பத்தின
கமால், ஆமை பாரூக், வன்
ஷொட் பாரூக், பொட்ட நவ்பர், உக்குன், மோட
ராசிக், கசிப்பு பாரூக், பாய்
இம்தியாஸ், குடு நூர், பாஜி, பஜி, பவ்மி, மபாஸ், நஸ்ருல், பையா, முஸம்மில், மிலான், முஹைதீன்
ஹாஜி, மாமஸ்மி, அரூஸ், அஜ்வாத்
என்று மிக நீண்ட பட்டியல் ராஜபக்சாக்கள் ஆட்சிக்கு வர
முன்பதாக கொழும்பை ஆட்டிப் படைத்தது.
ஒரு
ரைமிங்கிற்காக வரக்கூடிய பெயர்கள் மாத்திரமே இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இதை
விடப் பல மடங்கு உள்ளூர் சண்டியர்கள் கப்பம் பெற்று ஆட்சி புரிந்த அந்தக்
காலத்தையும், மாளிகாவத்தையிலிருந்து 90 களின்
இறுதிப் பகுதியில் உதித்த பாதாள உலக வரலாற்றையும் சிந்தித்துப் பார்க்கத்
தோன்றுகிறது.
டேலு, கனகு, ஜோன், விஜேபால, பெசில்,சொத்தி
உபாலி,கனி, நாவல
ரவி, கித்சிறி, சுவர்ணபால, சுதா, கிறிஸ்டோபர்
என்று ஒரு காலத்தில் சண்டியர் உலகத்தைக் கட்டியாண்ட பெயர்கள் நாளடைவில் அரபுப்
பெயர்களுக்கு கைமாறி, கையோங்கி வளர ஆரம்பித்த அந்தக் காலத்தைத் தான் மாமஸ்மி தன்
இறுதி வாக்குமூலத்தில் நினைவு கூறிச் செல்கிறார். ஆகவே, அதிலிருந்து
ஆரம்பிப்பதும் தகும்.
நாகு
முடிந்து கனகு என்பவர் கன்னாரத் தெருவை (கொழும்பு -13) ஆட்சி
புரிய ஆரம்பித்த காலம், டேலு கைக்குண்டெறிந்து இடுப்பில் காயமடைந்தாலும் தனக்கும்
ஒரு சிறுபடையை வைத்துக்கொண்டு செக்கட்டித் தெருவை (கொழும்பு –
13) விட்டுக்கொடுக்காமல் கை கோர்த்து ஆட்சி புரிந்து
கொண்டிருந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உள்ளூர் சண்டியர்களுடனான உறவை
உலகறியச் செய்தது.
வடக்கில்
புலிகளிடமிருந்து கன்டைனரில் ஆயுதமிறக்கிய குற்றச்சாட்டில் கைதான கனகு மூன்று வருட
“அச்சு” என்ற
பிணையில்லா சிறைத்தண்டணை வழங்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்குள்ளேயே வெளியே வந்து
விடுகிறார். வந்ததும் வராததும் தேர்தல் காலத்தில் அது வரை கொழும்பு கண்டிராத
மாபெரும் “யானை” மேடை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி மீதான தமது
விசுவாசத்தைத் தூக்கி நிறுத்த, அசந்து
போன பிரேமதாசவும் பின் ரணிலும் கூட தங்கம் ஜொலிக்கும் செட்டியார் தெருப் பக்கத்தை
ஆட்டிப்படைத்த இந்த உள்ளூர் சண்டியரைப் பாராட்டித் தள்ளினர்.
இன்னொரு
புறத்தில் சொத்தி உபாலியை வளர்த்தெடுத்த பிரேமதாச அத்துலத் முதலியைப் போட்டுத்
தள்ளி விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் போய் ஆமர்வீதியில் அமரராகினார். ஆனாலும், அரசியல்
சண்டியர்களுக்குக் குறைவில்லை. ஒரு புறம் செனவிரத்ன, மறுபுறம்
சிறிசேன குரே, இவர்களுக்கு சற்றும் குறைவில்லாமல், பிரேமதாசவின்
போக்குக்கு எந்தவிதத்திலும் குறையாத பாணியில் காமினி திசாநாயக்க, இன்னொரு
புறத்தில் வீரசிங்க மல்லிமாராச்சி அவருக்கு எதிராக பாரத “லக்கி”, நாடாளுமன்றத்தில்
அசையாத இடத்திலிருந்த எலிக் அலுவிஹார, ஜனக
பண்டார என்று காவல்துறையை மிஞ்சிய உள்ளூர் ஆதிக்கத்தை சினிமாப் பாணியில் ஒரு நிழல்
உலகோடு தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள்.
இதில்
டேலு அல்லது குடு ராஜா என அறியப்பட்ட (கொழும்பு 2) கொம்பனித்தெரு
சண்டியனின் மறைவு பல விடயங்களுக்கு வித்திட்டது. அதில் முக்கியமானது, மாளிகாவத்தை
பகுதியில் அதுவும் “மர்கஸ்” பின்புறத்திலேயே
கசிப்பு காய்ச்சும் அளவுக்கு வளர்ந்து வந்த சுதா – கிறிஸ்தோபர்
எனும் இருவரின் அசுர வளர்ச்சி.
இன்னொரு
புறத்தில் மலிபன் வீதி (கொழும்பு 13) யில்
சிறிது சிறிதாக “தூள்” வியாபாரம் செய்து வந்த நெளபரின் வளர்ச்சியும் ஒரு சேர நினைவு
கூறத்தக்கது. டேலுவின் மறைவின் பின் கொம்பனித்தெருவில் ஏற்பட்ட வெற்றிடத்தை ரவி, விஜேபால
என அவரது கையாட்கள் கைப்பற்றினாலும் உள்ளூரிலேயே அவர்களது வேகந்த பிரதேசத்துக்கு
மிக அருகில் அமைந்திருந்த ஜாவா லேனிலேயே எதிர்நோக்க வந்தது. க்லெனி வீதி, ஜாவா
லேன், சொய்ஸா அடுக்கு மாடி மற்றும் ரயில் பாதை (பீலி)
பிரதேசங்களில் மிலானின் செல்வாக்கு அதிகரித்து, ஒரு
கட்டத்தில் “மெக்சிகோ” நகரம்
போன்று இரவிரவாக முஸ்லிம் இளைஞர்கள் கூரைகளுக்கு மேல் நாட்டு வெடிகுண்டு, வாள், கத்தி, ஹொக்கி
மட்டை, கிரிக்கட் மட்டை என கையில் கிடைத்த ஆயுதங்களோடு டேலுவின்
கையாட்களை எதிர்கொள்ளக் காத்திருந்தார்கள்.
சண்டைக்காரர்கள்
எல்லாம் எப்படியோ தப்பிப் போக, மிலான்
என நினைத்து கொம்பனி வீதி ரயில் நிலையத்துக்கு முன்னால் ரவி – விஜேபாலவின்
துப்பாக்கி சூட்டில் அநியாயமாக இறந்தது என்னமோ அப்பாவி முஸ்லிம் இளைஞனான ஜவ்பர்
எனும் புறாப்பிரியன்.
மறுபுறத்தில்
சுதா – கிறிஸ்டோபரின் அட்டகாசம்
தலைவிரித்தாடி, கிரான்ட்பாசில் (கொழும்பு 14) தான்
விரும்பிய ஹோட்டலைத் தனதாக்கிக்கொள்ளும் அளவுக்கு சுதாவின் அதிகாரம் வளர்ந்து
வந்திருந்தது.
சுதாவைப்
பலப்படுத்தியவர்களிலும் பல முஸ்லிம்கள் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அவன்
செய்ததுவே சரியெனப்பட்டது, இவர்களுக்கும் வருமானம் இருக்கத்தான் செய்தது.
ஒட்டு
மொத்தமாக இவர்கள் அனைவரும் யார்? என
கேள்வி கேட்டுப்பார்த்தால் சமூக சேவகர்கள் என அப்பாவித்தனமாக யாரும் பதில்
சொல்லும் அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு இணையாகவே இவர்களது பெயர்களும், அதிகார
வர்க்கத்தின் நல்லாசியும் இவர்களுக்கு இருக்கவே செய்தது.
கிரான்ட்பாஸ்
மர்க்கசுக்கு பின்னால் கசிப்பு காய்ச்சும் அளவுக்கு வளர்ந்து வந்த சுதா, மாளிகாவத்தயில்
தான் விரும்பியதே நடக்க வேண்டும் என நாட்டம் கொண்டதோடு தனக்குத் தேவையான ஒருவனை
நகர சபையில் வேலைக்கமர்த்த வேண்டும் என கோரிய சுதா அதனை செய்து தராத கோபத்தில்
இம்தியாசை நடு வீதியில் வைத்து தாக்கியது மாளிகாவத்த இளைஞர்கள் மனதில் பெரும்
தாக்கத்தை உருவாக்கியது. இதை மாமஸ்மியும் தன் இறுதி வாக்குமூலத்தில் சொல்கிறார்.
இந்த
அட்டகாசத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முடிவைக் கொண்டு வர வேண்டும் என எண்ணிய
முஸ்லிம் “தலைகள்” ஒன்று
கூடி ஆலோசித்ததன் விளைவாக சில அரசியல் வாதிகளின் ஆசியோடு “டீம்” என
ஒரு அமைப்பு உருவானது. கூட்டுத் தலைமையில் இயங்க ஆரம்பித்த இக்குழுவின் பிரதான
நோக்கம் சுதா – கிறிஸ்டோபரை விரட்டுவதாக இருந்தாலும் நாளடைவில் ஒட்டு மொத்த
சண்டியர்களையும் களை பிடுங்கும் தேவையிருப்பதாக இவர்கள் வளர்ந்தது இன்னொரு
சரித்திரம்.
இந்தக்
காலத்துக்கு சற்று முன்பதாக வாழைத்தோட்டத்தில் இடம்பெற்ற சிங்கள – முஸ்லிம்
கலவரம் முக்கியம் பெறுகிறது. ஏனெனில் அங்கு இடம்பெற்ற அநியாயங்களை தட்டிக் கேட்க
வழியில்லாமல் இராணுவம் கொண்டு வந்து குவிக்கப்பட்டபோது வீடுகளுக்குள் முடங்க
நிர்ப்பந்திக்கப்பட்ட முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமக்குள் 80 களில்
செயற்பட முயற்சித்த உள்ளூர் பாதுகாப்பு குழு போன்று ஒரு குழுவின் தேவையும்
உணரப்பட்டது.
புதுக்கடை
பண முதலைகள், பள்ளிக்கு வந்தால் கதிரையில் தான் உட்காருவேன் என அடம்
பிடித்தவர்கள், சிறு சிறு சண்டியர்கள் என பலரது கூட்டில் குடு நூர் என
அறியப்பட்டவரின் ஆளுமையிலும் மாளிகாவத்தையில் டீம் உருவானது.
ஆங்காங்கு
பிரிந்திருக்கும் சிறு சிறு துணிச்சல் மிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முஸ்லிம்
அணியாக இயங்கினாலேயே சுதா – கிறிஸ்டோபரின் தொல்லையை அடக்க முடியும் என நம்பிக்கொண்டு
இணைந்து கொண்ட பல்வேற பகுதிகளைச் சேர்ந்த குழுக்கள் ஈற்றில் தத்தமது பிரதேசங்களில்
இருக்கும் உட்பிரச்சினைகளையும் டீமைக் கொண்டே தீர்த்துக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து
பழிவாங்கல்கள் ஆரம்பித்தன.
இதற்கு
சிறந்த உதாரணமாக பெரிய பள்ளிவாசலை அண்டிய சென்ட்ரல் ரோட் பகுதியை
எடுத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் பாபர் வீதியில் (ஆட்டுப்பட்டித் தெரு) பத்தின
கமால் இருந்தார், அவருக்குப் பின் ஆமை பாரூக் ஆளுமையைக் கைப்பற்றிக்கொண்டாலும்
சென்ட்ரல் ரோடில் முஹைதீன் ஹாஜியாரின் அதிகார வளர்ச்சி இரு தரப்புக்குமிடையில்
அடிக்கடி முறுகலை உருவாக்கிக்கொண்டேயிருந்தது.
பெரியவர்கள்
சண்டையிட்டுக்கொள்வது போக இளைஞர்கள் இதில் சிக்குண்டதன் விளைவாக சிறு வயதில்
ஒன்றாக ஓடி விளையாடியவர்களைப் பிற்காலத்தில் நண்பர்களே நடு வீதியில் வைத்து
சுட்டுக் கொல்லும் தேவை வந்தது.
பார்ப்பதற்கு
கலிசானும் சேட்டும் போட்டு டீசன்டாக இருந்தாலும், தன்
குடும்பத்தை தூர வைத்துக்கொண்ட முஹைதீன் ஹாஜியார் பின்னால் செய்ததென்னவோ தூள்
வியாபாரம் என்பதால் நாளடைவில் சுதாவின் ராடாரில் அவரும் சிக்கிக்கொள்ள வேண்டி
வந்தது. ஒன்றரை மைல்களுக்குள் வளர்ந்து வரும் நவ்பருக்கும் இது தலையிடியாக
இருந்தாலும் ஒரு மைல் தூரத்தில் கசிப்பு விற்று பிழைப்பு நடத்திய கனகுவின்
மைத்துனன் சிங்கராசுவுக்கோ, சத்தமேயில்லாமல் செட்டித்தெருவில் இராணுவ உதவியுடன்
வளர்ந்து வந்த சுது மஹத்தயாவுக்கோ இது பிரச்சினையாக இருக்கவில்லை.
சராசரி
வாழ்க்கை கூட இல்லாத வறுமை நிலையில், நிலையான
கட்டிடத்தில் அமைந்த இருப்பிடம் கூட இல்லாவிடினும் சட்டையைக் கழட்டினால் சிக்ஸ்
பெக்குக்கு பதிலாக உடம்பெல்லாம் கீறல் விழுந்த நிலையில் மபாசும், தைரியசாலியான
பவ்மியும் கூடவே இருந்த தைரியத்தில் முஹைதீன் ஹாஜி எல்லை மீறிச் சென்று ஒரு
கட்டத்தில் உள்ளூர் இளைஞர்களைப் பகைத்துக் கொண்டதோடு எச்சரிக்கவும் செய்தது
அவர்களையும் பாதித்தது. இங்கு எழுந்த நஸ்ருல் நாளடைவில் வெற்றிடத்தை நிரப்பினாலும்
இவர்களும் இந்த வலைக்குள் சேர்ந்து கொள்ள மீண்டும் மாளிகாவத்தை சுதா – கிறிஸ்டோபர்
காரணமாகிறார்கள்.
நவ்பரின்
ஈகோ பழைய சோனகத் தெருவுக்கு அருகே கற்குழி பாதையில் வைத்து முஹைதீன் ஹாஜியாரைக்
காவு கொண்ட போது வீறு கொண்டெழுந்த சென்ட்ரல் ரோட் இளைஞர்கள் ஊருக்குள் வந்து
ஹாஜியாரைத் தூக்கிச் செல்லும் வரை பார்த்திருக்க முடியுமா? என்று
தெருவில் கூக்குரலிட்ட மறு நாள் கடத்தப்படுகிறார்கள்.
நஸ்ருலின்
கூடப்பிறந்த சகோதரன் பஜியும், ஹாஜிக்கு
விசுவாசமாக இருந்த பவ்மியும் கடத்தப்பட்டு மாளிகாவத்தை அடுக்கு மாடித்தொடரின்
மூன்றாம் தட்டிலிருந்து தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு ஏறத்தாழ மரணத்தின்
விளிம்பிலிருந்து மன்னிப்புக் கோரி, மன்றாடி
விடுதலை பெற்று வருகிறார்கள்.
இக்கால
கட்டத்தில் புலிகள் இயக்கம் தமது இனத்தையே அடக்கி, கொன்று, அட்டகாசம்
புரந்தது போன்று தமது செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் அல்லது
சந்தேகிப்பவர்களையெல்லாம் மாளிகாவத்தை டீமும் தாக்க ஆரம்பித்தது. அப்படித்
தாக்கியதில் பிரதானமானது மாளிகாவத்தை அடுக்கு மாடித்தொடரில் நீண்ட காலமாக
குடியிருந்து வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் மகன் குற்றுயிராய்
மரணத்தின் வாசல் வரை சென்று செயலிழந்த நிலையில் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்றும்
இடம்பெற்றது.
ஒரு
குடும்பம் வாழ்ந்த வீட்டுக்குள் புகுந்த டீம் அந்த இளைஞனின் உடலில் இனியும்
வெட்டுவதற்கு இடமில்லை எனும் அளவுக்கு அவனை வெட்டித்தள்ளியமை குறிப்பிடத்தக்கது.
சென்ட்ரல்
ரோட்டில் தன் தம்பியைக் கடத்தியவர்களுக்கு எதிராக கிளம்பும் எண்ணத்தில் வெளி வந்த
நஸ்ருலுக்கோ முதலில் உள்ளூர் பகையைத் தீர்க்கும் தேவை வந்தது. அதன் விளைவாக ஆமை
பாரூக் அவரது மருமகன் ரமீஸ் போன்றவர்களை முதலில் அடக்க விளைந்த இவர்கள்
மாளிகாவத்தையிலிருந்து வந்தவர்களோடு சேர்ந்து உள்ளூரில் ஆட்சியைப் பிடிக்க
முனைந்தார்கள்.
முஹைதீன்
ஹாஜி இல்லாத வெற்றிடத்தைப் பிடிக்க ஆமை பாரூக் குழு முயன்றபோது ஏற்பட்ட சண்டையில்
பல வெட்டுக் குத்துக்கள் நடந்தாலும் நாட்டுத் துப்பாக்கியை வாயில் வைத்து சுட
முனைந்த போது அது வெடிக்காமல் போனதால் தப்பிக்கொண்டார் ரமீஸ். இருந்தலும் அவருடைய
காலம் டீம் வடிவில் வந்திறங்கி, அவரோடு
ஒன்றாக விளையாடிப் பழகிய நஸ்ருலும் சேர்ந்த அவரை சுட்டுக் கொன்ற நிலை உருவானது.
புதுக்கடை, மாளிகாவத்தை, சென்ட்ரல்
ரோட், கிரான்ட் பாஸ் என அனைத்து பகுதியிலிருந்தும் முஸ்லிம்
இளைஞர்கள் கூட்டு சேர்ந்ததால் சுதா – கிறிஸ்டோபரின்
இருப்பும் கேள்விக்குறியானது என்னவோ அந்த நேரத்தில் உண்மைதான்.
மறுபுறத்தில்
வளர்ந்து வரும் இளைஞர்களை முன்னாள் மேயரின் மகன் தனது தனிப்பட்ட கோப தாபங்களைத்
தீர்ப்பதற்காக குருநாகல் வரை அனுப்பினார், அவர்கள்
ஆயுதங்களோடு பொலிசில் சிக்கிய போது ஒரு சிலரை வெளியில் எடுத்தாலும் முக்கியமாக
மாட்டிக்கொண்ட பஜியையம் பவ்மியையும் கை விட்ட நிலையிலேயே, சிறைச்சாலையில்
வைத்து நவ்பர் இவர்களை எதிர் நோக்க விளைந்தது.
சாப்பாட்டுக்காக
தரப்படும் அலுமினிய “ப்ளேட்டை” வளைத்து
நெளபரது கண்ணைக் குத்தியதாக பிற்காலத்தில் இந்த இளைஞர்கள் பற்றி வெளியில் பேச்சு.
அந்த அளவுக்கு குரோதம் வளர்ந்து தலை விரித்தாடியது.
ஆனாலும், பொட்ட
நெளபராகிப் போன நெளபரின் வளர்ச்சியை, பொலிஸ்
மற்றும் அரசியலில் அவன் பெற்று வந்த செல்வாக்கை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை அந்த
நாளில் யாருக்குமே இருக்க வில்லை என்பதால் தன் பண பலத்தால் நவ்பர் சென்ற தூரம்
விபரிக்க முடியாதது. நாளடைவில், சுதா
– கிறிஸ்டோபருக்கும் நவ்பரின் உதவி கிடைத்தது.
எதிரியின்
எதிரி நண்பன் எனும் அடிப்படையில் டீமை இல்லாதொழிப்பதில் பொலிஸ் பலத்தையும் இவர்கள்
பிரயோகிக்க முற்பட்டபோது மாளிகாவத்தை சற்று உக்கிரமாகவே நின்றது. ஆயினும் அது
எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் எனும் கேள்வி இருந்து கொண்டே வந்தது. காரணம், முஸ்லிம்
“டீம்” இறுதியில் முஸ்லிம் மக்களுக்கும், வியாபாரிகளுக்குமே
பெரும் தலையிடியாக உருவெடுக்க ஆரம்பித்தது.
கையில்
துப்பாக்கியுடன் இளைஞர்கள் வலம் வர ஆரம்பித்து விட்டார்கள், இதில்
யார் யாருடைய டீம் என்று தெரியாத நிலை வளர ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஒரு புது
டீம், புது தலைவர், புது
தொண்டர்கள் என எண்ணிலடங்காத டீம்கள் உருவாக ஆரம்பித்தன. உந்தப்பட்ட இளைஞர்கள் சில
வேளைகளில் சினிமா பாணியில் சனப்புழக்கமான இடங்களில் துப்பாக்கி சண்டையெல்லாம்
நடத்தினார்கள்.
97 – 98 பகுதியில்
கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியில் வைத்து கிறிஸ்டோபரை விரட்டி விரட்டி சுட்டார்கள்
ஆனாலும் அவன் தப்பிக்கொண்டான். ஒரு சில சண்டியர்களைப் போட்டுத் தள்ளியதில்
டீமுக்கு வெற்றி கிடைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் மறு புறத்தில் இதே டீம்
இருக்கும் பாதாள உலகத்தை அழிப்பதாகக் கூறிக்கொண்டு இன்னொரு பாதாள உலகத்தை உருவாக்கிக்
கொண்ட அபாயத்தின் தொடர் விளைவுகள் தான் மாமஸ்மி வரை வந்து நிற்கிறது.
கத்தியெடுத்தவன்
எல்லாம் சண்டியனான நிலையில், வேறு வேலைவெட்டியில்லாத வாலிபர்கள் எல்லாம் டீம் ஆனார்கள்.
நாளடைவில் அவர்களுக்கு வருமானம் தேவைப்பட்டது, உழைக்கும்
இடங்களுக்குச் சென்றால் பொலிஸ் பிடித்து விடும் என தமக்குள்ளேயே இருந்த பயத்தால்
வெளிச்செல்லாத ஒரு நிழல் உலக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அதன் விளைவில் தமது
வருமானத்துக்காக கப்பம் பெற ஆரம்பித்தார்கள். அதுவும் சிங்கள வியாபாரிகளிடமிருந்து
அல்ல, முஸ்லிம் வியாபாரிகளிடம் மாத்திரம்.
நல்ல
நோக்கத்துக்காக ஆரம்பித்த டீமில் கப்பமா? என
ஒரு பக்கம் கேள்வியெழுந்தாலும், ஏற்கனவே
தமது இருப்புக்காக தூள் வியாபாரம் செய்த பெரும் தலைகளும் டீமில் இருந்ததால்
விடயங்கள் இடியாப்பச் சிக்கலாகின. இருந்தாலும், கப்பம்
வாங்கிய “கெட்ட” டீமை
“நல்ல” டீம் வேட்டையாட ஆரம்பித்ததில் இருந்து நிழல் உலகுக்குள்ளேயே
யுத்தம் வெடித்தது.
இது
நாளடைவில், அதிகாரப் போட்டியாகவும், ஆதிக்கப்போட்டியாகவும்
வளர்ந்து வந்தது. இத்தனைக்கும் டீம் எனும் பெயரில் முஸ்லிம் மக்களுக்காக இவர்கள்
எதையும் செய்ததில்லை, மாறாக முஸ்லிம் வியாபாரிகளைத் துன்புறுத்தியதும், பயமுறுத்தியதுமாக
தமது இருப்பை இவர்கள் காக்க முனைந்தபோது வாழ்வாதாரத்துக்காக மற்ற சண்டியர்களைப்
போலவே இவர்களும் நிழல் உலக வர்த்தகங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டது.
விளைவு? ஒரு
டீமாக இருந்தவர்கள் பல டீம்களாக உடைந்தது மாத்திரமல்லாது ஒருவரை ஒருவர் கொல்ல
ஆரம்பித்தார்கள், கொன்றும் குவித்தார்கள். இறுதியில் பெரிய பள்ளிவாசலுக்கள்
தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும் போது கூட இந்த டீம் பிரச்சினையால் ஒருவர்
கொல்லப்படுகிறார்.
இந்த
நிழல் உலக வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கு அப்போதும் அதற்குப் பின்னும் வெளிவரத்
தெரியவில்லை. சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றாலும் பலர் உள்ளூரிலேயே
அநியாயமாக மாட்டிக்கொண்டதுடன் இவர்களை அழிக்கவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “யுனிட்” டின்
வேட்டைக்குப் பலியானார்கள்.
ஒரு
புறம் தமக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்தது போக மறு புறம் அரசாங்க வேட்டையிலும்
இவர்கள் பலியாகிக்கொண்டிருந்ததனால் எஞ்சியிருந்தவர்களுக்கு சிதறியோடுவதைத் தவிர
வேறு வழியிருக்கவில்லை.
இதற்கிடையில்
மத்திய கொழும்பில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதாலும் பெரும்பாலும் முஸ்லிம்கள்
மத்தியில் டீம் தொடர்பான அச்சம் ஒரு வகையில் இருந்ததனாலும் இவர்கள் ஆளுமையை
அரசியலும் பாவிக்க விளைந்தது. அதன் ஒரு வடிவத்தை மாமஸ்மி சொல்லிச்
சென்றிருக்கிறார். பல விவகாரங்கள் வெளிவராமலே புதைந்து போகும்.
ஆனாலும்
இதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பிருப்பதை மறுக்க முடியாது. சிங்கள
அரசியல் வாதிகளும் டீமைப் பாவித்தார்கள், கொந்தராத்துக்
கொலைகளுக்காக, கட்டப்பஞ்சாயத்து மற்றும் ஆட்கடத்தல்களிலும் ஏதோ ஒரு டீம்
இயங்கத்தான் செய்தது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு தொழில், வருமானம்
தரும் வாழ்க்கையாக மாறியதுதான் துரதிஷ்டம்.
இந்த
வரலாறு இனியும் தொடரலாம் இன்னும் பல மாமஸ்மிக்கள் உருவாகலாம், இந்த
சமூகத்தின் இளைஞர்கள் சீர்கெட்டுக்கொண்டே போகலாம், அதற்கான
அடிப்படையை அறிந்து இயங்கும் அரசியல் தலைமையோ சமூக நிர்வாகமோ நம்மிடம் இல்லாத
நிலையில் மார்க்க அறிஞர்களையும் குறை சொல்ல முடியாது, குறை
சொல்லமலும் முடியாது.
- க்ரைம் குத்தூஸ்

Post a Comment