பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.
வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் முழு நாட்டையும் உரிமை கோரும் எந்த ஒரு கருத்தையும், இந்நாட்டில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்ட சிங்களவர்களும் நிராகரிக்கின்றோம் என பொதுபல சேனாவின் பொது செயலாளர் வண. ஞானசார கலபொட தேருக்கு சொல்ல விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த தேரர்கள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற திட்டம் போடுகிறார்கள். இதனால் இவர்கள் நிகழ்கால கேள்விகளுக்கான விடைகளை கடந்த காலத்துக்குள் சென்று தேடுகிறார்கள். கடந்த காலத்துக்குள் போவோம் என்றால் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கின்றது. ஆதி சிங்கள ஆண்கள் வட இந்தியாவிலிருந்தும், பெண்கள் தென்னிந்தியாவில் இருந்தும் வந்தவர்கள் என்று மகாவம்சம் சொல்கிறது. எனவே சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும். பெளத்த மதம் கூட இந்தியாவிலிருந்துதான் வந்தது. அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறை சாத்தியமில்லாத கூற்றுகளை கூறுவதை ஞானசாரர் நிறுத்த வேண்டும். இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு சொந்தமான பல்லின நாடு என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 13ம் திருத்தம் மூலமாக மாகாணசபை அமைத்தால், ஈழம் உருவாக வழி ஏற்படும் என்பது முட்டாள்தனமான கருத்து. மாகாணத்தின் காணி, போலிஸ் உரிமைகள் முழுமையாக 13ம் திருத்தத்தில் இல்லை. 13ம் திருத்தத்தை முழுமையாக வாசிக்காமல் பேசுபவர்களின் கருத்து இது. வட மாகாணசபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் இருக்கின்றது என திரும்ப, திரும்ப கூறுகிறீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க பாராளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால், இன்று தமிழர்களுக்கு, தம் எதிர்காலம் தொடர்பில் எந்த அளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? ஒரு இனமாக, தம் சொந்த மண்ணில், இந்நாட்டில் தொடர்ந்து வாழ முடியுமா என்ற நியாயமான அச்சம் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் நிலம், கடல் பறிபோகின்றன. தமிழர்களின் மொழி, கலாச்சாரம், மதம் அழித்து ஒழிக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசியலமைப்பில் உள்ள 13ம் திருத்தம் என்ற உரிமையைக்கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள பெளத்த நாடு என அறிவிக்கின்றீர்கள். இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியாக போராடுவோம். இது தொடர்பில் எந்த ஒரு விட்டுக்கொடுப்புக்கும் இடம் கொடுக்க முடியாது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, கலபொட ஞானசார தேரர் ஆகியோர் இன்று உசுப்பி விடப்பட்டுள்ளர்கள். இதற்கு பின்னால் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இது எமக்கு தெரியாது என நினைக்க வேண்டாம். செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கி விட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடம் இல்லாத நிலைமை ஏற்பட போகின்றது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
Post a Comment