ஜெர்மனியில் உள்ள 1000 மீட்டர் ஆழமான ரைசெண்டிங் குகையே அந்நாட்டில் அதிகபட்ச ஆழம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் முன்புற பாதை கடந்த 1995ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் கடந்த சில வருடங்களாகத்தான் ஆராய்ச்சியாளர்கள் அந்த குகையின் தன்மை குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ஜெர்மனியின் பெர்க்டெஸ்கடன் நகருக்கு அருகில் இந்த குகை அமைந்துள்ளது.
ஈஸ்டருக்கு அடுத்துவரும் விடுமுறையான கடந்த வார இறுதியில் இங்கு வந்த மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று குகையினுள் இறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது நேற்று திடீரெனப் பாறை ஒன்று சரிந்ததில் அவர்களில் 52 வயது கொண்ட ஒருவர் தலையிலும், உடலிலும் காயமடைந்துள்ளார். அவருக்குத் துணையாக ஒருவர் அங்கேயே இருக்க மற்றொருவர் 12 மணி நேர முயற்சிக்குப் பின் மேலேறி வந்து உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். தகவல் அறிந்து இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த மீட்பு முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதில் முதல் நான்கு மீட்புக் குழுவினர் இன்று தங்களது முயற்சியைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த மீட்பு முயற்சிக்கு பல நாட்கள் பிடிக்கலாம் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குகையின் தன்மையும் அதன் செங்குத்தான அமைப்பும் இந்த முயற்சியை சிக்கலாக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். 350 மீ ஆழம் வரை இறங்குவதற்கான அமைப்பு தங்களிடம் இருக்கும்போதிலும் அதற்குப் பிறகு கயிற்றின் மூலமே கீழிறங்க முடியும் என்று மீட்பு அதிகாரிகளில் ஒருவரான கிளமென்ஸ் ரெய்ண்டில் தெரிவித்தார்.
300 மீ சென்றவுடன் ஒரு அடிப்படை நிலையத்தை அமைத்து ஆழத்தில் சிக்கியுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் திட்டமும் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
ஸ்டட்கட்டிலிருந்து வந்துள்ள இந்த ஆய்வாளர்களே சில வருடங்களுக்கு முன் இந்த குகைப் பாதையைக் கண்டுபிடித்தவர்கள் என்று கூறியுள்ள ஜெர்மனியின் அதிகாரிகள் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

Post a Comment