைகளை புறந்தள்ளியது.
இதன் காரணமாகவே மாத்தளை படுகொலைகள் தொடர்பாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்ப்பது கடினமானதாக உள்ளது. கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா, முள்ளிவாய்க்காலிலா, அவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாடின்றி, நாம் இந்த குற்றங்கள் குறித்த யதார்த்ததிற்கு முகாம் கொடுக்க வேண்டும். அதற்கு தீர்வு தேடவேண்டும். அவ்வாறில்லாது போனால் எமது பிள்ளைகளோ, அவர்களின் பிள்ளைகளே இவ்வாறான தலைவிதியை எதிர்நோக்க போவதை தவிர்க்க முடியாது.
Post a Comment