சிங்கராஜா வனம்
யுனெஸ்கோ அமைப்பினால் உலகின் இயற்கை பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிங்கராஜா வனப்பகுதியின் ஊடாக சாலை அமைக்கும் சர்ச்சைக்குரியத் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல்கொடுத்துள்ளனர்.
சிங்கராஜா வனப் பகுதியின் ஊடாக சாலை ஒன்றை போடும் பணிகளை இலங்கை அரசாங்கம் மறுபடியும் துவங்கியுள்ளது என்று குற்றம்சாட்டி சுற்றாடல் மற்றும் இயற்கைச்சூழல் ஆய்வு மையம் என்ற அமைப்பு யுனெஸ்கோவுக்கு கடிதம் எழுதியிருந்தது.
சூரியகந்த முதல் இலும்பகந்த வரையில் சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும், சாலை அமைக்கும் பணிகளை தற்போது தனியார் நிறுவனம் ஒன்று செய்துவருவதாகவும் இக்கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிங்கராஜா வனத்தின் ஊடாகச் செல்லாமலேயே போகக்கூடிய இந்த இரண்டு ஊர்களுக்கும் இடையிலான மாற்றுப்பாதைகள் இருக்கின்றன என்பதை சுற்றாடல் மற்றும் இயற்கைச்சூழல் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியிருதது.
யுனெஸ்கோ நிறுவனம் மீண்டும் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அக்கடிதம் கோருகிறது.
ஏராளமான விலங்கினங்களும், தாவரங்களும் வாழும் இந்தப் பசுமையான வனத்தின் ஊடாக சாலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் முயன்றிருந்தது.
அது பற்றி யுனெஸ்கோவிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து யுனெஸ்கோ இலங்கை அரசாங்கத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருந்தது.
இதனையடுத்து சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2011ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தன.
ஏற்கனவே இருந்துவருகின்ற ஒரு பாதையை மேம்படுத்துவதற்குத்தான் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதே ஒழிய காட்டை அழித்து புதிய பாதை போட முயற்சிக்கவில்லை என இலங்கை அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
Post a Comment