"சிறுபான்மையினர் என்று எவரும் இருக்க மாட்டார்கள்" என்று ஜனாதிபதி கூறியமையின் அர்த்தம் இன்று புரிகிறது - சுமந்திரன்


News Service
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பயங்கரமான முயற்சியொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 6,400 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணிகள் இராணுவ குடியிருப்புக்கள் அமைப்பதற்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கும் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழான அறிவித்தல்கள் யாழ்ப்பாண தீபகற்பத்தின் வலிகாமம் வடக்கில் மரங்களில் ஒட்டப்பட்டிருந்தன. ஆச்சரியப்படும் விதமாகக் இக் காணிகளுக்கான உரிமையாளர்களை காண முடியவில்லையென்று இவ்வறிவித்தல் தெரிவிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இக் காணிகளின் உரிமையாளர்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறப்படும் சட்டத்துக்கு முரணான வலயங்களுக்கு அப்பால் அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழுகின்றனர். அவர்கள் அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர். 2006 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவினால் அவர்களுடைய இக் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை பூர்த்தியாகவில்லை என்ற பொய்யான வாதத்தினால் அவர்கள் அங்கு சென்று மீளக் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இது பொய்யான வாதமென்பது, எந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் செல்ல தடுக்கப்பட்டார்களோ அதே காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதிலிருந்து தெளிவாக புலப்படுகிறது. தற்போது திடீரென்று அரசாங்கம் தனது உண்மையான முகத்தை காட்டிவிட்டது. இக் காணிகள் கையகப்படுத்தப்பட்டு, வடக்கில் வாக்காளர்களாக மாறப்போகும் ஏனையவர்கள் அங்கு குடியிருப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும். இதே போன்ற அறிவித்தல்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் விடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில், இராணுவம் தனது நோக்கங்களுக்கு தேவையானதெனக் கருதும் காணிகள் அனைத்தையும் சுவீகரிக்குமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. காணி தொடர்பான பிரச்சனைகளை எப்போதும் தேசிய இனப் பிரச்சினையின் மையமாகத் திகழ்ந்து வருகின்றன.

கடந்த காலங்களில், அரசாங்கத்தினால் காணி அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வன்முறைக்கு வழி வகுத்ததோடு, சமூகங்களிடையே இன உறவு மோசமடைவதற்கும் காரணமாக அமைந்தது. எனினும், யுத்தத்தை வெற்றிகொண்ட போதும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை வென்றெடுப்பதற்காக இந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள விருப்பமற்றதாக உள்ளதாகவே தோன்றுகிறது. அதற்கமைய, காணிகளை அபகரிக்கும் வரலாறு மீண்டும் தொடர்வதாகவே தோன்றுகிறது. "மனிதாபிமான நடவடிக்கை ஒன்றின் மூலம் மீட்கப்பட்டவர்கள்" என்று அரசாங்கம் கூறிக்கொள்ளும் வடக்கு கிழக்கு மக்கள் தமது காணிகள் அவற்றுடன் சேர்த்து அவர்தம் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, பிறப்புரிமை ஆகியன எல்லாமே தங்களிடமிருந்து இதே இராணுவத்தினால் பறிக்கப்படுவதை காண்கின்றனர்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் காணி அபகரிக்கப்படும் பிரச்சினையானது, 2009ல் யுத்தம் முடிவுற்றதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எழுப்பி வரும் ஒன்றாகும். 2011 ஜுலையிலும் 2011 ஒக்டோபரிலும் நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிலவர அறிக்கைகள் அடங்கலாக மீண்டும் மீண்டும் பல தடவைகளில் நானே இப் பிரச்சினையை எழுப்பியிருக்கிறேன். எனினும், இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றுவரை அந்த காணி அபகரிப்பு தங்கு தடையின்றி தொடர்ந்த வண்ணம் உள்ளது. 2006ம் ஆண்டில், இலங்கையின் உயர் நீதிமன்றம், இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தனது ஒரு கட்டளையில் தீர்ப்பளித்தது.

மேலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2009 மே மாதம் 26 ஆம் திகதி ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் சேர்ந்து வெளியிட்ட தனது கூட்டு அறிக்கையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைவரையும் 2009ம் ஆண்டு முடிவடைவதற்குள் மீளக் குடியமர்த்துவதாக வாக்குறுதியளித்திருந்தார். இதன் பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும், இவை அனைத்தும் அந்த நிலஅபகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை. வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையில் ஒரு செங்குத்தான அதிகரிப்பினை அண்மைய வாரங்கள் கண்ணுற்றுள்ளன. கடந்த வாரம் வடக்கில் இராணுவத்தினால் காணிகள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கும் தனது எண்ணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது.

இக்காணி அபகரிப்புகளுக்கு எதிராக டீஎன்பிஎப் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. இக் கண்டனப் போராட்டங்களுக்கு மேலதிகமாக, தனியார் காணிகள் இராணுவத்தினால் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனது எண்ணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந் நில அபகரிப்புகள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகியன உள்ளிட்ட வடக்கிலுள்ள பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது. வடக்கிலுள்ள இராணுவத்தினர் தற்போது, தாம் கையகப்படுத்த நினைக்கும் காணிகளில் அதற்கான அறிவித்தல்களை காட்சிப்படுத்துகின்றனர். இக் காணிகளுள் பெரும்பாலானவை தனி நபர்களுக்குச் சொந்தமானவையாகும். சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமையை சட்டபூர்வமான அவர்களுக்கு வழங்கும் உரிய காணி உறுதிப் பத்திரங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

இராணுவத்தினர், பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள சிவில் உத்தியோகத்தர்கள் ஆகியோரினால் காணிகள் கையகப்படுத்தப்படும் ஏனைய சம்பவங்களும் அண்மைய வாரங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு பெருந்தொகையான தனியார் சொத்துக்கள் கையகப்படுத்தப்படுவது "இராணுவ நோக்கத்திற்காக" என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெருந்தொகையான காணிகளை இராணுவம் கையேற்க வேண்டி இருப்பது இதற்கு முன் நாம் அறிந்திராத ஒன்று. 2010ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுள் ஒன்று, அப்போது 'பாதுகாப்பு தேவைகளுக்காக' பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கக் கோருவதாகும்.

இயன்றவரை துரிதமாக சகல சிவில் நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாப்புப் படைகளை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டுமென்பது இன்னொரு பரிந்துரையாகும். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது, ஏனைய பல பரிந்துரைகளுடன் சேர்த்து இப் பரிந்துரைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது. இதுபோன்ற இவ்வறிக்கையின் சிறந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, பல தலைமுறைகளாக இக் காணிகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு சொந்தமான மேலும் அதிகளவான தனியார் காணிகளையும் கையகப்படுத்துவதற்கு தற்போது அரசாங்கம் இராணுவத்திற்கு இடமளித்து வருகிறது. எந்தவித தெளிவான காரணங்களும் இன்றி இவ்வளவு பெருந்தொகையான காணிகள் சுவீகரிக்கப்படுவது (சிங்களவர்களை) குடியேற்றுதல் எனும் பாரதூரமான கவலையை ஏற்படுத்துகின்றது. வடக்கு கிழக்கில் எல்லா சமூகங்களையும் சார்ந்த மக்கள் மிகவும் வரவேற்கப்படுவார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், சிங்களக் குடியேற்றம் என்ற நடைமுறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மக்கள் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்காக வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இது ஒரு தீவிரமான கவலை தரும் விடயமாக தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்துள்ளது. அத்தகைய கவலைகள், வடக்கு கிழக்கில் தமிழ் பெயர்களைக் கொண்ட பல்வேறு தெருக்களும் கிராமங்களும் பெயர் மாற்றப்பட்டு அவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படும் சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளிலிருந்து உறுதி செய்யப்படுகிறது. 2009ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எழுப்பி வரும் இன்னொரு தீவிர கவலை தரும் விடயம் என்னவெனில், இந்து வணக்க ஸ்தலங்கள் பல அழிக்கப்படுவதும் புதிய பௌத்த கோயில்கள் பெருமெடுப்பில் பரவி வருவதுமாகும்.

வடக்கு கிழக்கில் உள்ள கலாசார, இனத்துவ, மற்றும் சமய ஆக்க அமைவை மாற்றுவதிலும் மேலாதிக்க கலாசாரத்தை இப் பகுதிகளில் பலவந்தமாகத் திணிப்பதிலும் அரசாங்கமும் இராணுவமும் இடையறாது ஈடுபட்டுள்ளன. காணி அபகரிப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கின் மக்கள் தொகை இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான தெளிவான முயற்சிகளாகும். அத்தகைய முயற்சிகள் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கினை குழி தேண்டிப் புதைப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும். இந்தக் கவலை, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வடமாகாண தேர்தலோடு மேலும் தீவிரமானதாக மாறுகிறது. யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து "சிறுபான்மையினர் என்று எவரும் இருக்க மாட்டார்கள்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியது இந்தச் சூழ்நிலையில் புதியதொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது.

அத்தகைய கொள்கைகளும் செயல்களும் நல்லிணக்கத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான தாக்கங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியுள்ளது. தாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டோமென்றும் தற்போது சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த யுகமொன்றை கொண்டுவந்து விட்டதாகவும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்தப் பந்திகளிலும் வேறு இடங்களிலும் நான் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது போல் மக்கள் தமக்குச் சொந்தமான வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்ல விடாது தடுக்கப்படும் போது நல்லிணக்கம் வரப் போவதில்லை. உண்மையான நல்லிணக்கத்திற்கு சமூகங்களிடையே அருகிப்போய் விட்ட நம்பிக்கையும் ஒற்றுமையும் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது தலைக்கு மேல் கூரையொன்றில்லாது தவிக்கின்றபோது அவர்களது காணிகளையும் வாழ்வாதாரங்களையும் ஏனைய சமூகங்களைச் சார்ந்தவர்கள் பறித்துக் கொள்வதை அவர்கள் பார்த்தால் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. இது நல்லிணக்கத்தை மேலும் தொலை தூரத்தற்கு தள்ளிவிடவே செய்யும். இராணுவத்தினால் காணி கையகப்படுத்தப்படுவதும் வடக்கு கிழக்கில் குடியேற்றவாதம் தொடர்பான நடவடிக்கைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் ஓர் அங்கமாகும். இத் தாக்குதல்கள் இலங்கை அரசாங்கத்தின் முனைப்பான ஆதரவோடும் அங்கீகாரத்தோடும் ஒத்துழைப்போடும் தெளிவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இவை தமிழ் மக்கள் அவர்தம் அரசியல் அபிலாசைகளை ஒடுக்குவதற்கும் அவற்றுக்காக துன்புறுத்தப்படுவதற்குமான பயனற்ற மற்றும் எதிர்விளைவு கொண்ட பல முயற்சிகளின் ஓர் அங்கமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடப்படும் இந்த வன்முறைச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகள் மீண்டும் நிகழாது தடுப்பதற்காக இலங்கை காத்தரபூர்வமானதும் நேர்மையானதுமான நல்லிணக்க நடைமுறையொன்றை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். காணி அபகரிப்புகளும் குடியேற்றங்களும் அத்தகையதொரு நடைமுறையை தடுக்கவே உதவும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger