எகிப்தில் ஆட்சி மாற்றம் நடக்கும்; இலங்கை
முஸ்லிம் வெகுண்டெழுந்து கருத்துக்கூறுவான். பாலஸ்தீனத்தில் குண்டு வெடிக்கும் ;
இலங்கை முஸ்லிம் கருத்துக்கூறுவான். டென்மார்க்கில்
கார்டூன் வரைந்தால் அதற்கும் இலங்கை முஸ்லிம் கருத்துக்கூறுவான். ஹஜ்ஜுக்
கோட்டாவில் காசு பார்க்க கிடைக்கவில்லையென்றால் ஹஜ்ஜாஜிகள் தெருவில் இறங்கி
கூச்சல் போடுவார்கள்; தமது பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள கட்சிக்கெதிராக பேச
வேண்டுமா அதையும் இலங்கை முஸ்லிம் செய்வான். அதையும் தாண்டி, நாடே
நாசமாப் போகட்டும் என்று தன் வீட்டுத் திருமணத்திலும், ஒரு
அபலைப் பெண் தலையைத் துண்டிக்கும் போது சூப்பர் சிங்கர் போட்டியிலும் போய் ஜாலியாக
இருக்கும் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைமை வேண்டுமா? அதுவும்
இலங்கை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
தெருவுக்குத்
தெரு, ஒவ்வொரு ஜமாத்துக்கொரு பள்ளி கட்ட வேண்டுமா? உயிரைக்கொடுத்தாவது
கட்டுவான் இலங்கை முஸ்லிம். அதில் ஒரு பள்ளியை கொள்கை முரண்பாட்டுக்காக இடிக்க
வேண்டுமா? அதையும் செய்வான் இலங்கை முஸ்லிம். சஹனில் உட்கார்ந்து
சாப்பிடும் வரை சரி, அதன் பிறகு அவன் இந்த ஜமாத்துக்காரன், இவன்
இந்த தரீக்காக்காரன் என்று பிரிந்து நிற்க வேண்டுமா? அதிலும்
இலங்கை முஸ்லிம் குடிமகன் கெட்டிக்காரன்.
தன்
ஒட்டுமொத்த அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பதவி மோகம் பிடித்த, முதுகெலும்பில்லாத
அரசியல்வாதிகளிடம் குடிமகனே கொடுக்கத் தயாராக இருக்கும் போது மஹிந்த ராஜாக்களுக்கு
என்ன கவலை? தேசியப்பட்டியலில் இரண்டு மூன்று துதி பாடுவோரைச்
சேர்த்துக்கொண்டு சர்வதேசத்தின் கண்களையும் அவர்கள் மூடிவிடுவார்கள், அதற்கும்
காரணம் அதே இலங்கை முஸ்லிம்.
நாட்டில்
ஒரு பாகத்தில் ஏழைப் பெண்கள் பள்ளிக்கூடம் கூட போக முடியாமல், ஒருவேளை
ஒழுங்காக உண்ண முடியாமல் அரபிக்காரன் கக்கூஸ் கழுவச் செல்வதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் இலங்கை முஸ்லிம். ஆனாலும் வெளிநாட்டு
என்.ஜி.ஓக்கள் உதவியோடு அரிசி மூட்டை, மாவு
மூட்டை, ஈச்சம் பழம் அத்தோடு கோடி கோடியாக பணம் செலவழித்து
ஆடம்பரத்தை விரும்பாத இஸ்லாத்தில் பளிங்கில் பள்ளி கட்டி அழகு பார்ப்பான்
முஸ்லிம். இதைத் தட்டிக்கேட்கக் கூடாது, கேட்டால்
அவன் முஸ்லிமாக இருக்க மாட்டான் என்று சொல்வான்.
சரி
இப்போ எல்லாம் பார்த்தாச்சு, மஹியங்கனை தானே? அங்க
சிங்களவங்க தானே இருக்காங்க மூடிட்டு போகட்டும் என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டான்
அதே இலங்கை முஸ்லிம். கிரான்பாஸ்? பழைய
பள்ளியே போதும் “தொரே” என்று கை கழுவுவான், தம்புள்ள? ஓய்
பள்ளி கமிட்டியில இருக்கிறவனுகளுக்க தாடியை காணல ஓய் என்று குறை சொல்லுவான், அந்த
பிரச்சினைய வச்சு யு.கேயில கூட சங்கம் அமைச்சு பின்னால அதை வைச்சு நாலு
ராஜதந்திரிகள்ட கையால தேத்தனியும் பிஸ்கட்டும் குடிச்சுட்டு அல்ஹம்துலில்லாஹ்
என்று ஏப்பம் விட்டுட்டு போயிருவான்.
முஸ்லிம்
என்றால் ஒரு “இது” என்று எதுவென்றே தெரியாத “இது” இருப்பதாக
எண்ணிக்கொண்டு அதுவும் இல்லாம இதுவும் இல்லாம போடுற கலிசானுக்கும், கட்டுற
சாரத்துக்கும், தொப்பிக்கும் வியாக்கியானம் பேசிப் பேசி, கடைசியில
கல்கமுவயில லவ் பண்ணின பிள்ளைட முடியை வெட்டி ஷரியாவும் பேசுறான் இந்த முஸ்லிம்.
இதெல்லாம்
பார்த்துட்டு ஞானசார சும்மாயிருப்பானா இல்லாட்டி சம்பிக்க ரணவக்கதான் சிரிக்காம
இருப்பானா? இதெல்லாம் தெரிஞ்ச கோத்தா விடுமுறையில போக மஹிந்தட காலடியே
கதி என்று முஸ்லிம் அரசியல் வாதிகள் சாணக்கியம் பேச, இதுதான்
தருணம் என்று மஹியங்கனை பள்ளிக்கு கல்லெறிஞ்சதுக்கும் ஹகீம்தான் காரணம் என்று
ஜனாதிபதி வியாக்கியனம் பேச, கெட்ட குடியே கெடும் என்கிற மாதிரி சும்மாயிருக்காம அசாத்து
சாலி சவுன்ட் குடுக்க, முஜிபுர் ரஹ்மான் எதிர்க்கட்சியிலயிருந்து குரல் கொடுக்க, என்னாப்பா
நினைக்கிறிங்க இதெல்லாம் சும்மாவா?
அரசியல்
தொரே அரசியல் எங்கே என்ன நடந்தாலும் பரவால மஹிந்தட மனசு நோகாம நடக்கத்தான் நீங்க
அரசியல் வாதிகள ஆட்சிபீடத்துக்கு அனுப்பி வைச்சிருக்கிங்க அதை அவங்க சரியா
செய்வாங்க, பள்ளியெல்லாம் மூடுறாங்களோ இல்லையோ ஒரு கலக்கு கலக்கி
அநுராதபுரம், கிறீஸ்யக்கா, தம்புள்ள, பொது
பல சேனா, மாடறுப்பு, தீக்குளிப்பு
என்று வளர்ந்துட்டு போற வரிசையில இன்னும் கொஞ்சம் டிராமா பாக்கியிருக்கு.
திருவாளர்
குடிசனங்களுக்குத்தான் எங்க என்ன நடந்தா என்ன? அடுத்த
எலக்ஷன்லயும் மறக்காம இவங்களுக்கே “வோட்” பண்ணி
அனுப்பி வைங்க அப்பதான் எல்லாம் நல்லபடி நடக்கும், அதுக்குள்ள
காலி,குருணாகலயில வேற பள்ளிவாசல்கள மூட வைக்காம இருந்தா சரிதான்!

Post a Comment