பொய்யோடு புன்னகைக்கும் பொது பல சேனா தடைசெய்யப்படுமா?


Bodu Bala Sena

-மூதூர் முறாசில்-
அமெரிக்காவில் வெடித்த குண்டை இலங்கையிலிருந்து பொது பல சேனாதான் கொண்டு சென்று கொடுத்ததென்று கூறினால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, பொது பல சேனா அமெரிக்காவிற்குச் சென்றதன் பின்புதான் குண்டு வெடித்துள்ளது அதனால் அத்தாக்குதலோடு பொது பலசேனாவிற்கு நிச்சயம் தொடர்பிருக்கின்றது என்று கூறினால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ, அப்படியே இலங்கையில் அல்கைதா, ஜிஹாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன என பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்த கருத்தையும் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பொது பலசேனாவும் ஜாதிக ஹெல உறுமயும் வேறு சில பொளத்த தீவிரவாத இயக்கங்களும் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக கூறி வந்த கருத்துக்கள் இலங்கையில் பெரும்பாலும் எடுபடாத நிலையில் அமெரிக்கா ஊடகங்கள் வாயிலாக எடுபட வைப்பதும், முஸ்லிம்களுக்கு எதிரானவர்களின் ஒத்துழைப்பை மேலும் அதிகமாப் பெற்றுக் கொள்வதும் பொதுபலசேனாவினது அமெரிக்கப் பயண நிகழ்ச்சி நிரலில் இல்லாத விடயங்களல்ல.
நான் இவ்வாறு கூறும்போது அமெரிக்காவில் வெடித்த குண்டோடு இலங்கையர் எவரையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன்.
கிழக்கு மாகாணமெங்கும் சந்திக்குச் சந்தி நின்று கொண்டிருக்கும் புலனாய்வுப் பிரிவினரால் கண்டு பிடிக்க முடியாது போன முஸ்லிம் அடிப்படை வாதிகளை, அவர்களது ஆயுதப் பயிற்சி முகாம்களை, நவீன ஆயுதக் கிடங்குகளை பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த தீவிரவாதிகள் கண்டுபிடித்திருப்பதிருப்பது என்பது வெளிநாட்டு ஒத்துழைப்பில்லாமல் இடம்பெறக்கூடிய ஒரு விடயமல்ல.
‘இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் கண்டு பிடிக்கும்’ உபாயம்:
ஏனெனில் ‘இல்லாததை இருப்பதாகக் கண்டு பிடிப்பதும் இருப்பதை இல்லாததாக கண்டு பிடிப்பதும்’ அமெரிக்கர்களின் கைவந்த கலை. அந்தக் கலை நுட்பத்தை பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த தீவிரவாதிகள் கைக்கொண்டிருப்பதனால் நிச்சயமாக அது அமெரிக்கர்களின் அல்லது (அமெரிக்க) யூதர்களின் ஆதரவோடு இடம்பெறும் செயற்பாடு என்பதில் எவருக்கும் சந்தேகம் ஏற்படாது.
அமெரிக்காவானது தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு குழுவினரையோ அல்லது ஒரு நாட்டையோ ஏதோ ஓரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக திட்டமிட்டு தாக்குவதற்கு முற்படுகின்ற போது, அங்கு ‘இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும்’ கண்டு பிடித்து, அதனை நிறுபித்து, குற்றம் சுமத்தி, தாக்குதல் நடாத்துவதானது நீண்ட காலமாக கைக்கொண்டு வருகின்ற ஒரு உபாயமாகும்.
இவ்வுபாயத்தை பின்பற்றியே ஆப்கானிஸ்தான்(2001 ஒக்டோபர் 7ல் ஆரம்பித்த தாக்குதல்) மற்றும் ஈராக்; (2003 மார்ச் 20ல் ஆரம்பித்த தாக்குதல்) உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா மனிதாபிமானத்திற்கு எதிரான தாக்குதலை நடத்தியது.
ஈராக் அணு ஆயுதத்தை தயாரிப்பதாகவும் அது சர்வதேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவ்வச்சுறுத்தலை இல்லாமற் செய்து சமாதான உலகை சமைக்கப் போவதாகவும் கூறி, அக்கூற்றை உண்மைப்படுத்துவதற்கு ஐ.நா சபையையும் இணைத்துக் கொண்டு, கூட்டாளிகளையும் கூட்டிக்கொண்டு ஈராக்கை தாக்கி பல இலட்சம் பேர்களை கொன்று குவித்ததை விட அங்கு தயாரிக்கப்பட்ட எந்தவொரு அபாயகரமான அணுவாயுத்தையும் கண்டு பிடிக்க முடியாமல் போனதானது அமெரிக்கா பின்பற்றி வரும் ‘இல்லாததை இருப்பதாகக் கண்டு பிடிக்கும்’ உபாயத்தையே சான்றுப்படுத்தி நிற்கின்றது.
அத்தகைய உபாயத்தை பொது பலசேனா உள்ளிட்ட பௌத்த தீவிரவாதிகள் கைக்கொண்டு வருவதன் மூலம் இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அழிவை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எந்தவொரு திட்டமும் அவர்களிடம் இருக்க முடியாது. அவர்கள் கூறுவது போல பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அவர்களது திட்டமாக இருப்பின் அவர்கள் ஒருபோதும் ‘இல்லாததை இருப்பதாக கண்டுபிடிக்கும்’ உபாயத்தை கைக்கொண்டிருக்கமாட்டார்கள்!
இலங்கை முஸ்லிம்கள் சம்பந்தமாக பொது பலசேனா இதற்கு முன்பும் பல கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டிருந்தது. அவற்றில் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டதே ஹலால் உணவு என்னும் கண்டு பிடிப்பும் (2012.07.12), 2032ஆம் ஆண்டில் அல்லது அதன் பின்பு இலங்கை முஸ்லிம் நாடாக உருவாகிவிடும் என்ற கண்டு பிடிப்பும் (2012.07.12), முஸ்லிம்கள் பௌத்தர்களுக்கு வழங்கும் உணவுகளில் மூன்று முறை எச்சிலை துப்பியதன் பின்பு வழங்குவது தொடர்பான கண்டு பிடிப்பும் அவ்வாறு துப்பிய பின்புதான் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்னும் கண்டு பிடிப்பும்(2013.03.17); பொதுபலசேனாவின் முக்கியமான கண்டு பிடிப்புக்களாகும்.
அத்தோடு, புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட கையுறைகளை பதுளை முல்லிம் கடையில் கண்டு பிடித்தமையும் (2012.11.23) முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களுக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தமையும்(2013.01.20) தமிழகத்தில் பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றுக்கு சம்பந்தமுள்ளது என்பதைக் கண்டு பிடித்தமையும் (2013.03.19) மக்கா சென்று திருப்பும் முஸ்லிம்கள் சவூதியின் அடிப்படைவாதத்தையும் தீவிர வாதக் கொள்கையையும் இலங்கையில் பரப்புகின்றனர் என்பதைக் கண்டு பிடித்தமையும் (2013.02.20) புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகள் என கண்டு பிடித்தமையும் (2013.01.22) யாவரும் அறிந்த பொது பொதுபல சேனாவின் கண்டு பிடிப்புக்களேயாகும்.
பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்ததையே ஜம்மியதுல் உலமா சபை முஸ்லிம்களுக்கு செய்கின்றது எனக் கண்டு பிடித்தமையும்(2013.02.20) இலங்கை பல கலாசாரம் அல்லது பல மதம் உள்ள நாடு அல்ல. இது சிங்கள பௌத்த நாடு என்று கண்டு பிடித்தமையும்(2013.03.24) சிங்கள பௌத்தர்கள் ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களெனவும் சிறுபான்மை முஸ்லிம்கள் அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளெனவும் கண்டு பிடித்தமையும் (2013.02.12) பொது பலசேனாவின் மேலும் சில கண்டு பிடிப்புக்களாகும்.
சிங்களவர்களை முஸ்லிம்களுக்கெதிராக அணிதிரட்டுவதன் மூலம் அல்லது சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக முஸ்லிம்களைச் செயற்படச் செய்வதன் மூலம் பாரிய கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அழித்தொழிக்கும் ஒரு வேலைத்திட்டத்திற்காகவே ‘இல்லாததில் இருப்பதைக் கண்டு பிடிக்கும்’ உபாயத்தை பொது பல சேனா மேற்கொண்டு வருகின்றது.
அத்தோடு தமது ‘மாயக்’ கண்டு பிடிப்புக்களை ‘பௌத்த’ இலட்சினையிட்டு பாலர் வகுப்பு மாணவர்கள் தொட்டு பாமர மக்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சென்று கொடுக்கின்ற -பிரசாரம் செய்கின்ற தொடர் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இது சம்பந்தமாக பௌத்த – முஸ்லிம் மக்களிடம் போதிய கருத்துப் பரிமாற்றம் பல மட்டத்திலும் ஏற்படுவது அவசியமாகும். அதன் மூலம் பொது பல சேனாவும் அதே கருத்தில் இயங்கும் ஏனைய பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் தடைசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே ஏற்படும்.
பொதுபலசேனாவின் செயற்பாடுகள் அல்லது அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பௌத்த தலைவர்கள் சிலரின் கருத்துக்களை ஒரு கலந்துரையாடலுக்காக இங்கு குறிப்பிடுகின்றேன்.
பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள்….
01. ‘ஒரு சிறிய குழுவினராலேயே முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் தொடர்புற்றுள்ளன. இவர்களின் செயற்பாடுகள் குறித்து முஸ்லிம்கள் எவரும்; அஞ்சத்தேவையில்லை. தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். ‘ (2012.11.30 ஆம் திகதியன்று அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியின் இல்லத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தது.)
எதிர்ப்புக்களை பெரிது படுத்தத் தேவையில்லை…
02. ‘முஸ்லிம் மக்களுக்கெதிராக செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது சிங்கள மக்களிலுள்ள சிறுதொகையினரேயாவர். பெரும்பாலான சிங்கள மக்கள் இத்தகைய செயற்பாடுகளை விரும்பவில்லை. எனவே,இம்மக்களது எதிர்ப்புக்களை பெரிதுபடுத்தத் தேவையில்லை. ( 2012.12.20 ஆம் திகதியன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்தது.)
அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது…
03. ‘ தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைத்து மோதல்களை உருவாக்கி நாட்டை மீண்டும் கலவரம் நிறைந்த பூமியாக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. எனவே, இத்தகைய சூழ்ச்சியை முறியடிப்பதற்கு அனைத்து இன மக்களும் பொறுப்புணர்வுடன் அணி திரளவேண்டும்’ (2012.12.24ஆம் திகதியன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டுப் பிரசுரம் விநியோகத்தின் போது ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமர சிங்க தெரிவித்தது.)
இனங்களுக்கிடையில் பிரிவினையை தோற்றுவிக்கும் முயற்சி…
04. ‘முஸ்லிம்களும் சிங்களவர்களும் மிக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.இதே நேரம் முஸ்லிம்களுக்கு எதிராக சில அமைப்புக்கள் இனவாதப் பிரசாரங்களை மேற்கொண்டு இனங்களுக்கிடையில் பிரிவினையை தோற்றுவிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.இது நாட்டின் நலனுக்கும் பௌத்த தர்மத்தின் நற்பெயருக்கும் பொருத்தமானதல்ல.’ (2013.01.03 ஆம் திகதியன்று குருநாகல், இந்துல்கல் கொட சத்தாமோதய விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய தெலியாகொன்ன எஹிபஸ்ஸிகே பௌத்த விஹாரையின் விஹாராதிபதி வண. கித்தல்பே அரிய தம்ம ஹிமி தெரிவித்தது.)
கொள்கைப் போராட்டத்தின் அடிப்படைவாதிகள்…
05. ‘ கொள்கைவாத போராட்டத்தின் அடிப்படைவாதிகளே முஸ்லிம் மக்களது மனதை நோகடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். பௌத்த மதமானது இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஆதரிக்காது. (2013.01.11ஆம் திகதியன்று கண்டி லைன்பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தது.)
ஒற்றுமையை இல்லாமற் செய்வதற்கான சதி…
06. ‘நீண்ட காலமாக பௌத்த மற்றும் முஸ்லிம் மக்களிடையே இருந்து வரும் ஒற்றுமையை இல்லாமற் செய்வதற்காக சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுசம்பந்தமாக சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.’ (2013.01.17ஆம் திகதியன்று மாளிகா வத்தை இஸ்லாமிய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய ஜனாதிபதியின் பௌத்த விவகாரங்கள் சம்பந்தமான ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தது.’ )
பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை…
07. ‘பொது பலசேனா அமைப்பானது பௌத்த வழிமுறையில் செயற்படவில்லை. அது தேவதத்தனின் வழிமுறையில் செயற்படுகிறது’ (2013.01.31 ஆம் திகதியன்று கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமசமாஜ கட்சியின் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தது.)
பௌத்த போதனையின்படி…
08. ‘பௌத்த தர்மப் போதனையின் படி புத்த பிக்கு ஒருவர் அரசியல் செய்வது அகௌரவமான விடயமாகும். அது அவர்களுக்குரிய பணி அல்ல. அரச நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவதும் ஆசி வழங்குவதுமே பௌத்த பிக்குவின் கடமையாகும்’ (2013.02.02 ஆம் திகதியன்று அஸ்கிரிய மஹா நாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித தேரர் தன்னை சந்தித்த பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் தெரிவித்தது.)
அபாயகரமான நிலைமை தோன்றலாம்…
09. ‘முஸ்லிம் மக்களுக்கெதிரான எதிர்ப்புக்களும் அடக்கு முறைகளும் நிறுத்தப்படாது விட்டால் அல்கைதா உள்ளிட்ட முஸ்லிம் இயக்கங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் அபாயகரமான நிலைமை தோன்றலாம்.’ (2013.02.03 ஆம் திகதியன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது தம்பர அமில தேரர் தெரிவித்தது.)
இடமளிக்கப் பொவதில்லை…
10. ‘இனவாதம் மற்றும் மதவாதம் முதலானவை இலங்கையில் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என்றும் சிங்கள, தமிழ்,முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஒன்றாகவே வாழ வேண்டும். இனரீதியாக நாட்டை பிளவுபடுத்துவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.’ (2013.02.04 ஆம் திகதியன்று திருகோணமலையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின வைபவத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தது.)
எவ்வித உண்மையும் இல்லை…
11. ‘முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்து வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இதுவரை மேற் கொள்ளப்பட்டுள்ள சனத்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களது சனத்தொகை சிங்களவர்களின் சனத்தொகையைவிட அதிகரித்துள்ளதாக எங்கும் காணமுடியவில்லை.’ (2013.02.05 ஆம் திகதியன்று கண்டி, உடுநுவர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தது.)
உடனடியாக நிறுத்தி…
12 ‘ நாட்டில் மதபேதங்களை ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்தி,நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வு கடடியெழுப்பப்படல் வேண்டும். அதன்போதே நாட்டின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத் தன்மையைப் பாதுகாக்க முடியும். ‘(2013.02.09 ஆம் திகதியன்று கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தது.
ஹலால் வேண்டாம் என்றால் சும்மா இருங்கள்…
13. ‘ ஹலால் வேண்டாம் என்றால்; சும்மா இருங்கள். உங்களை கழுத்தில் அழுத்திப்பிடித்து யாரும் அதனை உங்களக்கு ஊட்டப் போவதில்லை. ஹலால் ஒரு நல்ல விடயமே. ஹலால் மற்றும் ஹராம் என இரண்டு விடயங்கள் உள்ளன. இவை அனைத்து மதங்களிலும் உள்ளவையே.’ (2013.02.10 ஆம் திகதியன்று தம்புள்ள நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜே.வி.பி யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தது.
தலிபான் நிகாய…
14. ‘ முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் பொது பல சேனா அமைப்பை நான் ‘தலிபான் நிகாய’ யாகவே அடையாளம் காணுகின்றேன். பொது பல சேனாவின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறும் வேளையில் இலங்கை முஸ்லிம்கள் பொறுமையாக இருப்பதைப் போன்று சர்வதேசத்திலிருக்கும் கடும்போக்கு முஸ்லிம்களும் பொறுமையாக இருப்பாhகளென எதிர்பார்க்க முடியாது.இத்தகையதொரு நிலைமை தொடர்ந்தால் அவர்கள் தலையிட்டு இலங்கைக்கு அழிவை ஏற்படுத்தக் கூடும்.’ (2013.02.14ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தது.)
அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்….
15. ‘நாடு முழுதும் மதவாதத்தை தூண்டிவரும் பொது பல சேனா,சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும். மஹரகம நகரில் இவ்விரு அமைப்பக்களும் ஏற்பாடு செய்து வரும் ‘பொது சமலுவ’ ஒன்றுகூடலை நிறுத்த வேண்டும்.’ (2013.02.14ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் தினேஷ்  குணவர்த்தன தெரிவித்தது.)
கட்டுக் கதைகள்….
16. ‘தற்போது வெற்றி பெற்ற சிங்கள தேசிய வாதத்தின் வழிநடத்துனர்களுக்கு அதனை தொடராக நிலைபெறச் செய்யவும் அதனை முன்னெடுத்துச் செல்லவும் புதியதொரு எதிரியொன்று தேவையாகவுள்ளது. முஸ்லிம்களும் அவர்களது கலாசாரமும் சிங்கள தேசிய வாதத்தின் எதிர் அடையாளம் என்பதை நிறுவுவதற்கான கட்டுக் கதைகளை முன்னெடுப்பது அதன் விளைவாகவேயாகும்.’ (சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க எழுதிய கட்டுரையில் தெரிவித்தது. இக்கட்டுரை மீள்பார்னையில் 2013.02.19ஆம் திகதியன்று பதிவேற்றப் பட்டிருந்தது.)
முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்….
17. ‘ அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்து இந்த அரசாங்கம் இலங்கைவாழ் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.’ (2013.03.02 ஆம் திகதியன்று(செய்தி) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தது.)
அநீதிக்கு இடமில்லை.
18. ‘ நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எனக்கெதிராக செயற்பட்ட சில பிக்குகளே முஸ்லிம்களுக்கெதிரான சூழ்ச்சியின் பின்னால் உள்ளதனை உணர்கின்றேன். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் இதன் பின்னால் உள்ளதனை நான் அறிவேன்’ (2013.03.01ஆம் திகதியன்று பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போது அவர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெரிவித்தது.)
மத அடிப்படைவாதிகள்…
19. ‘ மத அடிப்படைவாதிகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஏனைய மதத்தவர்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றனர். இத்தகையவர்கள் மத ஒழுக்கங்களையோ மத தலைவர்களின் கருத்துக்களை பின்பற்றுவதில்லை.’ (2013.03.02 ஆம் திகதியன்று பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மத சமத்துவ மாநாட்டில் பேசும் போது கம்புருகமுவ வஜிர தேரர் தெரிவித்தது.)
இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில்…
20. ‘ சிங்கள -முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு உதவியுடனேயே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஹலா ல் விடயம் எமது மூதாதையர் காலம் முதல் இருந்து வருகிறது. ஹலால் மூலம் அன்று அவர்களுக்கு ஏற்படாத பிரச்சினை இன்று நமக்கு மாத்திரம் எவ்வாறு ஏற்படும்? எனவே, இது விடயத்தில் இளைஞர்களாகிய நாம் கவனமாக செயற்படவேண்டும்.’ (2013.03.02 ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ பிரதி அமைச்சர் டபிள்யூ பீ. ஏக்கநாயக்க தெரிவித்தது..)
பொய்ப்பிரசாரங்கள் நிறுத்தப்டவேண்டும்…
21. ‘இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்ப்பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும்.’ ( 2013.03.10 ஆம் மன்னாரில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசிய பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மோவின் சில்வா தெரிவித்தது.)
எனக்கு ஹலால் தேவை…
22. ‘ எனக்கு ஹலால் தேவை. நான் காலம் காலமாக ஹலால் உணவுகளையே உண்கின்றேன். உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் ஹலால் உணவில் சேர்ப்பதில்லை. இதை நீங்களும் விரம்பினால் உண்ணலாம்.’ (2013.03.11ஆம் திகதி மாவனல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய கிராமிய அலுவல்கள் தொடர்பகான சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தது.)
பொது பலசேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத்தலைவர்கள் அல்லர்…
23. ‘பொது பல சேனாவில் உள்ளவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மடியாது.’ ( 2013.03.13 ஆம் திகதியன்று ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தது. )
ஜேர்மனியிலிருந்து உதவி…
24. ‘ ராஜபக்ஷ அரசின் அனுமதியோடு அவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த நவீன அட்டூழியக்கும்பல் வெளிநாட்டவரிடமிருந்தோ அரசியல் வாதிகளிடமிருந்தோ அரசிடமிருந்தோ எந்தவிதமான உதவி ஒத்தாசையும் பெறுவதில்லையென சவால் விடுக்கின்றனர். எனினும் காலியிலுள்ள அவர்களது நிலையத்திற்கு ஜேர்மனியிலிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன.’ 2013.03.17 ஆம் திகதிய ‘ராவய’ பத்திரிகையில் குசல் பெரேரா எழுதிய கட்டுரையில் தெரிவித்தது.)
சட்ட நடவடிக்கை…
25. ‘ நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக எவராவது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போதும் தயங்கமாட்டேன். நான் அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்தேன். அப்பிரதேசத்திலுள்ள சில பௌத்த புனித சின்னங்களை அங்கு வாழும் முஸ்லிம்கள்தான் பாதுகாத்துள்ளனர். அவற்றை அவர்களே பௌத்த தேரர்களிடம் வழங்கியள்ளனர்.’ ( 2013.03.29 ஆம் திகதியன்று பேருவளை,சப்புக்கொட சிறி மஹா விஹாரையை (புனரமைத்து) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தது.)
இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு இல்லை…
26. ‘ இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கோ அல்லது சிறுபான்மை மக்களுக்கோ பாதுகாப்பு இல்லை. முஸ்லிம்களுக்கெதிராக இன்று பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பும் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதல் சம்பந்தமாக கண்டன அறிக்கையொன்றை வெளியிடுமாறு அரசாங்கத்தைக் கோரினோம்.ஆனால் அரசாங்கம் கண்டன அறிக்கையை வெளியிடவில்லை.’ (2013.03.30 ஆம் திகதியன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் வை.எம்.சி.ஏ முக்கியஸ்தர்களை சந்தித்தபோது தெரிவித்தது.)
கோதாபாய உதவி…
27. ‘ பொது பல சேனா என்னும் அடிப்படைவாத அமைப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ உதவி புரிந்து வருகின்றார்.’ ( 2013.03.31 ஆம் திகதியன்று(செய்தி) தென் மாகாண சபையின் சிறி லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தது.)
அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெறுவது…
28. ‘ மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம். நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளின் தலைமைப் பீடங்கள் இனவாதப் பிரச்சாரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கவேண்டும்.’ (2013.04.01 ஆம் திகதியன்று ஏகாதிபத்தியத்திற்கெதிரான மக்கள் இயக்கத்தின் இணை ஏற்பாட்டாளர் கொழுப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தது. )
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்க மிக்கது…
29. ‘ முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்க மிக்கது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்ற பெண்களை பார்ப்பது ஹராம்,வட்டி எடுப்பது ஹராம். இவை நல்ல விடயங்கள். ஹராம ஹலால் என்று பேசிப் பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்றவேண்டும்.’ (சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹினுபலாக வஜிர சிறி நாயக்க தேரர் தெரிவித்தது. ( 2013.04.06ஆம் திகதி பதிவேற்றப்பட்ட விடிவெள்ளி இணையச் செய்தி)
பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது…
30. ‘ இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற போதிலும் ஏனைய இன மத சமூகங்களின் நம்பிக்கைகள் ஒடுக்கப்படகூடாது. நாட்டின் ஒரு பகுதியினர் அல்லது சில அமைப்புக்கள் சிங்கள பௌத்த கடும்போக்குவாதத்தை நிலைநாட்ட முயற்சித்தால் அது பாதக நிலைமைகளையும் பிரிவினைவாதத்தை தூண்டக் கூடிய வகையிலும் அமையும்’  (2013.04.09ஆம் திகதியன்று முன்னாள் சிரேஷ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தின் போது தெரிவித்தது.)
அமெரிக்க ஊடகங்கள் கூறுவது பொய்யான தகவலாகும்…
31.’ இலங்கையில் அல்- கைதா செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுவது பொய்யான தகவலாகும். இத்தகவலானது எமது நாட்டில் பிரச்சினை ஒன்றை தோற்றுவிக்கும் அரசியல் நோக்குடன் தெரிவிக்கப்பட்டதாகும்.’ (2013.04.18 ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமர சேகர தெரிவித்தது.)
***
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger