யாழ்ப்பாணத்தில் அமைந்து உதயன் நாளிதழின் பிரதான காரியாலயம் மீது தாக்குதல் நடைபெற்ற தருணத்தில் காரியாலயத்தில் இருந்த சி.சி.ரி.வி பாதுகாப்பு காமராக்கள் செயலிழந்திருந்ததாக முதல் கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியால் வீதியில் அமைந்துள்ள உதயன் பிரதான காரியாலயத்தின் அச்சியந்திர பகுதிக்குள் ஆயுதம் தரித்த 3 பேர் நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் தீயிட்டு கொளுத்தியதில் அச்சு இயந்திரங்கள் சிலவற்றிற்கும், அச்சுக்காக பயன்படுத்தப்படவிருந்த காகிதாதிகள் தொகையொன்றும், விநியோகத்திற்கு தயாராகவிருந்த நாளிதழ்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த சி.சி.ரி.வி பாதுகாப்பு காமராக்கள் தாக்குதல் நடைபெறுவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன் மட்டும் எவ்வாறு செயலிழந்தது? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த குற்றத்துடன் தொடர்பு பட்டவர்கள் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர் இது குறித்து ஆராய 3காவல்துறை குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment