மன்மோகன் சிங்குடன் லீ க சியாங்
இந்தியாவுடன் பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க சீனா முயலும் என இந்தியா சென்றுள்ள சீனாவின் புதிய பிரதமரான லீ க சியாங் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ க சியாக் தான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக புது டெல்லி வந்துள்ளார். இந்தியாவுடனான உறவுக்கு சீனா அளிக்கும் முக்கியத்துவமாக சீன தரப்பினரால் இது சுட்டிக்காட்டப்பட்டாலும் இரு வாரங்களுக்கு முன்னர் வரை கூட, இந்த விஜயம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருந்தது. லடாக் எல்லையில் கடந்த மாதம் தான் இரு நாட்டுப் படைகளும் மோதும் நிலைக்குச் சென்றன.
தொடர்புடைய பக்கங்கள்
தொடர்புடைய விடயங்கள்
எல்லைக்குள் சீனத் துருப்புக்கள் ஊடுருவியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சீனா இதை மறுத்தது. இது தொடர்பாக நடந்த பல சுற்றுப் பேச்சுக்களுக்குப் பின்னர், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றிக்கொண்டு சீனத் துருப்புக்கள் சென்றன. இந்தியாவும் தன் பங்கிற்கு சில எல்லை கட்டமைப்புக்களை அகற்ற ஒத்துக் கொண்டது. சற்றே கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்னர், சீனப் பிரதமரின் விஜயத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பு உறவுகளும் சுமூகமாக இல்லை என்பது வெளிப்பட்டது.
அமைதி

சீனத் துருப்புக்கள் அமைத்திருந்த கூடாரங்கள்
இன்றை பேச்சுக்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், எல்லையில் அமைதி நிலவினால்தான் உறவு மேம்படும் என்றார். " இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தொடர்ந்து மேம்பட வேண்டுமானால் அதற்கு எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும். எல்லைப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று நானும் சீனப் பிரதமரும் ஒத்துக் கொண்ட அதே நேரத்தில் அங்கே அமைதி காக்கப்பட வேண்டும் என்றும் ஒத்துக் கொண்டோம்" என்றார் மன்மோகன் சிங்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை எங்கே இருக்கிறது என்பது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலமாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்றே வர்ணிக்கும் சீனா, அந்தப் பகுதி தொடர்பாக காலனிய ஆட்சியாளர்கள் திபெத் நிர்வாகத்துடன் செய்து கொண்ட எல்லைக் கோடான மெக்மோகன் கோட்டை ஏற்க மறுக்கிறது. தற்போது லடாக் பகுதியிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா புதிய இராணுவப் பிரிவுகளை உருவாக்குவது உள்ளிட்ட ராணுவ ரீதியான நடவடிக்கைகளை சீனா ரசிக்கவில்லை.
தற்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனாவின் இராணுவ பலம் கடந்த பல ஆண்டுகளாகவே வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அதேபோல சீனாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன.
சீன ஆட்சியாளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நாளேடு என்று கருதப்படும் குளோபல் டைம்ஸ் இந்த விஜயத்தையொட்டி வெளியிட்ட தலையங்கத்தில் இந்தியாவுடனான உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. "இந்தியர்களுக்கு தமது தேசம் குறித்த பெருமிதம் அதிகம். ஆனால் சீனா தன்னை அதற்குத் தக்கதாக மாற்றிக் கொள்ளவில்லை. இந்தியா குறித்து சரியான புரிதல் சீன சமூகத்திடம் இல்லை. தவறான எண்ணங்களின் அடிப்படையிலேயே சீனா இந்தியாவை எடைபோடுகிறது" என்று கூறியுள்ள கிளோபல் டைம்ஸ், சில தீவுகள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளுடன் சீனாவுக்கு இருக்கும் பிரச்சனை அளவுக்கு இந்தியாவுடன் பிரச்சனை இல்லை என்றும் கூறியுள்ளது.
தலாய் லாமா
டெல்லியில் பேசிய சீனப் பிரதமரும் "சில இடங்களில் நமக்குள் பிரச்சனை இருக்கிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. எல்லைப் பிரச்சனையைப் பொறுத்தவரை இது நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் விடயம். இதை எப்படி தீர்ப்பது என்பது தொடர்பில் சில முக்கிய வரையரைகளை நாங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டுள்ளோம். இறுதித் தீர்வு எட்டப்படும் வரை எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் நாங்கள் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறோம்" என்றார்.
எல்லை மீறி சீனத் துருப்புக்கள் ஏன் வந்தார்கள், அவர்கள் திடீரென ஏன் திரும்பினார்கள் என்பதே இன்னமும் விளங்காத நிலையில் சீனப் பிரதமரின் விஜயத்தை இந்திய ஊடகங்கள் சந்தேகம் கலந்த தொனியிலேயே அணுகியுள்ளன. எல்லைப் பிரச்சனை தவிர பிரம்மபுத்திரா அணையின் குறுக்கே சீனா கட்டிவரும் அணை தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன.

தலாய் லாமாவின் நடவடிக்கைகளை சீனா சந்தேகத்துடனேயே பார்க்கிறது
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு ஆண்டொன்றுக்கு சுமார் 65 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் தற்போது பலமாக இருந்தாலும், இந்த உறவில் சீனாவுக்கு சாதகமாகவே நிலைமை இருந்துவருவது இந்தியாவுக்கு கவலை தரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தக சமச்சீரின்மையை சரி செய்ய என்ன தீர்வுகள் இந்த சந்திப்பில் முன்வைக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்தியாவில் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ள தலாய் லாமா மற்றும் அவரைப் பின்பற்றும் திபெத்தியர்களின் அரசியல் நடவடிக்கைகளை தொடர்பில் சீனா அதிருப்தி அடைந்துள்ளது.
இந்தியாவில் தனது பயணம் நிறைவடைந்தவுடன் பாகிஸ்தான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சீனப் பிரதமர் செல்லவிருக்கிறார்.

Post a Comment