விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரும்.. புள்ளி விபரங்களும்.. -சுபத்திரா (கட்டுரை)


LTTE_PirabaGroupமூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.
2009 மே 19ம் திகதி காலை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியை அறிவித்திருந்தார் மகிந்த ராஜபக்ச. இந்த மூன்று தசாப்த காலப் போரினால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு என்ற துல்லியமான கணக்கு ஏதும் இன்று வரை இல்லை. நவீன வசதிகள் எல்லாம் இருந்த போதிலும், இந்தப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், அழிவுகள் குறித்த புள்ளிவிபரங்கள் ஏதும் இல்லாதிருப்பது- இது எந்தளவுக்கு கோரமானதாக இருந்துள்ளது என்பதற்கான சாட்சியாக எதிர்காலத்தில் விளங்கும்.
கிட்டத்தட்ட 26 ஆண்டு காலம் நீடித்த ஆயுதப் போரில் 200 பில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டதாக ஆசிய பொருளாதார நிறுவகம் 2011இல் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது. இது போர் முடிவுக்கு வந்த ஆண்டான 2009ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் ஐந்து மடங்கு அதிகமானது.
போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கள் குறித்த ஒரு பருமட்டான தகவலாகவே இது இருந்தாலும், இந்தப் போரில் உயிர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் சேதங்கள் பற்றிய மதிப்பீடு ஒன்றும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. “ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்த உள்நாட்டுப் போர்” அல்லது “ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்ட போர்” என்று ஊடகங்களிலும் அறிக்கைகளிலும் அடைமொழிப் படுத்தப்பட்டாலும், இந்தப் போரில், கொல்லப்பட்ட பொதுமக்கள் எத்தனை பேர், காயமடைந்தவர்கள் எத்தனை பேர், காணாமற்போனவர்கள் எத்தனை பேர் என்ற முறையான தகவல் ஏதும் கிடையாது.
அதுபோலவே போரில் ஈடுபட்ட அரசபடைகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தெளிவான மதிப்பீடுகளோ அல்லது முரண்பாடுகள் சந்தேகங்கள் இல்லாத ஒரு புள்ளிவிபரமோ இதுவரை வெளியாகவில்லை.
ltteRamesh_sla_meetநான்கு கட்டங்களாக நீடித்த இலங்கை அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் மற்றும் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை நீடித்த இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் ஆகியவற்றின் போது பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். காயமடைந்தனர், காணாமற் போயினர்.
பொதுமக்களின் இந்த மரணங்களில் தற்செயலானவை, திட்டமிட்டவை, ஆத்திரத்தில் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்று எல்லாமே உள்ளடங்குகின்றன. ஒருவகையில் சொல்லப் போனால், இந்தப் போர், நீதிக்குப் புறம்பான கொலைகளின் களமாகவே இருந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
போர்களின் போது போர் தொடர்பான நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சட்டவரையறைகள் இருந்தாலும், அவை ஒன்றும் நடைமுறைக்கு சாத்தியப்படுவதில்லை. சுவீடனின் உப்சலா பல்கழலைக்கழகம் சார்பில் உப்சலா முரண்பாட்டு புள்ளிவிபர திட்டம் மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில், வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, 1990 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் 59,193 இற்கும் 75,601 இற்கும் இடையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
LTTE-dead-bodies_2இது இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட ஈழப்போர்களில் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமேயாகும். முதலாம்கட்ட ஈழப்போரிலோ, இந்தியப் படையினரின் காலத்திலோ பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் இதில் சேர்க்கப்படவில்லை.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவின் மனிதாபிமான பணியகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 1982ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் போரினால் சுமார் 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதில் குறைந்தது 27,639 விடுதலைப் புலிகள், 23,790 அரசபடையினர், 1,155 இந்தியப் படையினர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் உள்ளடங்குவதாக இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது.
போரில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுமையான கணக்கெடுப்பு ஒன்றை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அதனை அரசாங்கம் முழுமையாக மேற்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்படு நிலையில், இருந்தவரை, தமது பக்கத்தில் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை அவ்வப்போதும், ஆண்டுதோறும் மாவீரர் நாளின் போது விரிவான பட்டியலாகவும் வெளியிட்டு வந்தது.
LTTE.Piraba-Bala(Vanni)கடைசியாக 2007 மாவீரர் நாளின் போது விடுதலைப் புலிகளால் ஆண்டுவாரியாக உயிரிழந்த புலிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி 1982ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 19,792 பேராகும். 2008 இல் உயிரிழந்த புலிகள் 1186 பேரின் தகவல்கள் இணையங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தால், 20,978.ற்கும் அதிகமான புலிகள் 2008 காலப்பகுதி வரை உயிரிழந்துள்ளனர்.
2007 ஒக்ரோபருக்குப் பின்னர், புலிகளுக்கு கணிசமான ஆளணி இழப்புகள் ஏற்பட்டன. ஆனால், அதுபற்றிய விபரங்களை அவ்வப்போது அவர்கள் வெளியிட்டிருந்தாலும், முழுமையான பட்டியல் தரவுகளை வெளியிடவில்லை. போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததால் துல்லியமான தகவல்களை திரட்டுவதில் சிரமங்கள் இருந்திருக்கலாம். அல்லது அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக் கொள்ளும் போது அது உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்.
எனினும் 2009 ஏப்ரல் மாத தொடக்கத்துக்குப் பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கம் கிட்டத்தட்ட முடக்க நிலையை அடையத் தொடங்கி விட்டதால், அதற்குப் பின்னர் போரில் கொல்லப்பட்ட மூத்த தளபதிகளின் விபரங்களைக் கூட முறைப்படி அறிவிக்க முடியாத நிலையை அடைந்திருந்தது.
இறுதிக்கட்டப் போரில், நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அதுவும் சரியான துல்லியமான புள்ளிவிபரங்கள் கிடையாது. அதேவேளை, அரசாங்கம் கூறுகின்ற தகவல்களின்படி பார்த்தால், அது மிகப்பெரியதாக – விடுதலைப் புலிகளின் ஆளணிப் பலத்தை விஞ்சிய தொகையாகவே அது இருந்தது.
26 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் போது அரசபடைகள் வெளியிட்ட புலிகளின் உயிரிழப்பு பற்றிய தகவல்களுக்கும், விடுதலைப் புலிகள் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்களுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. விடுதலைப் புலிகள் 2008ம் ஆண்டு வரை தமது இழப்புகள் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்தனர் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
LTTE-SLKவிடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் எவருமே, போரில் கொல்லப்பட்ட போராளிகளின் தொகையை புலிகளின் தலைமை மறைத்து விட்டதாகேவோ, குறைத்துக் கூறியதாவோ ஒருபோதும் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, விடுதலைப் புலிகளின் இழப்புகள் தொடர்பாக படைத்தரப்பு எப்போதும் மிகைப்படுத்தியே தகவல்களை வெளியிட்டு வந்தது. அதனை போரின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு உளவியல் நடவடிக்கையாகவும் குறிப்பிடலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, 2006 ஓகஸ்ட் மாதம் மாவிலாறில் நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, 2009 மே 18 இல் போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில் 22,247 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் 11,812 பேரின் பெயர் விபரங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்பதே பொதுவான கருத்து. ஏனென்றால், 2006 – 2007 காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் சுமார் 2000 பேர் வரையே இழந்துள்ளதாக அவர்களின் அதிகாரபூர்வ கணக்குகள் காட்டுகின்றன. எஞ்சிய சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மோசமான போர் நடந்திருந்தாலும், சராசரியாக நாளொன்றுக்கு 35 பேர் வீதம் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும், இறுதிக்கட்டப் போர் பேரழிவுகள் மிக்கதாக இருந்ததால், விடுதலைப் புலிகள் தரப்பில் 1982 தொடக்கம் 2009 வரையான காலத்தில் குறைந்தது 25 ஆயிரம் பேராவது உயிரிழந்திருக்கலாம் என்பது பொதுவான கணிப்பாக உள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை ஒருபோதும் 30 ஆயிரத்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதால், அவர்கள் தரப்பிலான, போரின் இறுதிக்கட்டம் பற்றிய எல்லாத் தரவுகளும் அழிந்து போய் விட்டன.
ltte.piraba-016ஒரு போரில் தோற்கடிக்கப்படும் எந்தத் தரப்புமே, வரலாற்று ரீதியாக எதிர்கொள்ளும் பாரிய பின்னடைவு இது. அதனை விடுதலைப் புலிகளும் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தரப்பில் போரின் இறுதியில் உயிர் தப்பியவர்கள் யார், கொல்லப்பட்டவர்கள் யார், அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டனர் என்ற எந்த விபரமுமே கிடையாது. புலிகளின் பல முக்கியஸ்தர்கள், தளபதிகளுக்கு என்ன நேர்ந்தது என்ற விபரங்களும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதிகள் சூசை, ஜெயம், பானு உள்ளிட்ட பலர் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டதற்கான ஒளிப்பட ஆதாரங்களை அரசாங்கம் வெளியிட்டது.
LTTE_DEAD_Leadersஅதற்கு முன்னரே தீபன், மணிவண்ணன், சொர்ணம், சசிகுமார், கடாபி, விதுசா, துர்க்கா போன்ற விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டனர். ஆனாலும், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் சடலம் கடைசிவரை படையினரிடம் கிடைக்கவில்லை. எனினும் அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக சொல்கிறது படைத்தரப்பு. அதேவேளை, இறுதிப் போரில் உயிர் தப்பி காடுகளில் இருந்த புலிகளின் தளபதிகளுக்கும், சரணடைந்தவர்களில் பலருக்கும் என்ன நிகழ்ந்தது என்ற மர்மமுடிச்சு இன்னமும் அவிழவேயில்லை.
இந்த நீண்ட போரில் அரசபடையினர் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் கூட சரியாக இல்லை.
அரசாங்கம் போரில் வென்றுள்ள போதிலும், அதன் வசம் எல்லா ஆவணங்களும் அழியாமல் உள்ள போதிலும், துல்லியமான விபரங்களை வெளியிடத்தக்க நிலையில் இருந்த போதிலும், தெளிவான புள்ளிவிபரத்தை வெளியிடத் தவறியுள்ளது படைத்தரப்பு. போர் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கத் தரப்பில் படையினரின் மரணங்கள், காயங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட பல்வேறு புள்ளிவிபரங்கள் இங்கு ஆய்வுக்காக எடுக்கப்பட்ட போது, அவற்றுக்கிடையில் குழப்பங்கள், முரண்பாடுகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்த முரண்பாடுகள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்துவதாக உள்ளது. அதாவது, இந்த நான்கு கட்ட ஈழப் போர்களிலும் அரசபடைகள் துல்லியமான தரவுகளை பேணும் வசதிகளைக் கொண்டிருந்த போதிலும், அதைச் சரிவரச் செய்யவில்லை என்பதே உண்மை.
slk.army-005போரின் போது படைத்தரப்பு உண்மையான இழப்புகள் பற்றிய தரவுகளை மறைப்பதாக எப்போதும் விடுதலைப் புலிகளால் மட்டுமன்றி, ஊடக விமர்சகர்கள் மத்தியிலும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது வந்தது. படைத்தரப்புக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்ட போதெல்லாம், செய்தித் தணிக்கை மற்றும் பிற வழிகளில் அரசபடைகளின் இழப்புகள் பற்றிய தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டன. சாதாரணமான சண்டைகளில் ஏற்படும் இழப்புகள் கூட இவ்வாறு மறைக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் இருந்தன.
இது படையினர் மற்றும் தெற்கிலுள்ள அவர்களின் உளவியல் பலம் சிதைந்து போகாமல் இருப்பதற்கும், புலிகளைப் பலவீனப்படுத்துவதற்குமான ஒரு உளவியல் உத்தியாகவும் கையாளப்பட்டிருக்கலாம். ஏனென்றால் போர் ஒன்றில் 100 விதம் வெளிப்படைத்தன்மை ஒருபோதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இழப்புகள் பற்றிய உண்மைகளை மறைப்பது அல்லது தாமதமாக வெளியிடுவது வழக்கமான ஒரு உத்தி தான்.
விடுதலைப் புலிகளும் கூட இழப்புகளின் விபரங்களை மறைத்தான குற்றச்சாட்டு அவர்கள் மீது இல்லாவிட்டாலும், அதைத் தாமதமாக வெளியிடும் உத்தியைப் பலசமயங்களில் கையாண்டுள்ளனர். போர் ஒன்றில் உயிரிழப்புகள், காயங்கள் பற்றிய உணர்வுபூர்வமான விடயங்களில் ஒளிவு மறைவுகள் வேணப்படுவது என்பது வழக்கமே. அது இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நீடித்த போரிலும், தாராளமாகவே கடைப்பிடிக்கப்பட்டது.
ltte.piraba.famஇந்தநிலையில், நான்கு கட்ட ஈழப்போர்களிலும், ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், குறித்து அந்தந்தத் தரப்புகள் வெளியிட்ட அதிகாரபூர்வ தரவுகளுடன், இந்தப் போரின் ஒட்டுமொத்த போக்கு பற்றிய ஒரு அலசலுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம்.
விடுதலைப் புலிகள் 2007 நொவம்பரில் வெளியிட்ட மாவீரர்களின் பட்டியல்-
ஆண்டு – மாவீரர் எண்ணிக்கை
1982 01
1983 15
1984 50
1985 188
1986 320
1987 518
1988 382
1989 419
1990 965
1991 1622
1992 792
1993 928
1994 378
1995 1508
1996 1380
1997 2112
1998 1805
1999 1549
2000 1973
2001 761
2002 46
2003 72
2004 80
2005 56
2006 1002
2007 860 ஒக்டோபர் வரை
மொத்தம் – 19792
-சுபத்திரா -
 
Share this article :

+ comments + 1 comments

Anonymous
April 2, 2014 at 3:25 AM

நாங்கள் மதத்தால் திட்டமிடப்பட்டு பிரிக்கப்பட்டோம் .புலிகளுக்கு இஸ்லாமியர்கள் எதிரி என்ற கருத்தை மாற்றுங்கள். ஏன்என்றால் கடைசியாக இடம் பெற்ற ஆனந்தபூரிப் போரில் பிரபாகனைக் கப்பாற்ற தற்கொலை செய்தவர்களில் ஒரு இஸ்லாமியப் பெண்ணும் உண்டு .அவளைப் போல் பல இஸ்லாமியர்கள் நாங்கள் திட்டமிட்டுப் பிரிக்கப்பட்டோம் என்பதை உணர்ந்து புலிகளோடு சேர்ந்து மாவிரர் ஆகினார்கள்.நாம் ஈழத்தில் இஸ்ரேல் -இந்திய-சிறிலங்கா ஆகிய நாடுகளின் கூட்டுச்சதியால் பிக்கப்பட்டோம். எப்படியென்றால் புலிகளுக்கு போரியல் பயிற்சி வழங்கியவர்கள் பாலஸ்தீனிய நண்பர்கள்.அந்த நண்பர்களுக்கு நன்றிக்கடனாக புலிகள் பாலஸ்தீன் பகை நாடாகிய இஸ்ரேலை எமது பகை நாடாக கொண்டு அவர்களுக்கு எதிராக போரிட்டர்கள் புலிகள் .புலிகளினால் இஸ்ரேல் கடுமையான இழப்புக்களை சந்தித்தது .இதனால் புலிகளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று எண்ணிய இஸ்ரேலுக்கு தமிழர்களியே அப்போது ஈழத்தின் கிழக்கில் காணப்பட்ட இந்து- இஸ்லாம் சிறிய பகை வாய்ப்பாக அமைந்தது.இதற்கு நேரடியாக களத்தில் இறங்கியது இ்ஸ்ரேலின் உளவுத்துறை மொசார்ட். அது சிங்கள படைவிரர்களை பயன்படுத்தியது எப்படியென்றால் அந்த சிங்கள படைவிரர்களுக்கு புலிகளி்ன் சீருடைகளைப் போட்டு சில இஸ்லாமியர்களைத் தாக்கியும் படுகொலையும் செய்தது. இது எங்களை பிரிக்க பகைவன் செய்து சுழ்ச்சி என்பதை விளங்காத சில இஸ்லாமியப் புலிகள் தமது பழியைத் திர்ப்பதற்காக புலிகளைக் காட்டிக்கொடுத்தார்கள் .(இவர்கள் விலைபோய் காட்டக் கொடுக்கவில்லை மாறாக பழிவாங்குவாதற்கா காட்டிக்கொடுத்தார்கள்.)பகைவரின் கெடுகெட்ட சுழ்ச்சி என்பதைப் புரியாத புலிகளும் உடனே எடுத்த முடிவு இஸ்லாமியர்கள் என்போர் எமக்கு இரண்டகர்கள் என்று (பின்பு புலிகள் விளங்கிக் கொண்டார்கள் சதிக்காரர் சதி என்பதை) .இதனால் புலிகள் அவ்வாறு தம்மைக் காட்டிக் கொடுத்த இஸ்லாமியப்புலிகளைப் படுகொலை செய்தனர். இதன் பின்புதான் பல இஸ்லாமியர்களும் புலிகளுக்கு எதிராக சிங்களப் படையில் சேர்ந்து புலிகளுக்கு எதிராக போரிட்டார்கள். பின்பு சதிக்காரர்கள் எப்படியும் இவர்கள் ஒற்றுமை ஆவர்கள் என்று எண்ணி மதபகையை வளர்க்க புலிகளிடமிருந்து இஸ்லாமிய மக்களைப் பாதுகாக்க என்று முஸ்லிம் ஊர்காவல் படையை உருவாக்கி அதற்கு தானே பயிற்சியும் படைக்கருவிகளும் வழங்கியது. இந்த ஊர்காவல் படையில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் புலிகளினால் தாக்கப்பட்டவர்கள் தான். இவர்களில் சிலர் சில இந்து மக்களை படுகொலை செய்தனர். இந்த சில ஊர்காவல் படையினரைப் போல் சில வெறி கொண்ட புலிகளும் இருந்தார்கள். முஸ்லிம் ஊர் காவல் படையினரை படுகொலை செய்த திட்டமிடப்பட்டது தான் சதிக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்த மதவெறிபிடித்த சில புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாசலில் நடாத்தப்பட்ட கொரப்படுகொலை. உண்மையில் இந்தக் கொலை புலிகளால் திட்டமிடப்பட்டது தான் ஆனால் பள்ளிவாசலில் அல்ல அதுவும் ஏதுவும் அறியாத பச்சக் குழந்தையை கொலை செய்யவும் இல்லை. இது நாடாத்தப்பட்டது நான் மேலே சொன்னாது போல சதிக்காரராலும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சில மதவெறி பிடித்த புலிகளால் தான் . இதே போல் தான் சதிக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்த சில இஸ்லாமியர்களால் செய்யப்ட்டது இந்து,கிறிஸ்தவ படுகொலைகள். இது எல்லாம் திட்டமிட்டு எம்மை சதிகாரர் பிரித்தார்கள் என்பதை உணர்ந்த பல இஸ்லாமியர்கள் புலிகளுடன் இனைந்து போரிட்டார்கள் கடைசி வரை .புலிகளின் தலைவரின் பாதுகாப்புப் படையாக இருப்பது இம்ரான் பாண்டியன் படைப்பிரிவு. இதில் வரும் இ்ம்ரான் என்பது ஒரு இஸ்லாமியப் பெயர் ஆகும் ஆனால் இந்தப் பெயரில் வரும் ஆள் இஸ்லாமியர் இல்லை அவர் ஒரு இந்து ஆனால் தனது இஸ்லாமிய நண்பரின் ஆவாவிற்கு இணங்க அந்தப் பெயரை தனக்குச் சூட்டி இருந்தார்.இனப்பிரச்சினைக்காக கொண்டுவந்த நிர்வாக சபையில் ஒரு இஸ்லாமியர் வேண்டும் என்று இலங்கை அரசிடம் புலிகள் கோரியிருந்தார்கள் ஆனால் அவர்களால் அது நிராகரிக்கப்பட்டது. ஏன் ? இவ்வாறு மதப் பகையை வளர்க்க என்பதை அனைத்து தமிழ் பேசும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் கேட்டுக் கொள்ளகிறேன்.

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger