கடும்போக்குவாதம் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு மட்டுமன்றில் பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுக்கும் கடும்போக்குவாதம் பாரியளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் கடும்போக்குவாதம் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் கள நிலைமைகளை அறிந்து கொள்ளாது, கண்மூடித் தனமாக கருத்து வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாதம் காரணமாக உலகமே இன்று பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த நாம் பல நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலனாய்வுப் பிரிவு, சுங்கப்பிரிவு, விமான நிலைய பாதுகாப்பு போன்றவற்றின் காரணமாக கடும்போக்குவாதத்தை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா பற்றி தாம் குறிப்பிடவில்லை எனவும், அவற்றை ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமது கருத்தை சரியாக புரிந்து கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முஸ்லிம் நாடுகள் ஆதரவளித்த விடயம் வேறு எனவும், முஸ்லிம் கடும்போக்குவாதத்தினால் உலக சமூகம் எதிர்நோக்கி வரும் பாதிப்பு குறித்தே தாம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குவாதம் பற்றியும் தாம் சுட்டிக்காட்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் கடும்போக்குவாததத்திற்கு முஸ்லிம் நாடுகளே பொறுப்பு என தாம் குறிப்பிடவில்லை எனவும், ரவூப் ஹக்கீம் இதனை பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம் அடிப்படைவாதம் உலகின் பல பகுதிகளில் வியாபித்துள்ளமை வெளிப்படையான உண்மை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment