புனர்வாழ்வு பெற்ற புலிகளின் 400 இளைஞர், யுவதிகள் தென்பகுதி வர ஏற்பாடு



Print Friendly
ltte.memபுனர்வாழ்வு பெற்ற புலிகளின் 400 இளைஞர், யுவதிகள் தென்பகுதி வர ஏற்பாடு- 
புனர்வாழ்வு பெற்று வரும் சுமார் 400 புலிகளின் முன்னாள் போராளிகள் தென்பகுதிக்கு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 26ம் திகதி முதல் 28ம் திகதி வரை மூன்று நாட்கள் கொழும்பு மற்றும் தென்பகுதியில் தங்கியிருக்கவுள்ள அவர்கள் பல்வேறு முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார் தெரிவித்தார்.
கொழும்பின் முக்கிய பிரதேசங்கள், காலி, மாத்தறை, தெனியாய, கதிர்காமம் பகுதிகளுக்கும், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கும் இவர்கள் விஜயம் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களில் நடைபெறவுள்ள கலை, கலாசார, விளையாட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந்தப் பிரதேசங்களில் வாழும் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் கலாசார, பாரம்பரிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எதிர்வரும் 25ம் திகதி ரயில் மூலம் வவுனியாவிலிருந்து புறப்படவுள்ள 400 புலிகளின் முன்னாள் போராளிகளும் 26ம் திகதி காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். இவர்கள் அங்கு வரவேற்கப்படவுள்ளனர்.
26ம் திகதி கொழும்பின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிடவுள்ள அவர்கள் 27ம் திகதி காலி, மாத்தறை, தெனியாய பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கும், கதிர்காமம் பிரதேசத்திற்கும் 28ம் திகதி அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள சமய, கலை, கலாசார நிகழ்வுகளிலும், தெனியாய தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி உட்பட அந்தந்த பிரதேச அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சதீஷ்குமார் தெரிவித்தார்.
புனர்வாழ்வு பெற்று வருபவர்களை ஏனைய மதத்தார்களின் கலைக்கலாசார பாரம்பரியம் தொடர்பிலான அனுபவங்களை பரிமாறிக் கொள்ளல் போன்ற நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இந்த சுற்றுப் பயணமும் ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எஸ். சதீஷ்குமார் மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger