அபுதாபியின் மலைப்பிரதேசமான அல்- பாயாவின் பாலைவனப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளை, துபாய் காவல்துறையின் விமானப்பிரிவு காப்பாற்றியது.
துபாய் காவல்துறையின் ரோந்து ஹெலிகாப்டர், பாலைவனப் பிரதேசங்களில் சுற்றி வந்துகொண்டிருந்தபோது, மலைப்பகுதிகள் நிரம்பிய அல்- பாயா பாலைவனப் பகுதியில் சுற்றுலா நிறுவனம் ஒன்றின் வாகனம் மணலில் சிக்கிக்கொண்டிருந்ததை விமானிப் பயிற்சியாளரான மேஜர் அகமது ஹமத் அல் ஷாஹி கண்டுபிடித்தார்.
உடனடியாக ஹெலிகாப்டரை கீழிறக்கிய அகமது, தனது குழுவினருடன், புதையுண்ட வாகனத்தை வெளியில் எடுக்க உதவி புரிந்தார். பின்னர் நகரின் பிரதான சாலைக்கு வழி காட்டியுள்ளார். அந்த சுற்றுலா வாகனத்தில் இருந்த இரு ஆஸ்திரேலியர்களும் அவருக்கு நன்றி கூறினர்.
மிகப்பெரிய வியாபாரக் கேந்திரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் வளர்ச்சி பெற்றுவரும் ஐக்கிய அரபுக் குடியரசின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கும் உதவி புரியும் வண்ணம அகமது பணியாற்றி வருகின்றார். இதுபோன்ற பாலைவனப் பகுதிகளில் பயணம் செய்யும்போது, பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்யும் இடங்களைப் பற்றி விபரங்களை அறிவிக்கக்கூடிய கருவிகளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும், உதவி தேவைப்பட்டால், காவல்துறையினரை அழைக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment