டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15-ஆம் திகதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
பின்னர் கடந்த 17-ஆம் திகதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் அளித்தனர். இப்புகாரை அடுத்து அந்த சிறுமியை பொலிஸார் தயானந்த் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை அடுத்து சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி மெல்ல குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தில் உரிய நேரத்தில் கடமையை செய்யத் தவறிய டெல்லி பொலிஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லி பொலிஸ் தலைமையகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, புதுடெல்லியில் 144 பொலிஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment