வட மாகாணசபைத் தேர்தலின் போது அரசாங்கத்துடன் கூட்டணி சேராது -முஸ்லிம் காங்கிரஸ் / கற்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது / தேர்தலில் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் கோரவில்லை -ஐரோப்பிய ஒன்றியம்


வட மாகாணசபைத் தேர்தலின் போது அரசாங்கத்துடன் கூட்டணி சேராது -முஸ்லிம் காங்கிரஸ்
19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
17ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை இரத்து செய்யும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்வது அநீதியானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும், 19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில கடும்போக்குவாத சக்திகளின் தேவையற்ற அடக்குமுறைகள் குறித்து முஸ்லிம்கள் பொலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், காவல்துறையினர் அதனை கவனத்திற் கொள்ளத் தவறியுள்ளதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தேர்தலில் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் கோரவில்லை -ஐரோப்பிய ஒன்றியம்-
வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு இதுவரையில் அரசாங்கம் கோரவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்திடம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கோரப்படவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென அரசாங்கம் கோரினால் அது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கற்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது-
புத்தளம் – கற்பிட்டி பெரிய அச்சுவெலி கடலில் கேரள கஞ்சா மற்றும் பான்பராக் போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவராவர்.
இவரிடமிருந்து 57 கிலோ 342 கிராம் கஞ்சாவும் 24610 சிறிய பைக்கற் பான்பராக்கும் மீட்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கற்பிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger