Sep.
15 Comments Off
(செப்டம்பர் மாத அழைப்பு இதழின் ஆசிரியர்
கருத்து).
ஏகத்துவ தீபத்தை
இத்தரணியில் ஏற்றி வைக்கும் பணியில் காலத்துக்குக் காலம் பல நபிமார்கள்
முனைப்புடன் முயற்சித்திருப்பதை திருக்குர்ஆன் எமக்கு அழகுற எடுத்தியம்பிக்
கொண்டிருக்கிறது. இவ்வுலகில் பிரார்த்திப்பதற்கும்,
அறுத்துப் பலியிடுவதற்கும், உதவி
கோரப்படுவதற்கும், நோர்ச்சை வைப்பதற்கும், வாழ்வுக்கான
வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், வணக்கம் புரிவதற்கும், பக்திப்
பரவசத்தை வெளிப்படுத்துவதற்கும், அஞ்சப்படுவதற்கும், தலை
சாய்ப்பதற்கும் தகுதி வாய்ந்தவன் அர்ஷின் அதிபதி அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்!
அவன் மட்டும் தான் வணங்கப்பட வேண்டும். அவனுக்கல்லாத அனைத்து வணக்கங்களும் வேரடி
மண்ணோடு அகற்றப்பட வேண்டும். அவன் அருளிய வாழ்வொழுங்கில் அகிலத்தாரின் ஒட்டுமொத்த
வாழ்வும் வார்க்கப்பட வேண்டும் என்ற சத்தான கருத்துக்களை சமுதாய மன்றத்தில்
சமர்ப்பித்து, புறையோடிக்கிடந்த
புரட்டு வாதங்களையும், போலிக்கொள்கைகளையும், உளுத்துப் போன
சடங்கு சம்பிரதாயங்களையும் வேரறுக்கும் வேட்கையுடன் வேங்கயாய் செயற்பட்டனர்
உத்தமத் தூதர்கள்.
இறைத்தூதர்கள்
முன்னெடுத்த இவ்விமாலயப் பணியின் போது தடைக் கல்லாய் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம்!
தாராளம்! எள்ளி நகையாடல், எடுத்தெறிந்து பேசல், எதேச்சதிகாரப்
போக்கு, குண்டர்ப்படைத்
தாக்குதல், கொலை மிரட்டல், ஊர் விலக்கள், உயிர்ப்பலி, உதிரச் சிந்தல்
என்று உன்னதக் கொள்கையின் உயர்வுக்காய் உத்தமத் தூதர்கள் கொடுத்த விலைகள் கொஞ்சம்
நஞ்சமன்று.
சத்தியத்தை
எடுத்தியம்பும் சமர் களத்தில் சாத்தானிய சேனையிலிருந்தோர் சாமானிய மனிதர்களை
சத்தியவாதிகளுக்கெதிராய் அணிதிரளச் செய்ய பிரயோகித்த பிரதான அஸ்திரம் “தக்லீத் எனும்
கண்மூடித்தனமான பின்பற்றுதல்” ஆகும். காலா காலமாய் பற்றுறுதியோடு
பின்பற்றப்பட்டு வரும் சமூக மரபுகள், சடங்கு சம்பிரதாயங்கள், அறியாமைக்கால
ஊர் வழக்காறுகள் என்பவற்றை பின்பற்றாதீர்கள்! அல்லாஹ் இறக்கியதை மட்டும் ஆதாரமாய்
கொண்டு உங்கள் பாதச்சுவடுகளை அழுத்தமாய் வைத்து பயணியுங்கள் என்ற யதார்த்தத்தை
எடுத்துச் சொன்ன போது சமுதாய மக்கள் ஓங்கி முழங்கியது “இல்லை! நாம்
அல்லாஹ் இறக்கியதையோ நீர் சொல்லுவதையோ ஏற்க மாட்டோம்! எம் மூதாதையர்கள், எம் முன்னோர்கள், எம் பெரியோர்கள், எம் சமூகத்
தலைவர்கள் எதை சொல்கிறார்களோ அதை மட்டும் தான் பின்பற்றுவோம்!” என்ற “தக்லீத்” வாதத்தை தான்.
ஒவ்வொரு இறை தூதர்களும் இந்த எதிர்ப்பை சந்தித்தார்கள் என்பதை அல் குர்ஆன்
பின்வருமாறு அழுத்தமாய் கோடிட்டுக் காட்டுகிறது:
“அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று
அவர்களிடம் கூறப்பட்டால் “எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று
கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி
பெறாமலும் இருந்தாலுமா?” – (5 : 104),
(2:170), (5:104), (43:20-25), (21:54), (7:28)
அந்தந்த
சமுதாயங்களில் காணப்பட்ட வழிகேடுகளையும், சமூக அவலங்களையும் களையகற்ற முயலும் போது
ஒவ்வொரு நபியும் களத்தில் இமாலயச் சவாலாய் எந்த “முன்னோர்,
பெரியோர்,
தலைவர்கள்”
என்ற வாதத்தை எதிர் கொண்டார்களோ அதே வாதம்
இன்றும் ஏகத்துவ வாதிகளின் குரல் வளையை நசுக்குவதற்காய் பெயர் தாங்கி
முஸ்லிம்களால் முன்வைக்கப்படுவது ஆச்சர்யமாய் உள்ளது.
ஸ்ரீ லங்கா
தவ்ஹீத் ஜமாஅத் எந்த இடங்களில் எல்லாம் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளதோ அந்த
இடங்களில் எல்லாம் இந்த “தக்லீத்” வாதம்
எதிரொலிப்பதை பார்க்கலாம். அல்லாஹ்வினதும், அவன் தூதரினதும் கட்டளைகளை எடுத்துச்
சொன்னால் எம்மை மறுப்போர் எம்மை எதிர்க்க ஏவி விடும் விமர்சனக் கணை “நீங்கள் சொல்வதை
ஏற்க முடியாது! காரணம், இந்தக் கருத்துக்களை எம் முன்னோர்களில்
யாரும் சொன்னது கிடையாது. உத்தம ஸஹாபாக்களில் எவரும் இக்கருத்தை சொல்லவில்லை! நாம்
மதிக்கும் உலமாக்களில் எவரும் இது வரை சரி கண்டது கிடையாது! நாற்பெரும் இமாம்களில்
ஒருவர் கூட உங்களைப் போன்று சொல்லவில்லை! எமது மதிப்பிற்குரிய உலமா சபை இதனை
இதுவரை அறிவிக்க வில்லை! எமது ஜமாஅத் அமீர் சொன்னால் தான் நாம் ஏற்போம்! எமக்கு
எமது ஊர் வழமை தான் முக்கியம்!” என்பன போன்ற மௌட்டீக வாதங்களைத் தான்.
ஐம்பதுக்கு
மேற்பட்ட எமது கிளைகளில் நாம் எதிர் கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகளின்
பின்புலத்தில் இந்த “தக்லீத் சிந்தனை” பிரதான காரணியாக இருப்பதை பார்க்கலாம்.
மாதம்பை என்ற ஊரில் எமது அன்பர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகம்
செய்வதற்கு ஜமாஅதே இஸ்லாமி அன்பர்களை தூண்டியது ‘எமது ஜமாஅத் மட்டும் தான் சரி என்ற தக்லீதின்
தாக்கம் தான். நேகமை, மற்றும் சம்மாந்துறை என்ற ஊர்களில் பெருநாள்
திடல் தொழுகையை தடுத்து நிறுத்துவதற்காய் கல்லடி கலாச்சாரத்தில் ஈடுபடுமாறு
தப்லீக் அன்பர்களை தூண்டியதும் ‘எமது உலமாக்கள் சொல்வது தான் சரி என்ற ‘தக்லீத்’ சிந்தனை தான்.
பேருவளை மஹகொடை பள்ளிவாசலில் அத்து மீறி நுழைந்து இறை ஆலயத்தை தீயிட்டுக் கொழுத்தி, இரு உயிர்களை
காவு கொண்டு கொலை வெறித்தனத்துடன் தரீகா அன்பர்களை வெறியாட்டம் நடாத்தத்
தூண்டியதும் ‘எங்கள் ஷெய்ஹூ
நாயகம் சொன்னால் எதையும் செய்வோம்’ என்ற ‘தக்லீத்’ மாயை தான்.
இவ்வருட ஷவ்வால்
மாத தலைப்பிறை விவகாரத்தில் தெளிவான சாட்சிகளின் கூற்றை அப்பட்டமாய் ஏற்க மறுத்து, மனோ இச்சை
பிரகாரம் தீர்ப்பு வழங்கி, பெருநாளில் நோன்பு நோற்க வைத்த ஹராத்தை அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா செய்தது என்பதை தெட்டத் தெளிவாய் அறிந்தும் கூட, ஜம்இய்யதுல்
உலமா சரியாகத் தான் நடந்தது என்று நாக்கூசாது பலரை பேச வைத்ததும் இந்த உலமாக்கள்
சொன்னால் சரி தான் என்ற ‘தக்லீத்’ தோற்றப்பாடு
தான்.
கிரேண்ட் பாஸ்
பள்ளிவாசல் இனவாத காடையர்களால் தாக்கப்பட்ட போது,
‘உயிரே போனாளும் நாம் ஸூஜூது செய்த
அல்லாஹ்வின் ஆலயத்தை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம்’ என்ற உணர்வு
வேட்கையோடு வீராப்புப் பேசிய அன்பர்களை, நீண்ட தாடியுடனும், தொப்பி தலைப்பாகையுடனும்
சில ஜம்இய்யதுல் உலமாவின் உறுப்பினர்களும், பள்ளி வாசல் சம்மேளன சபை அங்கத்தவர்களும், பள்ளி
நிர்வாகமும் இணைந்து இனவாதிகளின் கோரிக்கைக்கு அடிபணிந்து ‘நாம் பள்ளி
வாசலை மூடி விட்டு பழைய பள்ளியில் தஞ்சம் அடைவோம். இது தான் சாணக்கியமான
செயற்பாடு!’ என்று
கோழைத்தனமான முடிவை அறிவித்தவுடன் தீப்பிழம்பாய் இருந்தவர்கள் எல்லாம்
பனித்துளியாய் உருகி ‘ஆமாம்! உலமாக்கள் சொல்லும் முடிவு தான் சரி என்ற வரலாற்றுத் துரோக முடிவுக்கு
இணங்கி பள்ளிவாசலை தாரை வார்ப்பதற்கும் இந்த ‘தக்லீத்’
மனோபாவம் உந்து சக்தியாய் இருந்தைப் பார்க்ககலாம்.
எதிர் காலத்தில்
இலங்கை வாழ் முஸ்லிம்களின் மார்க்க மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டுமானால் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இனவாதிகளோ இனவாத கட்சிகளோ அல்ல!
மாற்றமாக, முஸ்லிம்களின்
மனங்களில் ஆளமாய் வேர்பிடித்து ஆழ விருட்சமாய் வளர்ந்துள்ள ‘தக்லீத்’ எனும் உலமாக்கள், பெரியோர்கள், முன்னோர்கள், தலைவர்கள் மீதான
கண்மூடித்தனமான குருட்டு நம்பிக்கை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள
கடமைப்பட்டுள்ளோம். வெளியிலிருந்து எம்மை தாக்கும் எதிரியைவிட கூட இருந்து எம்
முதுகில் குத்தும் தக்லீத்வாதிகளே மிக ஆபத்தானவர்கள். நபிமார்களின் சரிதம் எமக்கு
உணர்த்தும் படிப்பினை இது தான். சிந்திக்குமா நம் சமூகம்?
Post a Comment