கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு நிராகரிப்பு / கொட்டகலையில் இடி தாக்கியதில் இருவர் படுகாயம் / கிழக்கில் மீன்பிடி வலைகள் வள்ளங்கள் சேதம்


 

TNA_logoகூட்டமைப்பின் கோரிக்கையை அரசு நிராகரிப்பு- 
வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது.
புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்ட மூலத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை அனுப்பவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இதனையே அரசின் சார்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.
கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தாவது, 1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18 ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனூடாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு என்பதில் குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளவர்களையும் வடமாகாண சபைத் தேர்தலில் தத்தம் நாட்டில் இருந்தபடியே வாக்களிப் பதற்குரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவுள்ளோம்.
தேர்தல்கள் ஆணையாளருடன் கடந்த வருடம் இடம்பெற்ற சந்திப்பில் வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் அங்கிருந்தே வாக்களிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த போது வலியுறுத்தியிருந்தோம் என்று கூறியிருந்தார்.
கொட்டகலையில் இடி தாக்கியதில் இருவர் படுகாயம்-
நுவரெலியா, ஹற்றனை அண்மித்ததாகவுள்ள கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் இருவர் மீது இடி வீழ்ந்ததில் படுகாயமடைந்த இருவர் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுமுற்பகல் வேளையில் கொட்டகலை பிரதேசத்தில் இடியுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்த போது கைகளில் இயந்திரங்களுடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இடி வீழ்ந்துள்ளது.
இதன்போது இடி தாக்குதலுக்கு உள்ளானவர்களைச் சகத் தொழிலாளர்கள் உடனடியாக கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்குக் கோண்டு சென்று அனுமதித்தனர்.
இதன் பின்பு இவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தச்சம்பவத்தில் கொட்டகலை ரொசிட்டா தோட்டதைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஸ்ரீதரன் , பெருமாள் புனிதகுமார் ஆகிய இரண்டு தொழிலாளர்களே பாதிக்கபட்டுள்ளனர்.
கிழக்கில் மீன்பிடி வலைகள் வள்ளங்கள் சேதம்- 
கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் குடிமனைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடும் காற்று காரணமாக மீன்பிடி வலைகள் வள்ளங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான மீனவ வாடிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
மீன்பிடி படகுகளின் இயந்திரங்களை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் வள்ளங்களை கரைக்கும் இழுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
வாகரை, வாழைச்சேனை, கல்குடா, களுவன்கேணி, பன்னக்குடா, சவுக்கடி பாலமீன்மடு, முகத்துவாரம், கல்லடி களுவாஞ்சிக்குடி போன்ற கரையோரப் பிரதேசங்களில் அலைகள் வழமைக்கு மாறாக அதிக உயரத்திற்கு மேலெழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger