-ஒலிந்தி ஜயசுந்தர
இலங்கை மின்சார சபை முன்வைக்கும் மின் கட்டண உயர்வுக்கான சூத்திரம் நியாயமானதாக இல்லாதுவிடின் மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயக்கத்தில் கிராம மட்ட நலன்புரி சங்கங்கள், நுண்பாக – நிதிப்படுத்தல் மற்றும் கூட்டுறவு சங்கங்கள், சுற்றாடல் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் என பல அமைப்புக்கள் உள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை புதிய மின் கட்டண சூத்திரத்தை அறிவிக்கும் என நம்பப்படுகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும்.
இந்த தீர்மானத்தை பொறுத்தே தேசிய மின் நுகர்வோர் இயக்கத்தின் சட்ட நடவடிக்கை அமையும் என இயக்கத்தின் ஆலோசகர் பந்துல சந்திரசேகர தெரிவித்தார்.
'குறைந்த கட்டணத்தில் அல்லது மானிய அடிப்படையில் யாருக்கு மின்சாரம் வழங்குவது என்ற கொள்கைத் திர்மானத்தை பற்றியும் நாம் அறிய வேண்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டார்.
'ரூபாவின் குறைந்து செல்லும் பெறுமதி, பெரும் திட்டங்களுக்காக பெற்ற கடன்களை அடைக்க வேண்டியிருத்தல் என பல பிரச்சினைகளை அரசாங்கம் எதர்கொண்டுள்ளது. இத்தோடு இலங்கை மின்சார சபை அடைந்துள்ள நட்டங்கள் என்பதையும் கருத்திற் கொண்டு மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படின் அது மக்களுக்கு பெரும் சுமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment