
இலங்கைத்தீவின் சிங்கள கடும்போக்குவாதத்துக்கும் அதன் குத்தகைக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு நீண்டது. அதன் சில வடிவங்களாக சில பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னான சிஹல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பெயர்களை எல்லாம் பின்தள்ளி, தற்போது பொது பல சேனா, லக்பல சேனா, ஸ்வர்ண ஹன்ஸ, அந்த சேனா… இந்த சேனா… என புதிய புதிய வடிவடித்தில் பௌத்த மதவாதக் காளான்களின் பெயர்களே ஊடகப் பரப்புகளை நிறைக்க முனைகின்றன. இவ்வாறான அமைப்புக்களின் தினசரி ஊடக மாநாடுகளும், அறிக்கைகளும், பௌத்த மத காவல் மார்தட்டல்களும், துண்டு.. துக்கடா செய்தி அளவையும் தாண்டி அதிக முக்கியத்துவச் செய்திகளாகவும் வலம் வருகின்றன.
மேலோட்டமாக நோக்கினால் இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கைகளை மட்டுமே குறிவைத்து மேற்படி புதிய அமைப்புக்களின் நகர்வுகள் இருப்பதாகப் புலப்பட்டாலும், இதற்குள் ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பது புலப்படுகிறது. இலங்கைத்தீவில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மேற்படி அமைப்புகள் குதிகுதியெனக் குதித்தாலும், இதன் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல் வேறானது.
உலக அரங்கில் முனைப்புப் பெற்றுள்ள தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான பொறுப்புக்கூறலைத் திசைதிருப்புவது! மாற்று வழியூடாக ஒரு சிங்கள தேசியவாத அலையை உருவாக்குவது! மகிந்த சிந்தனையின்பால் விரக்தியுற்ற சிங்கள மக்களின் வாக்குவங்கியை மீண்டும் அதே அதிகார மையத்துக்குத் திருப்பி விடுவது! போன்ற பல மறைபொருள் நிகழ்ச்சி நிரல்கள் இதற்குள் அடங்கியுள்ளன.
‘கையிலே காசு வாயிலே தோசை’ என்பார்களே, அதேபோன்ற யுத்திக்குரியது இது!

மகிந்த, ஜயரட்ண், மைத்திரிபால சிரிசேன போன்றவர்கள் இவ்வாறு ‘இனங்களுக்கு இடையிலான ஐக்கியம்’ குறித்துக் கவலை கொள்வதாகக் காட்டிக்கொண்டாலும், சிங்களத்தின் பாதுகாப்புக் குறியீடு மட்டும் இந்த விடயத்தில் சற்று மெளனம் காக்கிறது. பல சேனாக்களின் விடயத்தில் கோத்தாவின் அழுத்தமான எதிர்க்கருத்துகள் எவையும் இதுவரை பதிவாகவில்லையென்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அவ்வாறாயின் ‘பல சேனா’ காவலர்களின் நகர்வுகளுக்கும், கோத்தாபயவின் அரசியல் கனவுகளுக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடுமா?
நிச்சயமாக! இலேசில் சட்டனெப் புறந்தள்ள முடியாத சில காரண காரியங்கள் இதற்குள் உள்ளன. குறிப்பாக ‘மகிந்த சிந்தனையின் ஆட்சியில்’ சலிப்புற்ற சிங்கள வாக்கு வங்கியை இன்னொரு வழியில் மீள் புத்துயிர்ப்புக்கு உள்ளாக்கி, அடுத்த பொதுத் தேர்தலையும் வெற்றிகொள்ளும் இலக்கு இதில் முக்கியமானது!
தற்போது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அரசியல் அநாதையாக நிற்கும் சரத் பொன்சேகா கூட, மகிந்த அதிகார மையத்தை வீழ்த்தும் ஊக்க சக்தி ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது எனக் கூறும் யதார்த்தமான செய்தியின் பின்னணியூடாக நோக்கவேண்டிய விடயம் இது!
சரத் பொன்சேக்காவின் மதிப்பீட்டினை ஒத்த மதிப்பீடுதான் யானைகளின் விடயத்தில் மகிந்த அதிகார உயர்மட்டத்துக்கும் உள்ளது. ஆயினும் தமது நீண்டகால ஆட்சியின் சலிப்பு, ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கிவிடக்கூடும் என் அச்சமும், தமிழ் மக்களை மையப்படுத்திய விடயங்களை முன்னிறுத்தி அனைத்துலகமும் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்க விரும்பும் என்ற யதார்த்தமும் இங்கு சில மாற்று உபாயங்களை உருவாக்குகின்றது.

இவ்வாறான ஒரு வாக்குவங்கியை உருவாக்கும் திராணி யானைகளுக்கு இல்லை. சிங்கள மக்களின் ‘பாதுகாவலர்’ தகுதிக்குரிய போட்டி அதனிடம் இருந்தாலும், தமிழ் மக்களுக்கு எதை வழங்க வேண்டும், எதை வழங்கக் கூடாது என் நிலைப்பாட்டில் சற்றேக்குறைய மகிந்த அதிகார மோதகங்களுடன், ஐ.தே.க. கொழுக்கட்டைகள் உடன்பாடு கொண்டிருந்தாலும், ‘யானைகளின் மேற்குலக முகம்’ அதன் பகிரங்கத் திராணிக்கு சவாலாகின்றது.
ஆசை உள்ளது ஆட்சி செய்ய, அம்சம் உள்ளது கழுதை மேய்க்க’ என்றொரு பழமொழி உள்ளதல்லவா? அதுபோல ஆகிவிட்டது ஐ.தே.க.வின் நிலை!
ஆகையால் இவ்வாறான பலவீனங்களை கணிப்பிட்டபடி, இலங்கையில் பௌத்த இருப்புக்கு ஆபத்து வந்துவிட்டதான கூக்குரலுடன் ‘பல சேனாக்கள்’ தயார்ப்படுத்தப்படுகின்றன.
‘பொதுபல சேனா’ என்பதன் தமிழாக்கம் புத்தரின் பலம்மிக்க படை என்பதாக இருந்தாலும், இங்கு அமைதியே உருவாகி நிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் புத்தரிடமிருந்து இந்தப் பலம் வருவதில்லை. மாறாக இலங்கைத்தீவின் படைத்துறை மற்றும் காவற்துறை அதிகாரம் தம்மிடமே இருப்பதாகக் கெக்கரிக்கும் முகத்திடமிருந்தே அது வருகிறது!
உண்மையில் பார்த்தால், பொதுபல சேனா அல்ல, ‘கோத்தா பல சேனாக்களே’ இவை! காக்கிச் சீருடைகளில் மட்டுமல்ல, காவி உடைகளிலும் தனக்கு ஆளுமை இருப்பதாக மறைமுகமாக கோத்தா காட்டுகிறார்.
இந்த நிலையில், மறுபுறத்தே இந்த ‘நெடியை’ மறைக்க, இனவாதம், மதவாதம் நாட்டில் இல்லையெனவும், பௌத்தர்கள் நாட்டில் வாழும் சகல மதத்தினருக்கும் முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ வேண்டும் என்றும் வாசனை வீச்சை மகிந்த போன்றவர்கள் பீய்ச்சியடிக்கின்றனர்.
இலங்கைத்தீவு அனர்த்தங்களுக்கு உள்ளான ஒவ்வொரு வேளையிலும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தது பௌத்த தேரர்களே என்ற புகழாரத்தை சூடியபடியே அலரிமாளிகை அனைத்துலகத்துக்கு இன ஐக்கியக் கதை கூறுகிறது.
வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதால், நாட்டுக்குப் பாதிப்பு உருவாகும் என்பதால், தமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்ற பலசேனாக்களின் அறைகூவலுக்கு மத்தியில், கோத்தாபய மேற்பார்வையில் மகிந்த அதிகார மையத்தின் ‘பிளான் B’ வெகுவாகவே மும்முரப்படுகிறது.
(தமிழ் வேல்ட்)
Post a Comment