(இந்தியா – பர்மா – இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை)
- அபூ ஸாலிஹா
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.
“மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்!” என்று இந்திய காவல்துறையும் ஐ.பி – யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு “ஆதாரமாக” இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு “இண்டியா ஃபார் ஹிந்துத்வா” என்ற பெயரிலோ “ஜெய் ஆர்.எஸ்.எஸ்” என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்!
பர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை!
இது போன்ற “முன்னறிவிப்புகள்” நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.
ஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்?
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை – மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும்,சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே!
ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க:http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terrorமற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)
நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx?265400)
எப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, “நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்!” என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்!)
சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம்
பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள்.
குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில்படுகொலை செய்யப்பட்டதற்கு “இந்து-முஸ்லிம் கலவரம்” என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், “இனச் சுத்திகரிப்பு” என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.
ஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள்! “ஆசையே துன்பங்களுக்குக் காரணம்” என போதித்து “உயிர்களைக் கொல்லாமை”யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்!
கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் “உயிர்களைக் கொல்லாமை” கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.
புத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், “அஸின் விராத்து” என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.
இந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே “பர்மாவின் பின் லேடன்” என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் “பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்” என்பதே.
பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.
அன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.
அத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:
- நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.
- நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.
- கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.
- அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.
- மதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.
- இஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.
மேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.
இத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.
சிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்!
969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
அன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.
(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video)
பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.
துறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.
“969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்!” எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.
இந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.
இந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

Post a Comment