மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (Three Jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராகக் கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக் குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.
பவுத்த தத்துவங்களைப் பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்குத் திரும்பியிருக்கிறது. 1968-இல் பிறந்த விராத்து, பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001-லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003-இல் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010-ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை உலகம் முழுக்க பரவலாகப் பரப்பினார் (அவரது கருத்துக்களில் சிலவற்றை பெட்டிச் செய்தியாகக் காண்க). மியான்மர் அதிபர் தைன் சைன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வினோதமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கே வசிக்கும் வங்காளர்களை (பங்களாதேஷ் பிரச்சினையின்போது மியான்மருக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்) நாடு கடத்துவதுதான் அவரது திட்டம். இதைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக 969 இயக்கம் மூலமாக புத்த துறவிகளை திரட்டி, மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார் விராத்து. இதன் விளைவாக அடுத்த சில நாட்களில் ராக்கின் மாகாணத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினரிடையே பகை நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டே இருந்தது. விளைவாக, கடந்த மார்ச் மாதம் ஒரு பவுத்த துறவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். வெடித்தது வன்முறை வெடிகுண்டு. மேலும் 14 பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் கடை, வீடு மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாயின. 969 தூண்டிவிடும் வன்முறையால் ராக்கின் மாகாணத்தில் மட்டுமே கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 200 இஸ்லாமியர் கொல்லப்பட்டு விட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அகதி முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்திக்க விடாமல் மியான்மர் அரசாங்கம் அராஜகம் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையில் மெஜாரிட்டியான பவுத்தர்களின் ஆதரவோடு, சிங்கள அரசு 2009-இல் விடுதலைப்புலிகளை மொத்தமாக துடைத்தெடுத்து வீழ்த்தியதற்குப் பிறகே பவுத்த தேசியம் என்கிற கருத்துருவாக்கம் மியான்மரில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையாலோ, அரசாலோ தங்களுக்கு எந்தப் பாதுகாப்புமில்லை என்று இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பல இஸ்லாமிய தொழிலதிபர்கள் ஏற்கெனவே பறந்துவிட்டார்கள். இச்சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ‘டைம்’ பத்திரிகை 969 தலைவரான விராத்துவின் படத்தை அட்டையில் இட்டு, ‘பவுத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று தீவிரமான விமர்சனத்தை வைத்தது. பர்மாவின் பின்லேடன் என்றும் இவரை சுட்டிக் காட்டியிருக்கிறது. இக்கட்டுரையை தொடர்ந்து, ‘டைம்’ பத்திரிகைக்கு மியான்மரில் இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவைப் பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இன வன்முறையைக் கண்டிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள். விராத்துவின் விபரீதக் கருத்துக்கள்
|
969 பவுத்த பயங்கரவாதத்தின் முகம்
Labels:
இனவாதம்

+ comments + 1 comments
பயங்கர வாதத்தின் மறு உருவம்
Post a Comment