போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் (மிகவும் பிரபல்யம் அடையாத காலத்தில்) இந்த தலைமைத்தும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொண்டாலும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக இவர்கள் வளர்ச்சியடைகின்றபோது தலைமைத்துவமானது விசேட பாதுகாப்பை வேண்டி நிற்பது பொதுவாக உலகமெங்கும் வழக்கத்தில் உள்ள ஒரு விடயமாகும். போராட்டத்தின் வெற்றி-தோல்வி என்பது அதிகளவில் இந்த தலைமைத்துவத்தின் சீரான இராணுவ மற்றும் அரசியல் வழிநடத்தலிலேயே அதிகம் சார்ந்து நிற்பதானது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் அவர்களின் எதிரியென கருதப்படுபவர்களின் பிரதான இலக்காக எப்போதும் இந்த தலைமைத்துவமே இருக்கும். சிலவேளைகளில் இந்த தலைமைத்துவம் அழிக்கப்பட்டால் போராட்டத்தை இலகுவில் முடிவுக்கு கொண்டு வரமுடியும் அல்லது பலமிழக்கச் செய்துவிடலாம் என அவர்கள் நினைப்பதே காரணமாகும்.
உலக வரலாறுகளில் காணப்பட்ட அதிகமான போராட்டத் தலைவர்கள் மற்றெல்லா விடயங்களை விடவும் தமது சொந்த பாதுகாப்பிற்கும் தம்மைச் சார்ந்த முக்கியமானவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளமையை நாம் காணலாம். சாதாரணமாக ஒரு நாட்டிற்குள்ளேயே தமது இலக்கை அடைந்துகொள்ள போராடிய போராட்டக் குழுக்களின் தலைவர்கள் முதல் உலகையே ஆட்டிப்படைக்கும் நோக்குடன் இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடங்கிவைத்த ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் வரை தமது
சுயபாதுகாப்பு விடயத்தில் அதிக நாட்டம் செலுத்தியுள்ளதை வரலாறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. பொதுவாகவே இவ்வாறான போராட்டக் குழுக்களின் வரலாற்றில் தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்கென்றே விசேடமான ஒரு படைப்பிரிவினர் அமைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக அதிகளவு நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர்களே இதற்காக தெரிவு செய்யப்படுவர். தலைமைத்துவத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அல்லது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களே பெருமளவிற்கு இவ்வாறு நியமிக்கப்படுவர். சிலவேளைகளில் வெளியாட்கள் அவ்வாறான பணிக்கு அமர்த்தப்படும்போது அவர்களது விசுவாசம் என்பது பலமுறை அவர்களுக்கு தெரியாமலேயே பரீட்சிக்கப்படுவது ஒரு போராட்ட மரபாகும். அதேபோன்றே அவ்வாறான போராட்டக் குழுக்களின் உளவுப்பிரிவினரின் செயற்பாடும் இருக்கும். இதனால் தனது சுயபாதுகாப்பை எப்போதும் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒரு தலைவனே சிறந்த ஒரு போராட்டத் தலைவனாக இருக்கமுடியும் என்பது ஒரு பொதுவான எண்ணமாகும்.
உலக வரலாற்றில் கூடவே இருந்தவர்களால் பல போராட்டத் தலைவர்கள் அழிக்கப்பட்டமையும் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் நிறையவே உண்டு. தலைமைத்துவ பதவி மோகம், தனிப்பட்ட பழிவாங்கல்கள் மற்றும் எதிரியினால் கிடைக்கும் நன்மைகள் என்பன இவற்றிற்கான நோக்கம் கருதிய காரணங்களாக பொதுவில் அமைகின்றன. இந்நிலைமை போராட்டத் தலைவர்களின் விடயத்தில் மாத்திரமின்றி நாடுகளின் தலைவர்களின் விடயத்திலும் பொருந்துகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
உதாரணமாக, யுத்தத்தின்போது ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுசைனும் அவரது படைகளும் அவரது சொந்த படைத்தளபதிகளாலேயே நேசப்படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்டமை வரலாறு அறிந்த உண்மையாகும். எனவே போராட்டத்தின் வெற்றி-தோல்வி என்பது அதனை வழிநடத்தும் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு என்பவற்றில் தங்கியுள்ளமை திண்ணமான வெளிப்படை.
ஏ
றத்தாள 3 தசாப்தங்கள் இலங்கையில் ஈழக் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக்கொண்ட பல்வேறு இராணுவ வெற்றிகளுக்குப் பின்னால் அதன் தேசிய தலைவராக கருதப்பட்ட பிரபாகரன் இருந்து வந்தார் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியாது.
அவருடைய இராணுவ வியூகங்கள், தீர்க்கதரிசனமான எதிர்வுகூறல்கள் மற்றும் முன்னிறுத்தல்கள், அவை தொடர்பான வழிநடத்தல்கள் என்பன விடுதலைப் புலிகளின் முன்னேற்றம் மற்றும் நோக்க நிறைவேற்றம் என்பவற்றிற்கான பிரதானமான காரணிகளாகப் பார்க்கப்படலாம். படிப்படியாக வளர்ச்சியடைந்த இந்த போராட்ட இயக்கத்தின் வெற்றிகளானவை ஒரு கட்டத்தில் உலகிலேயே முதல்தரமான போராற்றலும் இராஜதந்திர உபாயங்களும் கொண்ட ஓர் “பயங்கரவாத இயக்கம்” என்ற அடையாளப்படுத்தலுடங்கூடிய படிநிலைக்கு இவ்வியக்கத்தை உயர்த்தியது. எதுவிதத்திலும் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட முடியாத ஒரு இயக்கமாக இது சர்வதேச மட்டத்தில் சகலரையும் எண்ண வைத்தது. அப்பேற்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு வியூகம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது என்பதும்; அதன் மூலம் அவர் அடைந்து கொண்ட வெற்றிகளுக்கு பின்னணியிலிருந்த சவால்களையும் ஆராய்வதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
ஆனால் பிரபாகரன் உயிருடன் இருந்து யுத்தம் செய்த காலப்பகுதியில் அவருடைய பிரத்தியேக பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ‘பங்கர்கள்’ அல்லது ‘பதுங்கு குழிகள்’ அன்றில் ‘மறைவிடங்கள்’ பற்றியே இக்கட்டுரையின் பிரதான கவனம் செலுத்தப்படுகின்றது. “காற்றுப்புகாத இடங்களில் கூட விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினர் ஊடுருவிவிடுவர்” என்ற ஒரு கருத்து பொதுவாகவே அக்காலத்தில் இருந்துவந்தது. அதன் மூலம் விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவினரின் பலம்பொருந்திய சாதுரியங்களும் சாதனைகளுமே முன்நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த உளவுப்பிரிவினருக்குக்கூட சவாலாக அமைந்த ஒரு விடயமாகவே இந்த அமைப்பின் தலைவரின் பாதுகாப்பு இருந்து வந்துள்ளதையே அவரது பாதுகாப்பு மறைவிடங்களின் கட்டமைப்பும் அதன் நுட்பமான வடிவமைப்புகளும் பிரதிபலித்து நிற்கின்றன.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படும் வரை பிரபாகரனின் மறைவிடங்கள் பற்றிய சில யூகங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலைகொண்டிருந்தாலும்கூட அதனை நேரடியாகக் காணும் பாக்கியம் எவருக்கும் கிட்டவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தமட்டிலும்கூட, குறிப்பிட்ட ஒரு சுற்று வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு மாத்திரமே அதனை காணும் அல்லது சுற்றிப் பார்வையிடும் அல்லது அந்த இடங்களுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என நான் நினைக்கின்றேன். காரணம் அந்தளவு தூரம் அவை விடுதலைப் புலிகளின் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக நிர்ணயிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டமையே ஆகும்.
இறுதி யுத்தம் முடிவடைந்த சில மாதங்களின் பின்னர் விசுவமடுவில் அமைந்திருந்த பிரபாகரனின் ஒரு மறைவிடத்தையும், அதன் பின்னர் மிக அண்மையில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மற்றுமொரு மறைவிடத்தையும் சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவரை இலங்கையின் அரச ஊடகங்கள் மூலமாக அந்த மறைவிடங்களை பல முறை காணும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த மறைவிடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் எவ்வாறானதொரு உல்லாசமான வாழ்க்கையை கழித்துள்ளார் என்ற அடிப்படையிலேயே அவை பெருமளவுக்கு காட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவர் பயன்படுத்திய நீச்சல் தடாகங்கள், அதி சொகுசு வாகனங்கள், மற்றும் குளிரூட்டப்பட்ட மறைவிடங்கள் என்பனவே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தெரிவுகளாக அமைந்திருந்தன. ஆனால் அந்த ஊடகங்கள் காட்சிக்கு உட்படுத்திய அல்லது உட்படுத்த விரும்பாத சில விடயங்களும் அங்கு இருந்திருக்கின்றன என்பதை அங்கு விஜயம் செய்தவர்கள் உன்னிப்பாக கவனித்தால் அவதானித்திருக்க முடியும்.
எனவே அவர் பகலில் ஓய்வு எடுக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் அவரேதான் அவற்றை உள்ளே பூட்டிக்கொள்ள வேண்டும். தவிர, குளியலறையில் இருக்கும்போதும் அந்தரங்க ஆலோசனை அறையில் இருக்கும்போதும் இதே நிலைதான். இவைதவிர, ஒரேயொருவர் மாத்திரமே தங்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மறைவிடங்களில் அவரைத்தவிர வேறுயாரும் தங்கியிருக்க சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. அதிலும் புதுக்குடியிருப்பு மறைவிடத்தில் அதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கின்ற போதிலும் விசுவமடு மறைவிடத்தில் அதற்கான சந்தர்ப்பம் அறவே இருந்திருக்க முடியாது. இதற்கான சந்தேகத்திற்கு இடமின்றிய சான்று அங்கு போடப்பட்டிருக்கின்ற ஒற்றையாள் தூங்கும் கட்டில் ஆகும்.
அப்படியானால் அந்த இரும்புக் கதவுகளை உள்ளாலேயே அவர் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் என்ன? தான் பகலில் ஓய்வு எடுக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் யாரிடம் இருந்து அவருக்கு முதன்மையான பாதுகாப்பு தேவைப்பட்டது? இன்சுலினை உட்செலுத்தும் தேவைப்பாட்டிற்கு உட்பட்டிருந்த ஒரு நீரிழிவு நோயாளியான அவர் எந்நேரமும் ஆபத்தை எதிர்நோக்க முடியும். (விசுவமடு மறைவிட அறையில் அவருடைய கட்டிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்சுலின் கொள்கலன் இவருடைய உடல் உபாதையினை சான்றுபகர்ந்து நின்றது). இத்தகைய ஓர் சூழ்நிலையில், இயல்பாகவே குறித்த நோயின் மருத்துவ எதிர்வுகூறல் ஆபத்துக்களாக மூச்சுத்திணறலோ அல்லது மாரடைப்போ எற்பட்டிருந்தால் வெளியில் இருக்கும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் எவ்வாறு அவருக்கு உதவியிருக்க முடியும்? சிலவேளைகளில் அவர் உள்ளே இருக்கும் போது ஓர் தீவிர சிகிச்சைக்கான அவசியநிலை திடீரென ஏற்பட்டிருந்தால் அந்த இரும்புக் கதவுகளை டோசர்கள் கொண்டு தான் உடைத்து அவரை வெளியே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இத்தனை பின்புலங்களைத் தெரிந்து கொண்டும் அவ்வாறானதொரு ஆபத்தை அவர் எதிர்நோக்கியுள்ளார் என்றால் அந்த ஆபத்திற்கு அப்பால் இன்னொரு சக்திக்கு பயந்திருக்கின்றார் என்பது வெளிப்படையாகும். அப்படியானால் அந்த சக்தி எது என்பதுதான் இங்கு எம்முன் எழும் கேள்வியாகும்.
எனவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது பாதுகாப்பு மறைவிடத்தினுள் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் தன்னைச் சுற்றியிருக்கின்ற தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் மற்றும் தனது மிக நெருக்கமான தளபதிகள் தொடர்பிலும் ஒருவித அச்சத்திலும் முன் எச்சரிக்கையுடனும் இருந்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதாவது தனது பிரதான எதிரிகளிடமிருந்து (இலங்கை அரச படைகள்) தன்னைப் பாதுகாப்பது ஒருபுறமிருக்க, தன்னுடன் கூடவே இருந்த நம்பிக்கைக்குரியவர்கள் என கருதப்பட்டவர்கள் மீதும் அதிகம் சந்தேகமும் விழிப்பும் கொண்டிருந்தாரா?
இ
ன்னொருபுறமாக, இறுதி யுத்தத்தில் அவருடைய மரணம் சம்பவிப்பதற்கு முன்னர் நிலைகொண்டிருந்த கடைசியான மறைவிடம் என கருதப்படும் புதுக்குடியிருப்பு மறைவிடமானது அவரது வேறோர் தனிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாட்டினைக் கொண்டிருந்தமையை நாம் அவதானிக்கலாம். அதாவது நான்கு நிலக்கீழ் அறைகளைக் கொண்ட இந்த மறைவிடத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு சுரங்கப்பாதை செல்கின்றது. அந்த சுரங்கப்பாதையானது பிரதான மறைவிடத்தைத் தாங்கி நிற்கின்ற கட்டிடத்தின் பின்புறமாக சில மீற்றர்கள் தொலைவிலேயே தனது வெளியேறும் வாசலை கொண்டிருக்கின்றது. அப்படியானால் இங்கும் அதே கேள்வி எழுகின்றது அல்லவா? காரணம் தனது பிரதான எதிரியிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவரின் நிலக்கீழ் மறைவிடத்தை எதிரி நெருங்கும் முன்னர் ஏற்கனவே அந்த பிரதேசம் அவர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் அல்லவா? அப்படியானால் எவ்வாறு அவ்விடத்திலேயே உள்ள ஒரு வாசல் மூலம் தப்பிக்க முடியும்?
இந்த விடயத்திலும் முன்னைய வாதம் பொருந்திச் செல்வதனைக் காணலாம். அதாவது அவரது அந்த மறைவிடத்தை எதிரிகள் இலகுவில் நெருங்க முடியாது. அவ்வாறு நெருங்கும் நிலை ஏற்படுமானால் அதற்கு முன்பே அவர் அவ்விடத்தை விட்டு பாதுகாப்பாக வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட முடியும். அவ்வாறுதான் இறுதி யுத்தத்தின்போதும் வெளிச்சென்றிருந்தார். சிலவேளைகளில் விமானத்தாக்குதல் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பிரதான வாசல் வழியாக வெளியேற முடியாத அளவுக்கு அந்த வாசல் சேதமாக்கப்படும் போது அவர் இந்த அவசர பாதையினை பயன்படுத்தும் நோக்கமும் இருந்திருக்கலாம். ஆனால் இவைதவிர மற்றுமொரு முக்கிய காரணமும் அங்கு இருந்துள்ளதாகவே தென்படுகிறது. அதாவது சிலவேளைகளில் தன்னுடன் கூடவே இருப்பவர்களால் ஒரு ஆபத்து ஏற்படுமிடத்து அதிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னேற்பாடாகக் கூட இது அமைந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. காரணம் அந்த சுரங்கப் பாதை வெளியேறும் இடத்தில் இருபக்கமும் அவரது பாதுகாவலர்கள் இருப்பதற்கான பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் அவசர உதவியை பெறுவதற்கு இதுவே சரியான பாதுகாப்பு முறையாக கருதப்பட்டிருக்கலாம். எதிரியிடம் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் அந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதன் வெளியேறும் வாசல் குறைந்தபட்சம் ஒரு சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் அடர்ந்த காட்டினுள் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
(கலாநிதி எம்.எஸ்.அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்)

Post a Comment