ஷிராணியின் வங்கிக் கணக்குகளை ஆராய ஆணைக்குழு தீர்மானம் / பாதுகாப்புச் செயலருக்கு அருகதையில்லை -திஸ்ஸ அத்தநாயக்க / 13 திருத்தத்தில் அரசு கை வைக்கக் கூடாது -சரத் பொன்சேகா

 

ஷிராணியின் வங்கிக் கணக்குகளை ஆராய ஆணைக்குழு தீர்மானம்-
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் வங்கிக் கணக்குகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி அவர் கணக்குகளை வைத்துள்ள வங்கிகளிடமிருந்து விபரங்கள் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த வங்கிகள் முன்னாள் பிரதம நீதியரசரின் கணக்கு விபரங்களை வெளியிடவுள்ளனர்.
இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நீதியரசர் பதவியில் இருந்து பதிவிபறிக்கப்பட்டதுடன் சட்டத்துக்குப் புறம்பான வகையில் சொத்துகளைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
13 திருத்தத்தில் அரசு கை வைக்கக் கூடாது -சரத் பொன்சேகா- 
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, ’13′இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டி விடுவது ஜனாதிபதியே என்றும் சாடியுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சி முயற்சித்து வருகின்றது என்றும், ஆனால் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசமைப்பிலிருந்து 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் கடும்போக்குடைய பங்காளிக்கட்சிகளும், அரசு சார்பான சிங்கள அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால் இவ்விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் ‘உதய’னிடம் கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய அரசமைப்பின் ’13′ விடயத்தில் அரசு கைவைக்கக்கூடாது என அவர் தெரிவித்த போது ‘தற்போதைய சூழ்நிலை’ என நீங்கள் சொல்வது எதனை? அதாவது, எதிர்காலத்தில் 13 ஐ நீக்கலாம் என்ற அர்த்தத்திலா? என ‘உதயன்’ அவரிடம் வினவிய போது, ‘தற்போது நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை எதிர்காலத்திலும் தீர்க்கப்படுமா என்ற சந்தேகமுள்ளது” என மழுப்பல் போக்கில் அவர் பதிலளித்துள்ளார்.
அத்துடன், ’13′இற்கு எதிராக அமைச்சர்கள் சிலர் வெளியிட்டு வரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, ஜனாதிபதி சொல்லாமல் இந்த அமைச்சர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். எனவே, இதன் பின்புலம் யார் என்பது இதன்மூலம் தெளிவாகின்றது என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலருக்கு அருகதையில்லை -திஸ்ஸ அத்தநாயக்க-
தேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இருக்கின்ற போது மக்கள் நிதியில் சம்பளம் பெறும் அரச அதிகாரியான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அரசியலில் தலையிடுவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விமர்சனங்களை அரச அதிகாரி ஒருவர் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அதனை அரசாங்கம் தான் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளது. அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியே 13 அல்ல அதற்கு அப்பால் சென்று 13 பிளஸ் தருவதாக வாக்குறுதியளித்தார். இந்நிலையில் மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அரச அதிகாரிகள் அரசியல் பேச எவ்வித அருகதையும் இல்லை. அவ்வாறான ஒரு சிலரால் நாட்டில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளும் அரசியல் பேச முனைவார்கள்.
அரசியல் பேசுவதற்குத் தான் நாட்டில் ஜனாதிபதி, பிரதமார் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger