அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கைக் காவல்துறையினர் துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைதிகளை தடுத்து வைத்த காலப்பகுதியில் இவ்வாறு துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதைகளுக்கு எதிராக சட்டங்கள் காணப்பட்ட போதிலும், அவை அமுல்படுத்தப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதிகள் மற்றும் பிரஜைகள் துன்புறுத்தப்பட்டமைக்கான பல்வேறு சாட்சியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள இவ்வாறு சித்திரவதைகள் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி குருணாகல் நீதிமன்றம் பொல்பித்திகம காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சித்திரவதைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரில் ஆவணத்துடனும் ஆவணங்களின்றியும் வடக்கு கிழக்கில் படையினரும், காவல்துறையினரும் பொதுமக்களை கைது செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, படையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இதனால் புனர்வாழ்வுப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அமெரிக்க மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment