பாஸ்டன் மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரை அமெரிக்கப் பொலிசார் உயிருடன் பிடித்துள்ளனர்.
அமெரிக்க சரித்திரத்தின் மிகப் பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைகளில் ஒன்றாக 19 வயது சந்தேகநபர் ஸூகார் சர்னயெவ்வை தேடும் நடவடிக்கை அமைந்திருந்தது.
ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில் பதுங்கியிருந்த சரனயெவ்வை பொலிசார் பிடித்துள்ளனர்.
கொல்லையில் ரத்தம் சிந்தியிருந்த வழியாக வீட்டின் உரிமையாளர் சென்று படகின் மீது போர்த்தியிருந்த தார்ப்பாலின் விரிப்பை தூக்கிப்பார்த்தபோது காயங்களுடன் உள்ளே ஸூகார் இருந்திருக்கிறார்.
குண்டுப் பரிமாற்றத்துக்குப் பின்னர்தான் ஸூகாரைப் பொலிசார் பிடிக்க முடிந்துள்ளது.
செச்சென்ய பூர்வீகம் கொண்ட கொண்ட ஸூகாருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொலிசார் அவரைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
மாரத்தன் குண்டுவெடிப்பின் மற்றுமொரு சந்தேகநபராகிய ஸூகாரின் அண்ணன் தமெர்லன், பொலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருந்தார்.
மாரத்தன் போட்டிகளின் நிறைவுக் கோட்டுக்கு அருகில் சந்தேகநபர்களான இவர்கள் நிற்பது போன்ற படங்களை மத்திய புலனாய்வுப் பொலிசார் வெளியிட்டதிலிருந்து கிடுகிடுவென பல சம்பவங்கள் நடந்துள்ளன.
பல சரக்குக் கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலே சந்தேகநபர்களில் ஒருவர் இருந்ததை பொலிசார் பார்த்தனர்.
அந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
சந்தேகநபர்களாகிய சகோதரர்கள் இருவரும் கார் ஒன்றை திருடிச் சென்று தப்பிக்க முயன்றனர்.
அவர்களுக்கும் விரட்டிச் சென்ற பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்தான் தமர்லென் அடிபட்டு, அகப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
குண்டுவைத்தவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது என அதிபர் ஒபாமா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மாரத்தன் போட்டிகளின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்றியெழுபது பேர் காயமடைந்தும் இருந்தனர்.
Post a Comment