அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மல்வத்தை – அஸ்கிரிய மஹாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நீக்க மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று கோரி, தேசிய சங்க சம்மேளனம் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர்களை சந்தித்தது. இதன்போதே மஹாநாயக்கர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் மாகாண சபை மற்றும் மாகாண சபை முறைகள் பிரயோசனம் அற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்த பீட மஹாநாயக்கர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நீக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தாதி சேவையில் மேலும் 3025 பேர் இணைப்பு-
மேலும் 3025 மாணவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார அமைச்சின் இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் தரமான தாதி சேவையை வழங்கும் நோக்கில் 6025 தாதி மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 3000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுடைய பெயர் விபரங்களும் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டன.
தற்போது நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் 28,000 தாதியர்கள் கடமை புரிவதாகவும் அதனை 46,000 மாற்றுவதே தமது நோக்கம் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை கட்டமைப்பில் சிறந்த சேவையாற்றும் தாதியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment