அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தனி நபர் பிரேரணையை ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதுரலியே ரத்னதேரர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று மேற்படி பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகச் செயலாளரும் பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டிய தேவை காணப்பட்டது. வடமாகாண சபை தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு பல தரப்புக்களினால் முன் வைக்கப்படுகின்ற நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதில் காலதாமதம் காட்டுவது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானதாகும். ஆகவே தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனி நபர் பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதனை பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தவிசாளருமான அதுரலியே ரத்ன தேரர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் கையளிப்பார். மேற்படி பிரேரணையை வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றி நாட்டின் பாதுகாப்பையும் ஐக்கியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் ஆணையை மீறி 1987 ஆம் ஆண்டு ஒப்பந்த ரீதியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை இந்தியா இலங்கைக்குள் திணித்தது. அன்று தொடக்கம் இன்று வரை நாடு சட்ட ரீதியான பிரிவினை வாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. எனவே 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழு அளவில் ரத்துச் செய்வதும் அதற்குள் காணப்படுகின்ற பொலிஸ், காணி மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்களை ரத்துச் செய்தல் போன்ற விடயங்கள் மேற்படி பிரேரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் நாட்டிற்கு எதிராக காணப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தனி நபர் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம் எனக் கூறினார்.
Post a Comment