டீலா நோ டீலா ?


குனூத்ஓதல் நிறுத்தம் தொடர்பான அகில இலங்கை ஜம்பியத்துல் உலமாவின் அறிவித்தல்  மீண்டும் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   இந்த அறிவித்தலானது பொதுபல சேனாவினுடனான சந்திப்பின் பின் வந்ததென்பது  இந்த குழப்பத்தை  மேலும்  குழப்பமாக்கியுள்ளது.  ஆக முஸ்லிம்களுக்கு மார்க்க விடயங்களில்(?) தலைமை தாங்கி அவர்களை வழி நடத்துவோராகத் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள், அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இப்போது மக்களிடம் மறைமுகமாக அனுமதி கேட்பவர்கள், மீண்டும் பிழையொன்றை செய்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

ஹலால் உணவு எதிர்ப்பானது கடும்போக்கு சிங்களவருக்கு மத்தியிலே பொதுபல சேனாவுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜ.உமாவுக்கு அதுவே ஒரு பெரிய தலையிடியாக மாறியது என்றாலும் அது தொடர்பாக ஏதாவது காத்திரமாக செயவார்கள் என்ற முஸ்லீம்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்தெறிந்தது போல் திடீரென்று தாம் உள் நாட்டு ஹலால் சான்றிதழ் வழங்கலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தது மீசையில் மண் ஒட்டாதநடவடிக்கையாக பொதுவாக பார்க்கப்பட்டாலும், அது ஒரு ராஜதந்திர ரீதியினால பின்வாங்கலாகக் காட்டிக் கொள்ளக் கூடிய மரியாதையான செயல் என்ற வகையில்  ஜ.உ ஆறுதல் அடையக் கூடிய நிகழ்வாகவும் பாக்கக் கூடியதே.  ஆனால் அவர்களின் இந்த குனூத்அறிக்கையானது அவர்கள்  தம் அனுபவத்தில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
பொதுபல சேனாவின் எழுச்சி முழு சிங்கள இனத்தின் முஸ்லிம்களுக்கு அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான எழுச்சி என்றில்லாவிட்டாலும் அது சிங்கள மக்களிடையே நியாமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதை மறக்கமுடியாது. எனவே மூட்டப்பட்ட தீ என்றோ ஒரு நாள் கனன்று எரியும் என்பதை  நாம் புறந்தள்ளிவிடவும் முடியாதுள்ளது.
இதன் பின்புலம் எது என்பதில் எமக்கு பிரச்சினைகள் இல்லாத போதும் அரசாங்கமும் அரசாங்கத்துடன் ஒத்தூதும் அல்லது எதற்கெடுதாலும் மூலங்களை வெளி நாட்டில்  தேடும் நம்மவர்களும்  நடைபெற்றுக் கொண்டிருந்த  விடயங்களில் வெளி நாட்டு சக்திகளின் கையுள்ளதாக கூறி தமக்குதாமே நல்லபிள்ளை பட்டம் சூட்டிக் கொண்டனர். ஆனால் விடயங்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டன. இதில் முதலாவது பாதுகாப்பு செயலரின் பொதுபல சேனா காரியாலய திறப்பு வைபவம். இரண்டாவது பெ(f)ஷன் ப(b)க்தாக்குதல் சம்பவம்.  இறுதியானது  ஞானசார தேரரின் வெளி நாட்டு பயணம் என்பனவாகும்.
புலிகளின் அழிவுக்குப் பின் பாதுகாப்பு செயலரை மீறி இலங்கையின் ஒரு துரும்பும் அசைய முடியாது என்ற பிரமை உருவாக்கப்பட்டது. அதன் ஒத்திகையாக கிறீஸ் யக்காஅமைந்ததும் அதன் பிரதிபலிப்பாக ஒரு பொலீஸ் உத்தியோகத்தர் உயிரழிக்க நேரிட்டதும் அனேகர் அறிந்ததே. ஆனால் கிறீஸ் யக்காவின்  பயமுறுத்தல் உச்சக் கட்டத்தை அடைந்தபோது பாதிக்கப்பட்டவருக்கு சொல்லப்பட்ட செய்தியான மக்கள் வீணாக பயங்கொள்ளத் தேவையில்லை, பொறுப்பானவருக்கு தெரியப்படுத்துங்கள்; அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள்என்பது இப்போது பிரத்தியேகமாக முஸ்லீம்களுக் கெதிரான மதக் குரோத நடவடிக்கைகள் நாளுக்கொன்றாக நடந்த போதும்  அதே பாணியிலேயே அவர்களுக்கான, நடவடிக்கை ஏதுமற்ற, வெறும் வார்த்தை பாதுகாப்பாகவழங்கப்பட்டது. பொறுப்பானவர்கள் என்று கூறப்பட்டவர்கள் தங்களுக்குப் பொறுப்பாக இருப்பவரின் உத்தரவு இல்லாமல் அசைய மறுத்தார்கள் என்பது இங்கு  கவனிக்கத்தக்க நினோதமான நிகழ்வாகும்.
இந் சூழ்நிலையில்தான் பாதுகாப்பு செயலரின் பொதுபல சேனாவுக்கான கட்டிடத் திறப்பு அரசாங்கத்தின் மூடிய இன விரோத திட்டங்களை திறந்து காட்டியுள்ளது.  எந்த ஒரு விடயத்தை செய்தாலும் அதில் அடிப்படை நியாயம் ஒன்றிறுக்க வேண்டியது அச்செயலின் அல்லது அதை செய்த நபரின், நிறுவனத்தின்  நம்பகத் தன்மைக்கு மிக அவசியமானதாகும்.  பொதுபல சேனாவின் நடவடிக்கைகளுக்கு வெளி நாட்டு சக்திகள் காரணமாகின்றன என்ற குற்றச்சாட்டு அரசாங்கத் தரப்பில் இருந்து எழுமானால் அந்த உள், வெளி நாடு சக்திகளின் நடவடிக்கை அரசாங்கத்துக்கும் ஒட்டு மொத்த நாட்டுக்கும்  பாதகமாக அமையும் என்பது கண்கூடு. எனவே அதற்கு காரணமான பொதுபல சேனாவை கேள்வி பார்வை இன்றி தடை செய்வதை விட்டு விட்டு, அவர்களுக்கு  உத்வேகம் அளிக்கும் முகமாக அதுவும் சிங்கள கடும்போக்காளர் அதிகமாக வாழும் பகுதியில் அந்த அமைப்பின் கட்டிடமொன்றை திறந்துவைத்த தென்பது அரசியல் ரீதியில் அனாகரீகமான விடயமாகும். அதை மறந்து விட்டு தன் செயலை நியாப்படுத்த  ஆயிரம் காரணிகளை முன்வைத்தாலும் அவரின்   நம்பகத்தன்மை முற்றாக சேதகமாக்கப் பட்டுவிட்டது என்பதை தவிர வேறு முடிவுகளை நோக்கி யாரும் நகர முடியாது.
இன் நிலையில் தான் எதிர்பார்த்த ஒன்றுக்குப் பதிலாக பெஷன் பக்வடிவத்தில் வேறொன்று நிகழ்ந்தேறியது. மணியடித்து கலவரக்காரரை அழைத்த பெளத்த விஹாரை, கையும் மெய்யுமாக பிடிபட்ட காடைதனம் செய்யும் பிக்கு, வேடிக்கை பார்க்கும் பொலீஸ் படை என்று எல்லா விடயங்களும் உலக நாடுகளின் கண்களில் பட்டன. இதற்கு எதிரான பல பக்க முன்னெடுப்புகளின் விளைவாக உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் மென்மையான கண்டனங்கள் இலங்கை அரசாங்கத்தை நோக்கி வரவே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதாவது செய்தாக வேண்டும் என்ற  நிலையில்   முஸ்லீம் உதவி அமைச்சர் ஒருவர் ஊடாக  ஜானாதிபதி தலையிடுகின்றார்.
வெளிவந்த செய்தியின் பிரகாரம் பெஷன் பக் உரிமையாளருக்கு சொல்லபட்ட செய்தி இந்த விடயத்தை மேற்கொண்டு செல்ல வேண்டியதில்லை, இது ஜானாதிபதியின் உத்தரவு.என்பதாகும்.  இந்த உத்தரவினை தொடர்ந்து பெஷன் பக் உரிமையாளார் அமைதியடைந்துவிட்டார்.  நீதிமன்றமும் சின்ன எச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தது. சம்பவத்தை மறப்பதும், சம்பந்தப்பட்டோரை மன்னிப்பதும் பாதிக்கப்பட்டவரின்பால் பட்டது. ஆனால் இலங்கையின் குற்றவியல் சட்டம் இதற்கு அனுமதியளிக்கின்றதா என்று தெரியவில்லை.  எது எப்படி இருப்பினும்  இந்த விடயம் பெஷன் பக் உரிமையாளருடன் மட்டும் சம்பந்தப்படவில்லை என்பதுடன் ஒட்டு மொத்த சமூகத்தின் பொருளாதார அடித்தளங்களில் கைவைக்கும் அதிகாரத்தை பொதுபல சேனாவுக்கு அளித்துள்ளதை  நாம் மறந்துவிட முடியாது. ஆனால் சம்பவ இடத்துக்கு இரவோடிரவாக ஓடோடி வந்த நம் அமைசர்களின் ஆவேசமும் அந்த விஷேடஉத்தரவுடன் அடங்கிவிட்டது.  அதனால் என்ன எப்போதும் போலவே பலிகடாஒன்று தயார்  நிலையில் இருந்ததே.
ஆகவேதான் ஹலால் விடயத்தில் சம்பந்தபட்ட பொதுபல சேனாவுடன் பேசுங்கள் என்று எல்லாரும் கேட்டபோது, இவர்களுடம் என்ன பேச்சு.  நாம் அறிஞர்கள்இவர்கள் யார் நாம் பேச? என்று கேட்டவர்கள், இப்போது மட்டும் ஏன் பேச முடிவெடுத்தார்கள்? ஹலால் பிரச்சினை தற்காலிக முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் என்ன பேச சென்றார்கள்? அதன் பெறுபேறு என்ன? என்றெல்லாம் சொல்லாமல் குனூத்ஓதுவதற்கான தேவை இனி இல்லை என்றால் அதன் அர்த்தம் இனி பொதுபல சேனா முஸ்லீம்களின் பிரத்தியேக விடயங்களில் தலையிடமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்கள் கொடுத்தார்களா? விடுமுறை(?) கழித்து வரும் பொதுபல சேனாவின் ஞானஸார தேரர் மீண்டும் முஸ்லீம்களுடம் மோதினால் இபோது குனூத்ஓதும் சந்தர்ப்பம் திரும்பி வந்துள்ளது என்று ஜ.உ மீண்டும் அறிக்கை விடுமா? எல்லாமே மர்மம் தான்.
இதற்கிடையில்தான்  ”பெஷன் பக்உரிமையாளர் சமூகத்தை காட்டிக் கொடுத்துவிட்டதாக சமூகத்தைப் பற்றிய மிகக் கவலையில் கணப்படுகின்றார் நாட்டின் நீதி அமைச்சர்”.  இதற்கு முன் நாட்டில்  ”நீதி நிகழவேமறுக்கின்றது என்று கவலைப்பட்டவரும்  இதே நீதி அமைச்சர்தான்.  நீதி அமைச்சர் பதவி ஒரு துட்டு காசுக்கு பெறாவிட்டால், இந்த அரசாங்கத்தில்  நீதி  நிலைக்க  வாய்ப்பில்லை என்றால்  இவரல்லவா முதலில் அந்த பதவியை  தூக்கி எறிய வேண்டும். ஆகக் குறைந்தது  தானாவது  நீதியாக நடப்பதாக காட்டவேண்டும்.  அப்படி  நடவாததற்கு என்ன  காரணம்? இதுவும் மர்மம் தானா? அல்லது கிழக்கு தன் கையில் வரும் வரையில்  வீராப்பு பேச்சுகளுக்கான  இரகசிய பயிற்சி பெறுகிறாரா?
வெளி நாட்டு சக்திகளின் தூண்டுதலில் தான் பொதுபல சேனா இதுவரை காரியமாற்றியது என்றால் ஏன் அவர்கள் சந்தேகத்துக்குறிய அந்த வெளி நாட்டுக்கு இப்போது அனுப்பப்பட்டார்கள்? இரண்டு போயா தினங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் பொதுபல சேனா காணமல் போய்விடுவார்கள் என்று ஏனைய நிக்காயக்களின் தேரர்கள் சொன்னதும் பொதுபல சேனாவின் பிரச்சினைக்குறிய தேரரின் வெளி நாட்டுப் பயணமும் ஒன்றாக நடந்த தற்செயல் விடயங்களா?  அதுவும் மர்மம் தான்.
நாட்டின் அதி உச்சத் தலைமை பில்லிசூணியம், செய்வினை, சாஸ்திரம் என்பவற்றில் அதீத நம்பிக்கை கொண்டது என்பது  நாட்டு மக்கள் அறிந்ததே.  ஆகவே சுமார் இரண்டுமாத தொடர்ச்சியான குனூத்ஓதல் தலைமைக்கு உடல், மன ரீதியான அசெளகரியங்களை ஏற்படுத்தியுள்ளதா? என்பதும் மர்மமே.  இல்லாவிட்டால் பயம் நீங்கிவிட்டதுஎன்ற ஜ.உ மாவின் உறுதியான முடிவுக்கு வேறு என்ன காரணமாக அமைய முடியும்?
ஆகவே ஒரு புரிந்துணர்வுடனான தீர்வு எட்டப்பட்டுள்ளது. நீங்கள் இதை செய்யவேண்டும்  நாங்கள் இதை செய்கிறோம், ஆனால் எது எது பேசப்பட்டதோ அது வெளிவரக் கூடாதுஎன்ற டீல் (deal) ஒன்று நடந்தேறியுள்ளது.  இந்தளவுக்கு குனூத்தின் முக்கியத்துவம் சம்பந்தப்பட்டோரால் உணரப்பட்டுள்ள தென்றால் அது தொடர்ந்தும் ஓதப்படுவதை தடுக்க ஜ.உ வுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.  தெரிந்தோ, தெரியாமலோ ஜ.உ  ஜெனிவா சென்றதற்கு பொதுமக்கள் பொறுப்பெடுக்க முடியாது, அவர்கள் மாத்திரமே அதற்கான பொறுப்பை எடுக்கவேண்டும். காரணம் பொதுமக்களின் அங்கீகாரம் இல்லாமலே தமது  நீதியற்ற நாட்டுப்பற்றை காட்ட கப்பல் ஏறிச்சென்றனர். அங்கே அறபு மொழிப்பாடங்களும் நடத்தினர். ஆனால் இந்த வருட ஜெனிவா மாநாட்டுக்கு இவர்களை கூட்டிச்செல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஏன் யோசிக்க வில்லை? அல்லது அப்படியான அழைப்பு அவர்களிடம் இருந்து வந்திருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? எனவே பொதுமக்கள் தங்களுக்கான  ஆத்மீக பாதுகாப்பை தேடும் போது அதில் தலையிடும் அதிகாரமும் கொஞ்சம் கூட அவர்களுக்கில்லை என்பதை அவர்கள் சம்பந்தப்பட்டோருக்கு சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லாமல் எமக்கு குனூத்ஓதுவதை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள், கேட்பதும் அல்லது அதை அசட்டை செய்யாமல் விடுவதும்  நமது அறிவுக்கும், நமது சமூகம் சார்ந்த பொறுபிற்கும் உட்பட்டது. ஆகவே இந்த டீல்லுக்கு அப்பால் நாம் எதை செய்யவேண்டுமோ அதை செய்வது நம் சமூகத்துக்கான  நமது கடமை.
- முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger