சிரியா மீது போர்: அமெரிக்கா அடுத்த வாரம் இறுதி முடிவு - பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு


சிரியா நாட்டில் பஷர்–அல்–ஆசாத் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
நீண்ட நாட்களாக ஆட்சியை கையில் வைத்திருக்கும் அவர் மக்கள் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை என்று போராட்டம் வெடித்தது. ஆசாத்தை பதவியில் இருந்து இறங்குமாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடந்த 2 ஆண்டுகளாக கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.
கடந்த மாதம் 21–ந்தேதி போராட்டம் நடத்தும் மக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையில் மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. அப்போது ராணுவம் ரசாயன தாக்குதலை நடத்தியது. அதில் சுமார் 1300 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் சிரியா அதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் முடிவுக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய 3 நாடுகள் மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிரியா மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

ரஷியா, சீனா மற்றும் அரபு நாடுகள் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியாவுக்கு எஸ்–300 எனும் ஏவுகணைகளை ரஷியா ஏராளமாக கொடுத்துள்ளது. அதோடு சிரியாவுக்கு உதவ போர்க் கப்பல் ஒன்றையும் ரஷியா அனுப்பி உள்ளது.
ஐ.நா. சபையும் சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. என்றாலும் சிறிய அளவிலாவது போர் தொடுக்க வேண்டும் என்பதில் ஒபாமா உறுதியாக உள்ளார். இதற்காக அவர் அமெரிக்க பாராளுமன்ற ஒப்புதலை கோரினார்.

இதையடுத்து அமெரிக்க செனட்டின் வெளியுறவு குழு கூடி கடந்த இரண்டு நாட்களாக விவாதித்தது. நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் சிரியா மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஒபாமாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. ஓட்டெடுப்பில் 10–7 என்ற கணக்கில் தீர்மானம் வெற்றி பெற்றது.

தீர்மானத்தில், ‘‘60 நாட்களுக்கு சிரியா மீதான தாக்குதலை நடத்தி முடிக்க வேண்டும். அமெரிக்க துருப்புகள் தரையில் இறங்கி போரிடக்கூடாது. வான்வழி தாக்குதல்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக அமெரிக்க பாராளுமன்றத்தின் முழு கூட்டம் அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதன் பிறகே சிரியா மீதான போர் தொடர்பான தீர்மானத்துக்கு எந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பது தெரிய வரும்.

அதை பொறுத்து சிரியா மீதான போர் நடவடிக்கைகளை ஒபாமா மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.

சிரியா மீது போர் தொடுக்கலாம் என்று ஒபாமாவுக்கு செனட் ஒப்புதல் கொடுத்துள்ள போதிலும், அமெரிக்க நாட்டு மக்களிடையே சிரியா மீது போர் தொடுக்க விருப்பம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் 48 சதவீதம் பேர் போர் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அது போல வாஷிங்டனை சேர்ந்த பியூ ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பிலும் 48 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே அமெரிக்க செனட் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

அமெரிக்க செனட்டில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்புதல் கொடுத்தால்தான் சிரியா மீதான போரை ஒபாமா நடத்த முடியும். அடுத்த வார தொடக்கத்தில்தான் இதில் தெளிவான நிலை தெரிய வரும்.

இதற்கிடையே சிரியா நாடு அமெரிக்காவுக்கு கடும் சவால் விட்டுள்ளது. அமெரிக்காவின் எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ள தயார் என்று சிரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா தாக்குதல் நடத்தி, அதன் மூலம் மூன்றாவது உலகப் போரே ஏற்பட்டாலும் எங்கள் கொள்கையில் மாற்றம் செய்யப் போவதில்லை என்று சிரியா அறிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger