ஆங்கிலேயர் பாதுகாப்புக் கழகம் (English Defence League -EDL) என்ற நிறவெறி அமைப்பு பிரித்தானியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பலர் கலந்துகொண்டுள்ளனர். வூலிச் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய மசூதிகள் மீதாதான தாக்குதல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் இந்த அமைப்பு நடத்தி வருகிறது. நியுகாசில் என்ற பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1500 இலிருந்து 2000 வரையானவர்கள் கலந்துகொண்டதாக போலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களின் போது இஸ்லாமியர்களுக்கு எதிரான சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன, ‘யாருடைய தெருக்கள், எங்களுடையது’ என்ற சுலோகம் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாக நிறவெறி செய்திகளை ‘ரிவிட்டரில்’ பதிவேற்றிய இருவர் கைதாகினர். பிரித்தானியா முழுவதும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான நிறவெறி அதிகரித்திருப்பதாக ஊடகங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
EDL என்ற நிறவெறி பாசிச அமைப்பின் எழுச்சி யாரால் திட்டமிடப்படுகின்றது என்று பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. வூலிச்சில் நடைபெற்ற தாக்குதலை எந்த சமூக உணர்வுள்ள மனிதனும் ஆதரிக்க முடியாது. தனி நபர்களை அழிப்பதென்பது மக்களின் விடுதலைக்கான வழி அல்ல. 2009ம் ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரைக்கும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவத்தில் பணியாற்றிய இராணுவத் தொழிலாளியின் மரணம் என்பது பிரித்தானிய ஆக்கிரமிப்புக் நோக்கத்தின் விளைபலன்.
மத்திய கிழக்கு நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்காக மட்டுமன்றி, உலகம் முழுவதும் சில விரல்விட்டெண்ணக்கூடிய பணக்காரக் குடும்பங்களின் இலாப நோக்கத்திற்காக இராணுவ மயமாக்கப்படுகின்றது. இனப்படுகொலை என்பது உலகின் ஒவ்வொரு மூலையிலும் சாதாரன நிகழ்வாகிவிட்டது.
இதன் எதிர்வினையாக அடிப்படைவாதமும், பாசிசமும், மத வாதமும் ஆங்காங்கே முளைவிடுகின்றன. இவற்றைத் தோற்றுவித்தது ஏகாதிபத்தி ஆக்கிரமிப்பாளர்களே.
சிரியா - லிபியா போன்ற நாடுகளில் அமரிக்க, ஐரோப்பிய அரசுகளின் நிதி வழங்கலில் இயங்கும் இராணுவம் மட்டுமல்ல அரசியல் பொருளாதார இராணுவ ஆக்கிரமிப்பு அங்கங்களான தன்னார்வ அமைப்புக்கள், புரட்சி வியாபார அமைப்புக்கள் என்பன உலக முழுவதும் அடிப்படை வாதத்தை விதைதுச் செல்கின்றன.
திட்டமிட்ட நச்சு விருட்சங்களாக வளர்க்கப்படுகின்றன. இந்த மோதல்களின் நிழலில் பல்தேசியக் கொள்ளை தடையின்றி நடைபெறுகின்றது.
ஐரோப்பிய நாடுகளின் இன்றைய பொருளாதாரம் மாபெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. பல்தேசிய நிறுவனங்களின் இலாபத்தில் தொய்வு ஏற்படாமல் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டத்தையே புதிய உலக ஒழுங்கு என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
புதிய உலக ஒழுங்கை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய அமரிக்க அரசுகளுக்கு மூன்று முக்கிய தேவை ஏற்பட்டுள்ளது.
- முதலாவதாக இந்த நாடுகளை விட்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு நகர்த்தப்பட்ட உற்பத்தியை உள்ளூர் மயப்படுத்த வேண்டும்.
- இரண்டாவதாக உள்ளூர் உற்பத்திச் செலவு அதிகரிக்காமலிருப்பதற்காக நிறுவனங்களுக்கான வரியைக் குறைக்கவேண்டும்.
- மூன்றாவதாக உற்பத்திக்கான கூலியைக் குறைக்க வேண்டும்.
இந்த மூன்று திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கான நிகழ்ச்சிப் போக்கையே புதிய உல ஒழுங்கு என அழைத்துக்கொள்கிறார்கள்.
ஆக, புதிய உலக ஒழுங்கு என்பது தவிர்க்க முடியாமல் ஏற்படும் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான புதிய திட்டம். இத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்கு உள்ளாகும். சமூக உதவிகள் நிறுத்தப்படும். மிகப்பெரும் வறுமைச் சமூகம் ஒன்று உருவாகும்.
இப் புதிய உலக ஒழுங்கை நிறைவேற்றுவதற்கான கட்டத்தை ஐரோப்பிய அமரிக்க நாடுகள் கடந்துகொண்டிருக்கின்றன. ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளில் அதன் முதல் கட்டம் நிறைவேற்றப்படுகிறது. பல்தேசிய நிறுவனங்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. உழைப்பவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. சமுக நலத்திட்டங்கள் அனைத்தும் அழிக்கப்பபடுகின்றன.
இன்னும் குறுகிய சில வருடங்களுக்குள் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் போது ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் மிகப் பெரும் சமூக அதிர்வு ஏற்படும். அவ்வாறான சமூக அதிர்விலிருந்து முளைத்தெழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் பல்வேறு வழிமுறைகளைத் கையாள ஆரம்பித்துள்ளன. மக்களின் சிந்தனையைத் திசை மாற்றவும், மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தி மோதல்களை தோற்றுவிக்கவும் அவை விரும்புகின்றன.
இந்தப் பின்னணியிலேயே வூலிச் தாக்குதலையும், நடைபெறும் நிறவாத பாசிஸ்டுக்களின் போராட்டங்களையும் இனம் காணமுடியும்.
வூலிச் கொலையாளிகளில் ஒருவரான மைக்கலின் பால்ய நண்பரான அபு நுசைபா பிரித்தானிய ஊடகமான பிபிசி இற்கு வழங்கிய நேர்காணலில் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 மைக்கலைத் தொடர்புகொண்டதாகவும் அவர்களுக்கு உளவாளியாக வேலைசெய்யுமாறு கோரியதாகவும் குறிப்பிடார்.
அமரிக்காவில் நடைபெற்ற பல தாக்குதல்களின் பின்புலத்தில் அமரிக்க அரச உளவு நிறுவனங்களே செயற்பட்டதாகப் பல ஆதாரபூர்வமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
எது எவ்வாறாயினும் ஏகாதிபத்திய அரசுகளின் பொருளாதார நெருக்கடியையும் உலக ஒழுங்கையும் மக்கள் மீது திணிக்கும் போது எழும் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொள்வதற்கான ஆயுதமான நிறவாதம் மிக நேர்த்தியான திட்டமிடலின் கீழ் பயன்படுத்தப்படலாம் என்பது அச்சம் தரும் உண்மை.
Post a Comment