பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி – வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு



இம்முறை கிளிநொச்சியில் வரலாறு காணாத வகையில், மிகப்பெரியளவில் வெசாக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். சிறிலங்காவில் வெசாக் வரும் 24ம் நாள் கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி கிளிநொச்சியில் பிரமாண்டமான வெசாக் பந்தல் மற்றும் அலங்காரங்களை மேற்கொள்வதற்கு சிறிலங்காப் படையினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மௌரியப் பேரரசரான அசோகரின் மூத்த மகனான மகிந்த தேரர் 2319 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு வந்ததாகவும், அதனை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு பெருமெடுப்பில் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவம், விமானப்படை, காவல்துறை என்பன இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரிய பந்தலை அமைக்கப்பட்டு வருகிறது.

இது வரும் 24ம் நாள் தொடக்கம் 31ம் நாள் வரை காட்சிக்காக திறக்கப்பட்டிருக்கும்.

இதற்காக சிறிலங்கா படையினரிடம் மட்டுமன்றி, சிறிலங்கா முழுவதிலும் இருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது.

அசோகரின் தத்துவங்களை வெளிப்படுத்தும் வகையில், அமைக்கப்படவுள்ள இந்த அலங்காரப் பந்தல் 38 அடி உயரத்தையும், 42 அடி நீளத்தையும் கொண்டதாக இருக்கும் என்றும், இதில் 30 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்படும் என்றும் சிறிலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரமாண்ட அலங்காரப் பந்தலை அமைக்கும் பணியில் சிறிலங்கா இராணுவப் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் ஏ9 வீதியில், மாங்குளம் சந்தி தொடக்கம், கொக்காவில் வரையான பகுதியை பௌத்த கொடிகள், வெசாக் கூடுகளால் அலங்கரிக்கவும் சிறிலங்காப் படையினர் தயாராகி வருகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger