Oct. 07 Comments Off
அமௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிறை விடயத்தில் நபி வழிக்கு மாற்றமாக செயல்படுகிறது என்று ஒரு ஆக்கத்தை வெளியிட்டு இருந்தார். அந்த ஆக்கத்தை படிக்கும் பொழுது அவர் மீண்டும் மத்ரஸாவிற்கு சென்று ஆரம்பத்தில் இருந்து மார்க்கத்தை படித்தால் அது அவருக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.
அந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகத்தான் அந்த ஆக்கம் அமைந்திருந்ததே தவிர மார்க்க அறிவு உள்ளவரின் ஆக்கம் போன்று தெரியவில்லை. அவ்வளவு அபத்தமான வாதங்களை அதிலே வெளியிட்டிருந்தார்.
அவருடைய அடிப்படையான வாதம் என்வென்றால், மக்காவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தில் தான் அரபா நோன்பு வைக்கவேண்டும். தமது பகுதிகளில் பிறை பார்த்து 9 வது பிறை அன்று அரபா நோன்பு பிடிப்பது நபி வழிக்கு மாற்றமாகும். தொழிநுட்ப வசதிகள் தற்காலத்தில் முன்னேறியுள்ள காரணத்தால் மக்காவில் இருந்து தகவலை அறிந்து நோன்பு பிடிக்கவேண்டும் என்பதாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். அரபா என்ற மைதானத்தில் ஹாஜிகள் ஒன்று கூடுவார்கள். சுபஹ் தொழுத பின்னர் முஸ்தலிபாவில் இருந்து அரபாவிற்கு வந்து மஃரிப் வரை தங்கிவிட்டு மஃரிப் தொழாமல் புறப்படுவர்கள். அந்த நாளில் ஹாஜிகள் நோன்பு நோக்கக்கூடாது. ஹஜ்ஜிக்குச் சொல்லாமல் இருப்பவர்கள் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நபி அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தலை பிறையை தீர்மானித்து அரபா தினத்தை முடிவெடுக்காமல், முபாரக் அப்துல் மஜீத்தைப் போன்ற சில அரைகுறைகள் அரபா தினத்தில் இருந்து தலைப்பிறையை தீர்மானிக்கும் ஒரு புது வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அரபா தினத்தில் ஹாஜிகள் நோன்பு பிடிக்கக் கூடாது ஹாஜிகள் அல்லாதவர்களுக்குத் தான் அரபா நோன்பாகும் இவர்களின் வாதப்படி பார்த்தால் உலகில் அதிகமாக மக்களுக்கு அரபா நோன்பு பிடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அல்லாஹ்வின் துாதர் அவர்கள் ஒரு சட்டம் சொன்னால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும் விதத்தில் தான் அமைந்து இருக்கும். காலத்திற்குக் காலம் ஒரு நாளும் முரண்படாது என்பதை முபாரக் அப்துல் மஜித்தைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஹாஜிகள் சுபஹ் நேரத்தில் இருந்து அரபாவில் ஒன்று கூடிவிட்டு மஃரிபிற்கு சொன்றுவிடுவார்கள். இது தான் ஹாஜிகளின் அரபா நாள். இந்த தினத்தில் தான் உலகில் உள்ள அனைவரும் நோன்பு வைக்கவேண்டும் என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் எப்போது நோன்பு வைப்பது? ஹாஜிகள் சுபஹ் நேரத்தில் அரபாவில் ஒன்று கூடுவார்கள். அப்போது அமெரிக்காவில் மஃரிப் நேரமாக இருக்கும் ஹாஜிகள் மஃரிபிற்கு சென்றுவிடுவார்கள். அப்போது அமெரிக்காவிற்கு சுபஹ் நேரமாக இருக்கும். இவர்களின் வாதப்படி அமெரிக்காவில் உள்ளவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக மஃரிபில் இருந்து சுபஹ் வரைக்கும் நோன்பு வைக்கும் நிலை ஏற்படும். ஒரே நாளில் உலகம் முழுவதும் அரபா நோன்பு பிடிக்கவேண்டும் என்பதும், ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதும் மார்க்க அடிப்படையிலும் தவறான நிலைப்பாடு. அறிவியல் ரீதியாவும் சாத்தியம் அற்ற ஒரு விடயமாகும்.
இஸ்லாம் கூறும் சட்டம் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும் விதத்தில் தான் இருக்கும் சில நாடுகளில் வாழும் மக்களுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்காது. இவர்களின் இந்த குழப்பமான நிலைக்கு காரணம் இஸ்லாத்தை சரியாக விளங்காததுதான்.
அல்லாஹ் தன் திருமறையில்
உங்களில் அம்மாதத்தை யார் அடைகிறாரே அவர் நோன்பு நோக்கட்டும்
(அல்குர்ஆன் 2 : 185)
என்று கூறுகிறான் இந்த வசனத்தில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், மாதத்தை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அடைய முடியாது. அது ஒவ்வொறுவருக்கும் வேறுபடும் என்பதை உணர்த்துகிறான். அதனால் தான் “உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ” என்று குறிப்பிடுகிறான் அதில் இருந்தே ஒருவர் அடையும் நேரத்தில் இன்னும் சிலர் அம்மாதத்தை அடையாமலும் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. இல்லை என்றால் “அந்த மாதத்தில் நோன்பு வையுங்கள்” என்று அல்லாஹ் குறிப்பிட்டு இருப்பான். அல்லாஹ் ஒரு வார்தையையும் வீணாக பயன்படுத்தமாட்டான் என்பதை இப்படிபட்ட அபத்தமான கருத்தில் இருப்பவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஆகவே, அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு நோற்க வேண்டும் என்றால் அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ குர்ஆன் சுன்னாவில் இருந்து முபாரக் அப்துல் மஜீத் ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்து இருக்கும் காரணத்தினால் தகவல் உடனடியாக கிடைக்கும் வசதி உள்ளது. எனவே மக்காவில் அரபா தினம் எப்போது என்ற தகவலை எமக்கு எட்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்து கொள்ளலாம். எனவே எமது பகுதிகளில் பிறை பார்க்காமல் சவுதியின் அரபா தினத்தில் நோன்பு வைக்கவேண்டும் என்பது தான் முபாரக் அப்துல் மஜீத் வைக்கும் அடுத்த அபத்தமான வாதமாகும்.
மார்க்கம் சம்பந்தமான போதிய அறிவு இன்மையே இப்படிப்பட்ட அபத்தமான வாதங்களுக்கு காரணமாகும்.
இன்று நபி அவர்களின் காலத்தை விட விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பது உண்மை தான். ஆனால் நபி அவர்களின் காலத்தில் இருந்த புறச்சாதன வளர்ச்சிகளை வைத்து அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அரபா தினத்தை அறிவதற்கு முயற்சிகள் எதுவும் செய்தார்களா? என்பது தான் எமது கேள்வியாகும்.
ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தில் தான் அரபா நேன்பு வைக்கவேண்டும் என்பது மார்க்கமாக இருந்திருந்தால் நபி அவர்கள் துல்ஹஜ் தலை பிறை பார்த்த உடனேயே ஒருவரை மக்காவிற்கு அனுப்பி மக்காவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினம் எப்போது என்று அறிந்து வர சொல்லி இருப்பார்கள். ஏன் என்றால் நோன்பு பெருநாள் போன்று தலைப் பிறை பார்த்து அடுத்த நாள் பெருநாள் கொண்டாடப்போவது இல்லை. பிறை பார்த்து எட்டு நாட்களுக்குப் பிறகு தான் அரபா தினம் வரும். மதினாவில் பிறை பார்த்தவுடன் மக்காவிற்கு ஒருவரை அனுப்பி இருந்தால் கூட சுமார் நான்கு நாட்களுக்குள் அல்லது ஐந்து நாட்களுக்குள் மக்காவிற்கு சென்று வரமுடியும்.
அது சிரமமான ஒரு வேலையும் இல்லை. நபி அவர்கள் நபித்தோழர்களை உளவு பார்ப்பதற்காக பல தடவைகள் வெளியூருக்கு அனுப்பியிருக்கிறார்கள் ஆனால் அது போன்று எவ்வித ஏற்பாடுகளையும் துல்ஹஜ் பிறை விஷயத்தில் நபியவர்கள் மேற்கொள்ளவில்லை.
காரணம் மக்காவில் ஹாஜிகள் கூடும் போது நோன்பு பிடிக்கவேண்டும் என்பது மார்க்கச் சட்டம் அல்ல. எமக்கு எப்போது பிறை 9 ஆக உள்ளதோ அப்போது தான் நாம் அரபா நோன்பு பிடிக்கவேண்டும்.
இப்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அதற்காக மாற்றிக் கொள்வோம் என்று முபாரக் அவர்கள் வாதம் வைக்கின்றார். இப்படி பிற்காலத்தில் விஞ்ஞானம் வளரும் என்று அல்லாஹ்விற்கு தெரியாதா? அல்லாஹ்வுக்கே மார்கம் சொல்லிக் கொடுக்கப் போகின்றாரா? முபாரக் அப்துல் மஜீத்.
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்று அல்லது அந்த நாட்டிற்கு மட்டும் தான் பொருந்தும் இந்த நாட்டிற்கு பொருந்தாது அல்லது அந்த காலத்திற்கு மட்டும் தான் பொருந்தும் இந்த காலத்திற்கு பொருந்தாது என்று நபி வழியைப் புறக்கணிப்பது மிகவும் அபத்தமான செயலாகும். அல்லாஹ்வின் தூதர் நோன்பு திறக்கும் போது பேரீச்சம் பழத்தினால் திறக்கச் சொன்னார்கள். அது சவுதிக்கு மட்டும் உள்ள சட்டம். சவுதியில் தான் பேரிச்சம் பழம் மலிவாக கிடைக்கும். இலங்கையில் வாழைப்பழம் தான் மலிவாக கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அந்த காலத்திற்கு ஏற்ப சட்டம் சொன்னார்கள். எனவே வாழைப்பழத்தினால் நோன்பு திறப்பது தான் எமக்கு பொருத்தம் என்று இவர்கள் கூறுவார்களா? (கூறினாலும் கூறலாம்) மார்க்க சட்டம் ஒவ்வொன்றும் அல்லாஹ் வழங்கியது. அனைத்துக் காலத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன் என்பதை மனதில் பதியவைத்துக் கொண்டால் இப்படியான அபத்தமான வாதங்களை யாரும் முன் வைக்கமாட்டார்கள்.
அதே போன்று சில சந்தர்ப்பங்களில் சவுதியிற்கு முன்னர் சில நாடுகளில் பிறை தென்பட வாய்ப்பு உள்ளது. உதாரணமாக 10வது மாதம் முதலாம் திகதி தலை பிறை பார்க்கும் நாள் என்று வைத்துக் கொண்டால், சவுதி பிறை பார்த்து பிறை தென்படாமல் இருக்கிறது. ஆனால் வேறு நாடுகளில் பிறை பார்த்தால் என்ன செய்வது? சவுதிக்கு முன்னர் அந்த நாட்டு மக்கள் 9வது அதாவது அரபா நாளை அடைவார்கள். சவுதி அரபா தினத்தை அடைந்து இருக்கும் போது சவுதிக்கு முன்னர் பிறை பார்த்த மக்கள் 10வது பிறையை அதாவது பெருநாள் தினத்தை அடைந்து இருப்பார்கள். முபாரக் அவர்களின் வாதப்படி பெருநாள் தினத்தில் அரபா நோன்பு வைக்கும் நிலை அந்த மக்களுக்கு ஏற்படும். இது மார்க்த்திற்கு மாற்றமான சட்டம் இல்லையா? இந்த இடத்தில் முபாரக் அவர்கள் என்ன மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்?
சூரியனையும் சந்திரனையும் அல்லாஹ் காலம் காட்டுகிறது என்று கூறுகிறான். எனவே தொழுகை நேரத்தை எப்படி கடிகாரத்தைப் பார்த்து முடிவு செய்கிறார்களோ அதே போன்று மக்காவில் பார்க்கும் பிறையை நவீன கருவிகளைப் பயன்படுத்தி அறித்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று தனது அடுத்த அபத்தமான வாதத்தை முன்வைக்கிறார்.
உண்மையில் சூரியனும் சந்திரனும் காலம் காட்டுகிறது என்ற திருமறை வசனம் முபாரக் அப்துல் மஜீத் அவர்களுக்கு எதிரான வசனமாகும். அதையே தனக்கு ஆதாரமாக காட்டியுள்ளார் என்பதும் அவரின் மார்க்க அறிவும், விஞ்ஞான அறிவும் எந்த நிலையில் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துவான். இரவை அமைதி களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் ஏற்பாடு.
(அல்குர்ஆன் 6.96)
சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் அது எப்போது காலம் காட்டுகிறது என்பது தான் நாம் விளங்கவேண்டிய விடயம்.
சூரியன் எமது ஊரில் எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலம் காட்டுமே தவிர சூரியனே காலம் காட்டாது.
எமது தலைக்கு நேராக 0 டிகிரியில் இருந்தால் நண்பகல் என்கிறோம். எமது தலைக்கு கிழக்காக 90 டிகிரியில் இருந்தால் அதை அதி காலை என்கிறோம். எமது தலைக்கு மேற்கே 90 டிகிரியில் இருந்தால் இரவின் ஆரம்பம் என்கிறோம். அதாவது சூரியனும் அது அமைந்து உள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
நமக்கு தலைக்கு நேராக 0 டிகிரியல் இருக்கும் போது அதாவது நண்பகலில் இருக்கும் போது நமக்கு கிழக்கே 90 டிகிரியில் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்து கொண்டு இருப்பதைப் போல காட்சி அளிக்கும். ஒரே சூரியன் நமக்கு ஒரு காலத்தையும் வேறு திசையில் உள்ளவர்களுக்கு ஒரு காலத்தையும் காட்டுகிறது.
அமெரிக்காவில் சுபஹாக இருக்கும் போது முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் எமக்கும் சுபஹாகி விட்டது. நான் சுபஹ் தொழப் போகிறேன் என்று சொல்வாரா? இங்கு அந்நேரம் இரவாக இருக்கும்.
சவுதியில் நோன்பு திறக்கும் போது தான் நாமும் நோன்பு திறக்கவேண்டும் என்று கூறுவரா? சவுதியில் நோன்பு திறக்கும் போது நாம் இஷா நேரத்தையும் அடைந்து இருப்போம்.
அதே போன்று சந்திரன் சவுதியை அடையும் போது அவர்களுக்கு காலம் காட்டும் இலங்கையை அடையும் போது எமக்கு காலம் காட்டும். எப்படி சவுதியில் சுபஹ் தொழும் போது நாம் இங்கு தொழமாட்டோமோ அதே போன்று சவுதியில் பிறை பார்க்கும் அவர்களுக்கு தான் பொருந்துமே தவிர நாம் இங்கு பிறை பார்க்கும் போது தான் எமக்கு பொருந்தும். திருமறை வசனங்களை தலை கீழாக விளங்கினால் இவர்களைப் போன்று தவறான முடிவுகளைத் தான் எடுக்வேண்டிவரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே உலகில் எங்கு பிறை பார்தாலும் அது எம்மை கட்டுப்படுத்தும் என்று நிலைப்பாடு குர்ஆன் சுன்னாவிற்கு எதிரான நிலைப்பாடு. தத்தமது பகுதியில் பிறை பார்த்துப் பின்பற்றுவது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.
மறுப்பின் சுருக்கமும் சில கேள்விகளும்.
முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் பிறை விடயமாக முன்வைத்த வாதங்களுக்குறிய பதிலை மேலே நாம் தந்துவிட்டோம்.
இப்போது சில கேள்விகளை அவரிடத்தில் நாம் முன்வைக்கின்றோம். அந்த கேள்விகளுக்கு அவர் ஆதாரத்துடன் பதில் தர வேண்டும். அப்படி ஆதாரத்துடன் பதில் தராத பட்சத்தில் தனது கொள்கையில் அவர் தெளிவுடன் இல்லை என்பதையும், வேலை இல்லாவிட்டால் அறிக்கை விடுபவர் என்பதையும் மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
- மக்காவில் ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஓன்று கூடும் நாளில் தான் நாம் இங்கு நோன்பு வைக்க வேண்டும் என்றால் குர்ஆனில் இருந்தோ அல்லது ஆதாரப் பூர்வமான ஹதிஸில் இருந்தோ அதற்குறிய ஆதாரத்தை முபாரக் அப்துல் மஜீத் காட்ட வேண்டும்.
- மதீனாவில் துல்ஹஜ் தலைப் பிறை தென்பட்ட பின்னர் நபியவர்கள் யாரையாவது மக்காவுக்கு அனுப்பி வைத்து மக்காவில் எப்போது தலைப் பிறை என்பதையோ அல்லது அரபாவில் என்றைக்கு ஹாஜிகள் ஒன்று கூடுகின்றார்கள் என்பதையோ பார்ப்பதற்கு முயற்சி எடுத்தார்களா?
முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் மேலுள்ள கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் பதில் தர வேண்டும் என்று வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
(ஹிஷாம் M.I.Sc அழைப்பாளர் – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்)

Post a Comment