நாற்பதாண்டுகளுக்கும் மேலாக லிபியாவை ஆட்சி செய்துவந்த முயம்மார் கடாபியை அந்நாட்டு ராணுவம் நேட்டோ துருப்புகள் மற்றும் உள்ளூர் போராளிக் குழுக்களின் துணையுடன் கடந்த 2011ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கி அவரது மரணத்திற்கும் வழி வகுத்தது.
ஆனால் அதற்குப்பின் அமைந்த அரசுகளால் போராளிக் குழுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தங்களுக்கென அதிக சுதந்திரமும், ஆட்சியில் பங்கும் கேட்கும் போராளிக் குழுக்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டுள்ளன. இதனைத் தாக்குப்பிடிக்க இயலாமல் ஆட்சியாளர்கள் பதவியிலிருந்து விலக லிபியா கடாபியின் மரணத்திற்குப் பிறகு இன்னமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இந்த வருட ஆரம்பத்தில் போராளிக் குழு ஒன்றினால் பிரதமராக இருக்கும் அப்துல்லா அல் தின்னியின் குடும்பம் தாக்கப்பட, அவரும் பதவியிலிருந்து விலகும் தனது முடிவை ஏப்ரலில் அறிவித்தார். வரும் 25ஆம் தேதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பிரதமரை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அஹமது மைடிக்கின் தேர்வில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறிய தின்னி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்தார்.
இருப்பினும் கடந்த வாரம் காவலர் துணையுடன் பிரதமர் அலுவலகத்தை அடைந்த மைடிக் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டினார். எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மிகுந்த இந்த வட ஆப்பிரிக்க நாட்டின் பெரும் இருப்புகளுக்கு இந்த இரு தலைவர்களுமே தலைநகர் திரிபோலியில் தனித்தனியே உரிமை கொண்டாடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று பிரதமர் தேர்வு குறித்து நடைபெற்ற சிறிய விசாரணைக்குப்பின் இந்தத் தேர்வு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கு நிர்வாக நீதிமன்றம் மூலம் மேலும் ஆய்வு செய்யப்படும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்ற மைடிக், பதவி விலகுவதாக தெரிவித்தார். எனவே, தேர்தல் வரை தின்னியே பிரதமர் பொறுப்புகளை வகிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment