கடந்த சுமார் பத்து வருடங்களுக்கு முன் பர்தாவுக்கு எதிராக, “ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் மீதான அடக்கு முறையின் வடிவமே பர்தா “ என்ற தலைப்பில், “பதிவுகள்” என்ற இணையத்தில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையை இலங்கையில் பிரசுரமாகும் தினக்குரல், வீரகேசரி ஆகிய தினசரி தமிழ் பத்திரிகைகளும் வெளியிட்டன.
கடந்த 17.04.2004ந் திகதி தினக்குரல் பத்திரிகையில் ‘ஆணாதிக்க சமூகத்தின் பெண்கள் மீதான அடக்குமுறையின் வடிவமே ‘பர்தா’ அணியும் நடைமுறை’ என்ற தலைப்பில் றஞ்சி (சுவிஸ்) என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை பத்து நாட்கள் கழித்து வீரகேசரி நாளிதழ் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரையில் குறிப்பிடப்படிருந்த கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதன் பிரதி தினக்குரல் பத்திரிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும், அது இன்னும் பிரசுரமாகவில்லை.
இக்கட்டுரைகளுக்கு பதிலாக கீழ் வரும் இவ்வாக்கம் வெளியிடப்பட்டது, “நவமணி”, முஸ்லிம் குரல் ஆகிய பத்திரிகைகளில் வெளியான இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
பொய்யான குற்றச்சாட்டுக்களை இஸ்லாத்தின் மீது சுமத்தி, அவற்றை உண்மையென நிரூபிக்க பல வழிகளிலும் குற்றம் சுமத்தி பலர் சதி முயற்சி செய்கின்றனர். அவ்வாறு சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களுள் பர்தாவும் ஒன்று.
இஸ்லாம் பெண்களை பர்தா (ஹிஜாப்)வுக்குள் மூடிவைத்து கொடுமைப்படுத்துகிறது. பர்தா பெண்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுகிறது. பெண்களின் ஆடை விடயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட அதே சுதந்திரம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றனர். இதே தோரணையில்தான் மேற்குறிப்பிட்ட ஆக்கத்தை சுவிஸ் றஞ்சி என்பவரும் முன்வைத்துள்ளார்.
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம். ஆண்களுக்கு வழங்கப்பட்ட ஆடைச் சதந்திரம் போன்று பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் பெண்ணியவாதிகளே, அறிவுஜீவிகள் என்று தங்களைக் கூறிக் கொள்ள முற்படுபவர்களே நடுநிலையாக சிந்திக்க முன்வாருங்கள்.
இயற்கையில் பெண்கள் ஆண்களையும், ஆண்கள் பெண்களையும் கவரக் கூடியவர்களாகவே இறைவன் படைத்துள்ளான். ஆயினும் இருபாலாரினதும் இரசனை வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் இளமை, நிறம், அழகு, திரட்சி ஆகியவையே ஆண்களால் இரசிக்கப்படுகிறது. இதனால்தான் குறைந்தளவு ஆடையுடன் காட்சிதரும் பெண்களை ஆண்கள் இரசிக்கின்றனர். திரும்பத் திரும்ப பார்க்கின்றனர். காமக்கண் கொண்டு நோக்குகின்றனர்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் ஆண்மகன் அரைக் காட்சட்டையை அல்லது உள்ளாடையை மட்டும் அணிந்து வேலை செய்வான். இதே வேலையை உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி மேலாடை எதுவுமின்றி அரைக்காற்சட்டையுடன் அல்லது உள்ளாடையுடன் மாத்திரம் பணி புரியவோ, பலர் முன்னிலையில் காட்சிதரவோ உங்களைப் போன்ற பெண்ணியவாதிகளாலாயினும் அனுமதிக்கப்படுவதில்லை.
தன் மனைவியை சகோதரியை, தாயை பிறர் முன்னிலையில் இந்தளவு குறையாடையுடன் காட்சித்தர புத்தியுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் ஆண்களின் உடலுறுப்புகளின் கவர்ச்சியில் பெண்களின் இரசனை செல்வதில்லை. இதனால்தான் ஆண்கள் எந்தளவு குறையாடையுடன் காட்சிதந்தாலும் பெண்கள் அதனைப் பார்த்து இரசிப்பதில்லை. திரும்பத் திரும்ப பார்க்க வேண்டுமென்று அவர்கள் விரும்புவதுமில்லை. ஆண்களின் அழகையோ கட்டுடலையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. விருப்பமென்பது வேறு. இரசனை என்பது வேறு. ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் போன்றவை பெண்களின் நிர்வாண கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணத்தை வியாபாரமாக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதனை விளங்கலாம்.
‘ஹிஜாப், பர்தா’ எனும் அரபுப் பதங்களுக்கு திரை, மறைப்பு என்று பொருள். மேற்கூறிய நிலைமைகளை நோக்குமிடத்து ஆண்களின் உடலைவிட பெண்களின் உடல் கூடுதலாக மறைக்கப்பட வேண்டுமென்பதில் (பர்தா அணிய) இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அப்படியாயின், ஹிஜாபை அல்லது பர்தாவை முழு அளவில் இல்லையென்றாலும் ஓரளவிலேனும் எல்லோரும் ஏற்றுத்தான் இருக்கிறார்கள். அல்லது அனுமதித்திருக்கிறார்கள்.
மறைக்கும் அளவு எது என்பதில்தான் இஸ்லாத்திற்கும் மாற்றாருக்குமிடையே கருத்து வேறுபாடு உள்ளதே தவிர, பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல. ஏனெனில், ஆண்களுக்கு இருக்கும் அதேயளவு சுதந்திரத்தை இந்த ஆடை விடயத்தில் பெண்களுக்கு பெண்களால்கூட வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக, இஸ்லாம் பர்தாவுக்குள் பெண்களை அடிமைப்படுத்துகிறது. இஸ்லாமிய சட்டதிட்டங்களால் பெண்கள் அடக்கியொடுக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போடும் பெண் விடுதலையின் ஹீரோயின்களாக நீங்கள் குறிப்பிடும் தஸ்லிமா நஸ்ரீன் கூட இதுவரை எந்த இடத்திலும சமூகத்தின் மத்தியில் ஜட்டியுடனோ, மார்புச்கச்சையுடனும் காட்சிதரவில்லை என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும். பெண்களின் நிர்வாணத்தை வெளியில் காட்டித்திரிவதில்தான் பெண் சுதந்திரம் உள்ளதென்று கூறி பெண்களை போகப்பொருளாக அடிமைப்படுத்தும் சமூகத்தை நோக்கி இஸ்லாம் “ஓரு பெண்ணின் அழகை இரசிக்கவோ அனுபவிக்கவோ அவள் கணவன் மாத்திரமே உரித்துடையவன்” என்று கூறுகிறது.
இன்று நவநாகரிகம் என்ற பெயரில் பெண்களின் நிர்வாணத்தை வியாபாரமாக்கியதில் மட்டுமல்லாமல், அழகுராணிப் போட்டியென்று கூறிக்கொண்டு பகிரங்க மேடைகளில் பெண்களை வரிசைப்படுத்தி அங்கங்களுக்கு புள்ளிகள் வழங்கி பெண்களை போகப்பொருளாகவும் அடிமைகளாகவும் மாற்றும் ஈனர்கள்தான் ஹிஜாபை (பர்தாவை) மறுப்பார்களேதவிர புத்தியுள்ள சமுதாயம் பர்தாவை வலியுறுத்தவே செய்யும்.
ஆண் பெண் சேர்ந்து வாழும் சமுதாயத்தில் ஒழுக்கத்தை நிலைநாட்டவும் பெண்களின் கண்ணியம், மரியாதை, பாதுகாப்பு ஆகியவற்றைக், கருத்திற்கொள்ளும் சீர்திருத்தவாதிகள், சமூகத்தலைவர்கள், தொண்டர் நிறுவனங்கள், ஊடகங்கள் பொன்ற அனைத்துத் துறையினரும் கூடிய அக்கறையுடன் இது விடயத்தில் செயற்படுவது காலத்தின் தேவையாகும்.
இத்தேவையையே இற்றைக்கு சுமார் 1425 வருடங்களுக்கு முன்பு இஸ்லாம் பர்தா அல்லது ஹிஜாப் என்ற பெயரில் மனிதகுலத்துக்கு வகுத்துத்தந்துள்ளது. இது அறிவுபூர்வமானதும் புத்திக்கு எட்டக்கூடிய எளிமையானதும் நடைமுறைக்கு சாத்தியமானதாகும். அதனால்தான் இந்த நவீன உலகில் ஒழுக்கத்தை விரும்பும் பெண்கள் பர்தாவை முழு உலக அளவிலும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக இந்தியாவின் பிரபல பென் எழுத்தாளரான ‘கமலாதாஸ்’, ஷஸுமையாவாக தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்ட நிகழ்வைக் கூறலாம்.
மனிதகுலத்தின் ஒழுக்கவிதிகளை தெளிவாக உலகுக்கு எடுத்துக்கூறும் அல்குர்ஆன், பெண்களின் ஆடைவிடயத்தில் இவ்வாறு கூறுகிறது.
‘மேலும் நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக்கொள்ளட்டும். தங்களது வெட்கத்தலங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியே காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாகவே வெளியில் தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களது மார்புகள் மீது தங்களது முந்தானைகளைப் போட்டுக் கொள்ளட்டும். ‘ (அல் குர்ஆன்-24:31)
மேலும் குர்ஆன் கூறுகின்றது “பெண்கள் ஆண்களினதும், ஆண்கள் பெண்களினதும் ஆடைகளாவர்”. இது விடயத்தில் நாம் உற்று நோக்குகையில், ஆடையானது மனிதனின் வெட்கத்தலங்களைக் காக்க மனிதனால் பயன்படுத்தப்படும் முக்கிய சாதனமாகும். அதனால்தான் பெண்களின் மானத்தைக் காக்கும் கேடயமாக ஆண்களையும் ஆண்களின் கட்டுப் பாட்டை வலியுறுத்த பெண்களையும், இங்கே இறைவன் ஆடையாக சித்தரிக்கிறான்.
இறைவனது படைப்பில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றாலும், அவரவர் உடலியல் நிலைகளுக்கேற்ப சில ஒழுக்க விதிகளையும் இறைவன் வகுத்துள்ளான். குறிப்பாக ஆண்கள் உடல் வலிமை மிக்கவர்களாகவும் மனோதிடமுள்ளவராகவுமே இறைவனது படைப்பில் காணக்கூடிய அதேவேளை பெண்களானவர்கள் நளினமிக்கவர்களாகவும் மென்மையானவர்கள்களாகவுமே உள்ளார்கள். இறைவனது படைப்பில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்றாலும், அவரவர் உடலியல் நிலைகளுக்கேற்ப சட்டதிட்டங்களை வகுத்துத் தந்துள்ளது.
ஒரு தாய் தன் இளவயதுடைய மூத்த பிள்ளைக்கு பிரியாணி உண்ணக் கொடுக்கும் அதேவேளை குழந்தைப் பருவத்திலுள்ள இளைய பிள்ளைக்கு அதே உணவை உண்ணக் கொடுப்பதில்லை. இதற்கெதிராக யாரும் போர்கொடி தூக்குவதும் இல்லை. விமர்சிப்பதுமில்லை. காரணம் இதை நாம் அநீதியென்று சொல்லாமல் கரிசனை என்கிறோம். அதேபோல்தான் இந்த ஆடை விடயத்தில் பெண்களுக்கென்று சில ஒழுக்கவிதிகளை இஸ்லாம் வகுத்துள்ளது.
பெண்கள் என்ற கண்ணியமான பொக்கிஷத்தை பாதுகாப்பது ஆண்களின் கடமை என்ற உயரிய சிந்தனையை வலியுறுத்தவே இறைவன் “ஆண்கள் பெண்களின் ஆடைகள்” என்று கூறி, ஆண்கள் கட்டுக்கடங்கி சமூகத்தில் பெண்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஒரு பெண்ணை இரசிக்கவோ, அனுபவிக்கவோ தனது கணவனே பூரண உரித்துடையவன் என்று கூறுவதோடு, “பெண்கள் ஆண்களின் ஆடைகள்” என்றும் கூறி ஆண்களின் வெட்கத்தலத்தையும், உணர்ச்சிகளையும் வழிகேடுகளிலிருந்து இஸ்லாம் பாதுகாக்க விழைகின்றது.
றஞ்சி (சுவிஸ்) குறிப்பிட்ட ஆக்கத்தில் இவ்வாறு கூறுகிறார் “மரணப் பிடியில் உரிமைக் குரல் கொடுத்த தஸ்லீமா நஸ்ரீன் தனது நாட்டுப பெண்களுக்காக உரிமை கோரியமைக்காகவும் மதவாத அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர். அத்துடன் அவர் ‘லஜ்ஜா’ என்ற நூலையும் எழுதியுள்ளார். அதில் மதங்களின் பெயரால் பெண்களை அடக்கி அவளை எந்தவித மதிப்புமற்றவளாக்கி, முக்காடு அணிதல் (பர்தா) கல்வி, தொழில், அரசியல் ரீதியான பாகுபாடு (பங்களாதேஷ் தொடர்ந்து இரண்டு பெண் பிரதமர்களைக் கொண்ட நாடு என்பது வேறு விடயம்) என ஒடுக்குமுறைகற் தொடர்கின்றன என்றும் கூறுகின்றார்” என்று எழுதியுள்ளார்.
‘தஸ்லீமா நஸ்ரீன்’ என்பவருக்கு மரண தண்டனை கொடுத்தமை விவாதத்திற்குரிய விடயமென்று குறிப்பிட்டவர், ‘லஜ்ஜா’ என்ற புத்தகத்தில் இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களான முக்காடு அணிதல், கல்வி, அரசியல் போன்றவற்றில் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு போன்றவற்றை கண்ணுற்ற இந்த றஞ்சி (சுவிஸ்) குறிப்பிட்ட அதே புத்தகத்தில் குறிப்பிடும் பெண்களின் ‘கருப்பை சுதந்திரத்தை’ ஏன் காணவில்லையோ ?
தஸ்லீமா நஸ்ரீன் கூறும் கருப்பை சுதந்திரம் இதோ…
ஒரு பெண் தன் கருப்பையில் சுமக்கும் ஆணின் விந்து யாருடையதாக இருக்க வேண்டும் என்பதை அப்பெண்ணே தீர்மானிக்க வேண்டும், திருமணம் என்ற பந்தத்தால் அப்பெண்ணின் கருப்பை சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஓரு பெண் தான் விரும்பிய ஆணுடன் உறவு கொள்ள உரிமை கொண்டிருக்கிறாள். அதை மறுக்க எவரையும் அனுமதிக்க முடியாது.
போன்ற முக்கிய கருத்துக்களை எடுத்துக் கூறலாம். பெண் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தஸ்லிமா நஸ்ரீன் தனது படுக்கை அறையை பல ஆண்களுடன் பகிர்ந்து கொண்டதை அதே புத்தகத்தில் ஒப்புதல் கூருகின்றார். ஆக றஞ்சி சுவிஸிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
தஸ்லீமா நஸ்ரீனின் அகராதியிலுள்ள பெண் விடுதலையின் எடுகோள்களை தாங்களும் ஆதரிக்கிறீர்களா?
அப்படியாயின் தாங்கள் ஓர் ஆணாக இருந்தால் தங்களது மனைவியின் கருப்பையில் இன்னோர் ஆணின் விந்தை (இயற்கையான இடலுறவின் மூலம்) சுமக்க அனுமதி தருவீர்களா?
தாங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் மேற்படி கொள்கைகளைக் கடைபிடித்து நடைமுறைப்படுத்துவீர்களா?
தங்களது தாய், மகள், சகோதரி போன்றவர்களையும் இதே வழியில் செயற்படத்தூண்டுவீர்களா?
லஜ்ஜா என்ற நூலில் இவ்வாறு பல இழிவான கருத்துக்களைப் படித்துவிட்டு இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட படுதூறுகள் மாத்திரம் தங்கள் சிந்தனையில் நிலைக்கக் காரணம் என்ன? மேற்கத்தியத்தின் சீர்கேடான செயற்பாடுகளாலும், பொருளாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கயவர்களின் பிரசாரத்தினாலும் மேற்குறித்த விடயங்களில் (கருப்பை) உரிமை கோரும் ஒரு கூட்டமும் இப்புவியில் உருவாகிவிட்டதானது மனித குலத்தின் சாபக்கேடு என்றுதான் கூறவேண்டும். இவ்வாறானவர்களின் வெட்கங்கெட்ட ஆக்கங்களை ஊக்குவிக்கவே காத்திருக்கும் கயவர்கள் இன்னும் பல ‘லஜ்ஜா’ (வெட்கம்)களை உருவாக்குவார்கள்.
எந்தவொரு மதத்தினதும் கொள்கை கோட்பாடுகளை அறிவார்ந்த ரீதியில் தர்க்க ரீதியான கருத்துக்களுடன் விமர்சிக்க முற்பட்டால் அவற்றை ஜீரணிக்கவோ அல்லது மறுத்துக் கூறவோ ‘கருத்துச் சுதந்திரத்தை’ நாம் ஊடகங்களில் பிரயோகிக்கலாம். மாறாக குறிப்பிட்ட விடயங்களில் எந்தவித அடிப்படை அறிவுமில்லாமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பதானது புத்திக்கு ஏற்புடையதல்ல. குறிப்பாக றஞ்சி குறிப்பிட்ட ஆக்கத்தில் ‘முஸ்லிம் மதம்’ என்றே அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மதம் என்றொன்று உலகில் எங்குமேயில்லை என்ற அடிப்படை அறிவைக்கூட பெறாதவர் தான் இந்த றஞ்சி.
’முஸ்லிம் மதம்’ என்றொரு மதம் உலகில் இல்லை. இஸ்லாமிய மார்க்கம் என்றே உள்ளது. அது மனித குலம் முழுமைக்கும் சொந்தமான வாழ்க்கைத் திட்டமாகும். இஸ்லாத்தில் பிறப்பால், நிறத்தால், மொழியால், ஜாதியால் எவரும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாத்தின் சட்டங்கள் அறிவுக்கு பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான எளிமையானவை. கடந்த 14 நூற்றாண்டுகளில் மாற்றமேதும் நிகழாத, மாற்றத் தேவைப்படாதவை. மனிதனை தன்மானத்துடன் வாழச்செய்யும் இஸ்லாம் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வினைச் சொல்லித் தருகிறது.
மேலும் பர்தாவை மட்டுமல்ல, வேறெந்த அடிப்படைகளையும் அறிவாந்த ரீதியில் விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. அவ்வுரிமை அநாகரிகமான நடைமுறையாகவோ காழப்புணர்வு கொண்டதாகவோ இல்லாமல் நாகரிகமான நடுநிலைமையான விமர்சனங்களாக அமைந்தால் அவற்றுக்கு விடைசொல்ல அல்லது முகம் கொடுக்க இஸ்லாம் தயாராகவே உள்ளது.
Post a Comment