மரணவீட்டில் இருக்கின்றோம்: UNP, கல்லெறிவதால் இராஜினாமா; தயாசிறி



(பாராளுமன்றச் செய்தியாளர் அனுக்க பண்டார)
ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகரவின் அரசியல் மரண வீட்டிலேயே நாம் இன்று பங்குபற்றுக்கின்றோம் என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர உரையாற்றியதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தயாசிரி தன்னுடைய அரசியலில் குழியை வெட்டிக்கொண்டார். அவருடைய அரசியல் மரணவீட்டிலேயே நாம் பங்கேற்கின்றோம் என்றார்.
தயாசிறி இராஜினாமா;கல்லெறிவதாக குற்றச்சாட்டு
ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் ஆற்றிய விசேட உரையினை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து வட மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இதன்போது தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சிக்குள் இருப்பவர்கள் தன் மீது கல்லெறிவதாகவும் இதனாலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாகவும் தனது விசேட கூற்றின்போது தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒத்துழைக்கவில்லை என்றும் எதேச்சதிகாரத்தினால் கட்சி சீரழிந்து வருவதாகவும் இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 10 வருடங்களாக ஆட்சியிலிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 40 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் அவர், ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்ப முடியாது என்பதனால் ஜனநாயகத்தை தேடி போகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அமைச்சு பதவியை என்னால் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை.
வடமேல் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே போட்டியிடுவேன். கடந்த தேர்தலின் போது ஒரு இலட்சம் விருப்பு வாக்குகளை பெற்ற நான் இம்முறை தேர்தலில் எவ்வாறு வெற்றிபெறபோகின்றேன் என்பதனை எதிர்க்கட்சித்தலைவரினால் பார்த்துக்கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்கான முயற்சி கைகூடவில்லை, போராட்டம் பயனலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
jvpnews_tajasere
தயாசிறியின் வெற்றிடத்திற்கு நலின்
ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துக்கொண்டதையடுத்து அவருடைய வெற்றிடத்திற்கு நலின் பிரியந்த பண்டாரவை நியமிக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தயாசிறி ஜயசேகரவிற்கு அடுத்ததாக ஐக்கிய தேசியப்பட்டியலில் போட்டியிட்ட நலின் பிரியந்த பண்டாரவே கூடுதலான விருப்பு வாக்குகளைப்பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தயாசிறி ஜயசேகர ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 949 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger