அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அணல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது.
ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் குறையவில்லை. வெயிலின் கொடூர தாக்குதலுக்கு 3 நாளில் 443 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 544 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 68 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 63 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்த அனல் காற்றும் வெப்பமும் இன்னும் 2 நாள் நீடிக்கும் என்றும் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாட வேண்டாம் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆனால் பிழைப்புக்காக வெளியே செல்லும் மக்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர் இழக்கிறார்கள். கரீம்நகரில் பஸ்சில் பயணம் செய்த ஏழுகொண்டலு (25) பஸ் இருக்கையிலேயே பிணமானார். மெடக் மாவட்டத்தில் கவுரி பள்ளி என்ற கிராமத்தில் 20 வயது வாலிபர் ஸ்ரீனிவாச சவுடு வீடு அருகே நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். பதறியபடி ஓடி வந்த அவரது தாய் மகனை தூக்கி தண்ணீர் கொடுக்க முயன்றார். ஆனால் தாயின் மடியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
வெயிலுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை ஆந்திர அரசு அறிவித்து உள்ளது. வெயில் கொடுமைக்குத்தான் அவர்கள் பலியானார்கள் என்பதை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அரசின் உதவித் தொகையை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
பலியானவர்களின் உடலை ஆஸ்பத்திரிக்கு வெயிலில் தூக்கிச் சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை மக்கள் சிரமமாக கருதுகிறார்கள்.
Post a Comment