ஊடுருவிய இராணுவத்தை வாபஸ் பெற சீனா நிபந்தனை - இந்தியா ஏற்க மறுப்பதால் பதற்றம் அதிகரிப்பு!


News Service
இந்தியாவுக்குள் ஊடுருவிய ராணுவத்தை வாபஸ் பெற வேண்டுமானால், எல்லையில் புதிதாக கட்டியுள்ள இந்திய ராணுவ அரண்களை இடிக்க வேண்டும் என்று சீனா நிபந்தனை விதித்துள்ளது. இந்தியா இதை ஏற்க மறுத்து மேலும் படைகளை குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா வர திட்டமிட்டுள்ள சீன பிரதமரின் வருகை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஷ்மீரில் லடாக் பகுதியில் கடந்த 15ம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 10 கி.மீ. தூரம் ஊடுருவியதுடன் கூடாரம் அமைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்தவுடன் சீனாவின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு சென்றது.
 
எல்லையில் இருதரப்பு ராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். தூதரக அளவிலும் பேச்சுக்கள் நடக்கிறது. ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலைக்கு சீன வீரர்கள் திரும்ப வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. ஆனால், ஊடுருவலே இல்லை என்றும் எல்லைப் பகுதியில் தங்கள் வீரர்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சீனா கூறுகிறது. மேலும், தங்கள் ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமானால் லடாக் பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக இந்தியா அமைத்துள்ள அரண்களை இடிக்க வேண்டும் என்றும் சீனா திடீர் நிபந்தனை விதித்துள்ளது. சீனாவின் இந்த கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை படைகளை திரும்ப பெற முடியாது என்று சீனா முரண்டு பிடிக்கிறது. சீன ராணுவத்தின் ஊடுருவலால் லடாக் பகுதிக்கு ஏற்கனவே இந்திய ராணுவம் விரைந்துள்ளது. அந்நாடு பிடிவாதம் பிடிக்கும் நிலையில் மேற்கொண்டு படைகளை இந்தியா குவித்து வருகிறது. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

லடாக்கில் ஊடுருவல் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, எல்லை பகுதியில் தேவையில்லாமல் படைகளை அதிகரிக்கக் கூடாது என்றும், இரவு ரோந்துகளை தவிர்த்தல், உள்ளூர் ராணுவ கமாண்டர்கள் அளவில் இருதரப்பு கூட்டங்கள் அடிக்கடி நடத்துவது போன்ற அம்சங்களை கொண்ட வரைவு ஒப்பந்தத்தை சீனா இந்தியாவிடம் அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் இந்திய பகுதிக்குள் ஊடுருவியிருப்பது திட்டமிட்டு நடந்ததாகவே கருதப்படுகிறது.ஒப்பந்தத்தை ஏற்குமாறு இந்தியாவை நிர்பந்திக்கவே ஊடுருவல் நடந்திருப்பதாகவும் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது. படை குறைப்பு உள்ளிட்ட சில அம்சங்கள் இந்தியா தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டவை. லடாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வரும் நிலையில், சீனாவின் ஒப்பந்தத்தையும் ராணுவ அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், 12ஆவது பாதுகாப்புத் திட்டப்படி ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த 1,500 வீரர்களை விமானம் மூலம் அழைத்துச் சென்று எல்லையில் குவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் இரண்டு பட்டாலியன்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சமீபத்தில், சீன எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள திஸ்பூர் மற்றும் திமாபூரை மையமாகக் கொண்ட படைப்பிரிவுகளின் கட்டுப்பாட்டில் புதிய படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில், சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் காஷ்மீர் மாநிலம் லே பகுதிக்கு சில நூறு கி.மீ. தூரத்தில் உள்ள சுமர் என்ற இடத்தில் இந்திய வான்பகுதியில் அத்துமீறிப் பறந்துள்ளன. இப்பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் கடந்த 21ஆம் தேதி சில மணி நேரங்களுக்குப் பறந்து வட்டமடித்ததாகவும், அங்கு சில உணவுப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள், சீன மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றைப் போட்டு விட்டு, அவை திரும்பி விட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீன பிரதமர் லீ கிகியாங் அடுத்த மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வருவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஊடுருவல் விவகாரத்தால் இந்தியா,சீனா இடையே உறவு மோசமாகி இருக்கும் நிலையில், சீன பிரதமர் வருவாரா அல்லது அவரது வருகை ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூரில் ராணுவ அமைச் சர் அந்தோணி நேற்று அளித்த பேட்டியில், சீன ராணுவம் ஊடுருவல் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சீனாவுடன் பல்வேறு நிலைகளிலும் பேச்சு வார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவின் நலனில் சமரசத்துக்கே இடமில்லை. நாட்டின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் காக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger