ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அவை தொடர்பில் எமது கட்சிக்குள் பேசி நாம் தீர்வுகளைக் காண்போம்.
ஏழாம் திகதி நாளை (இன்று) எமது கட்சியின் மாகாண சபை, பாராளுமன்ற பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த கொழும்பிற்கு அழைத்துள்ளோம்.
இதனை முதன்மைப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக கடந்த சில தினங்களில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதோடு, ஆசிரியர் தலையங்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் எந்தவொரு உண்மையும் இல்லை.
நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதும் இல்லை. அதற்கான அவசியமும் எழவில்லை.
ரிஸானா நபீக்கை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டிலான் உட்பட நாமும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
ஆனால், சவூதி அரேபியா இறையாண்மை கொண்ட நாடு அவர்களுக்கென சட்டம் உள்ளது. அதன் பிரகாரமே அவர்கள் நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
அதேபோன்று எமது நாடும் இறையாண்மை கொண்ட நாடு எமக்கும் சட்டங்கள் உள்ளன. அதற்கேற்பவே நாமும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
எனவே, அமைச்சர் டிலானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது. அரசியல் நோக்கம் கொண்டதாகுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
Post a Comment