இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதன் பின்னால் பொதுபலசேனா எனும் தேசிய வாத குழு செயற்படுவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் நேற்று வெளியிட்ட 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில் இலங்கையின் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் பகுதியிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை தொடர்பில் ஆராயும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2012 ஆம் ஆண்டில் மத சார்பான வன்முறைத் தூண்டல்கள் அதிகரித்துள்ளன. குறித்த ஆண்டில் மட்டும் இது தொடர்பிலான 52 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கிறிஸ்தவ மதஸ்தலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதனை விட முஸ்லிம்களின் பிரதேசங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. பெளத்த தேரர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தம்புள்ளை நகரில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹிந்துக்கள் தொடர்பிலும் இவ்வாறான வன்முறைகள் பதிவாகியுள்ளன.
இதுவரை இவ்வாறான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இவ்வாறான மத ரீதியான பிரச்சினைகள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனை பொதுபலசேனா என்றதேசியவாதக் குழு அரங்கேற்றுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுபலசேனா என்ற குறித்த அமைப்பின் பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் (பெளத்த இராணுவம்) எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் எம்மை தொடர்பு கொண்ட பொதுபலசேனாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டிலந்த விதானகே, குறித்த அறிக்கையின் குற்றச்சாட்டை மறுத்ததுடன் அதற்கெதிராக முறைப்பாடு செய்யப் போவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment