தென்னாசிய நாடுகளின் தேர்தல்களும் குடும்ப வாரிசுகளின் அரசியலும்

இவ்வாண்டு தென்னாசியாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் தேர்தல்களை நடாத்துகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவும், 2016ல் சிறிலங்காவும் தேர்தல்களை நடாத்தவுள்ளன. இத்தேர்தல்களில் இந்த நாடுகளின் பிரபலம் பெற்ற குடும்ப அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்துவார்கள்.

இவ்வாறு Ben Doherty [SOUTH ASIA CORRESPONDENT FOR FAIRFAX MEDIA] எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் என்பது 'மாற்றம்', 'முன்னேற்றம்', 'சீர்திருத்தம்' போன்றன தொடர்பில் மேற்கொள்ளப்படுவதாக இதன் பரப்புரைகளின் போது வாக்குறுதி வழங்கப்படுகின்றன. ஆனால் தென்னாசியாவில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான தேர்தல்களின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல் வேட்பாளர்களின் பட்டியல்களில் காணப்படும் பழக்கமான, நன்கறிந்தவர்களின் பெயர்களால் நிரப்பப்படுகின்றன.

அதாவது ஆசியாவின் அரசியலில் நீண்ட காலமாக மகன்கள், மகள்கள், துணைவியர் போன்ற குடும்ப உறுப்பினர்கள் மாறிமாறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். எழுத்தறிவு வீதம் குறைந்த உலக நாடுகள் சிலவற்றில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மக்களுக்கு பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை மேற்கொள்வதன் மூலம் தமது 'வாக்கு வங்கிகளை' அதிகரிக்கின்றன. இந்த நாடுகளில் நாட்டின் தேர்தல் சார் கோட்பாடு என்ன என்பதை விட தேர்தலில் போட்டியிடுபவர்களின் அரசியற் செல்வாக்கு அதிகமாக உள்ளபோது மக்கள் தமது வாக்கை வழங்குகின்றனர்.

பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக தற்போது, ஆட்சியிலிருப்பவர் படுகொலை செய்யப்படாமல் அல்லது அட்சிக்கவிழ்ப்புச் செய்யப்படாமல் தேர்தல் ஒன்று நடாத்தப்படுகிறது. தற்போது பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது தனது வேட்பாளராக தற்போதைய அதிபர் அசிப் அலி சர்தாரியின் மகனான பிலாவல் புட்டோவை நிறுத்தியுள்ளது. இவர் இக்கட்சியின் நிறுவனரும், பாகிஸ்தானின் முன்னாள் அதிபருமான சல்பிகார் அலி புட்டோவின் பேரனாவார். இவரது தாயார் பெனாசீர் புட்டோ 2007ல் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இரு தடவைகள் பாகிஸ்தானியப் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

25 வயதை அடைகின்ற இளைஞனான பிலாவல் புட்டோ கடந்த ஆண்டு அவரது தாயாரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வின் போது தான் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக அறிவித்தார். தனது கட்சிக்கு எதிராகச் செயற்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களை நீதிமன்றில் நிலைநிறுத்துவதே தனது நோக்கம் எனவும், இந்த எதிரிகள் பாகிஸ்தானின் ஜனநாயகத்திற்கு இடையூறாக காணப்படுவதாகவும் இவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலை விளைவிக்கின்ற வன்முறைகளில் ஈடுபடுவதற்கான ஆபத்து உள்ளதாகவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானியப் பிரதமராகப் பதவி வகித்து பின்னர் படுகொலை செய்யப்பட்ட தனது தாயாரான பெனாசீர் புட்டோ மற்றும் பேரனாரான சல்பிகார் அலி புட்டோ மற்றும் நாட்டின் அதிபரும் தனது தந்தையாருமான அசிப் அலி சர்தாரி ஆகியவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி பிலாவால் புட்டோ தற்போது பாகிஸ்தானிய அரசியலில் நுழைந்து கொண்டதுடன், தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். அதாவது இவரது குடும்பத்தவர்கள் பாகிஸ்தானுக்காக செய்த உயிர் அர்ப்பணிப்பானது இவர் தேர்தலில் முதன்மை பெறுவதற்கு துணைபோயுள்ளது.

"ஒவ்வொரு சவால்களும் இரத்தத்தால் சூழப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இழப்பைச் சந்திப்பீர்கள். எத்தனை புட்டோக்களையும் நீங்கள் கொன்றாலும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பல புட்டோக்கள் எழுவார்கள்" என பிலாவால் புட்டோ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக பிலாவால் புட்டோ பாகிஸ்தானியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்ற போதிலும் பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு இவர் புதிரான மனிதராகவே காணப்படுகிறார். இவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் மத்தியில் வெளிவருவது மிக அரிதாகும். இவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு வெளியே வேறு நாடுகளில் கழித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பிலாவால் புட்டோ ஆங்கில மொழியையே அதிகம் பேசுவார். இவர் உருதுமொழியை அவ்வளவு சரளமாகப் பேசமாட்டார்.

இவர் ஊடகங்களில் ஒருபோதும் நேர்காணல்களை வழங்கவில்லை. லாகூரின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புட்டோவின் தனிப்பட்ட வாசஸ்தலமான 'Bilawal House' 90 மில்லியன் டொலர்கள் செலவில் கட்டப்பட்டது என்கின்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் பிலாவால் புட்டோ ஒருபோதும் பதிலளிக்கவில்லை. இவர் பாகிஸ்தானிய ஏழை மக்களின் மனங்களைக் கவரக் கூடிய எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இவரை நாடாளுமன்றுக்கு கொண்டுவருவதற்காக அடுத்த ஆண்டு அதாவது இவரது 25வது பிறந்த நாள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக பேசப்படுகிறது. 'பாகிஸ்தானிய மக்கள் கட்சியானது புட்டோவின் பெயரால் பலம்பெற்றுள்ளது' என இக்கட்சியின் பேச்சாளர் பர்கற்றுல்லா பாபர் தெரிவித்துள்ளார்.


"பாகிஸ்தானிய மக்கள் கட்சியின் அதிகாரத்தை பிலாவல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கட்சியின் முழுமையான இலக்காகும். ஆனால் இவர் இக்கட்சியை முழு அளவில் தலைமை தாங்குவதற்கான ஆளுமையை எடுத்துக் கொள்வதற்கு சில காலங்கள் தேவைப்படும். இவர் பிரதமராகலாம். ஆனால் இதற்கு நீண்ட காலம் தேவை" என அரசியல் ஆய்வாளரான கலாநிதி ஹசன் அஸ்காரி ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அதிகார ஆட்சியைக் குடும்பத்து உறுப்பினர்கள் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதென்பது தென்னாசிய அரசியலுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. அமெரிக்க அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால், அங்கே கென்னடிக்கள், புஷ்கள், கிளின்ரன்கள் ஆட்சி அதிகாரத்தை மாறிமாறி கைப்பற்றியுள்ளனர். இதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் லீ பென்ஸ், டீ கௌலஸ், மிலிபாண்ட்ஸ் என குடும்ப உறுப்பினர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். அவுஸ்திரேலியாவிலும் கூட டௌனர்கள், கெய்ன்கள், பீஸ்லெய்கள், கிறீன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலிருந்துள்ளனர்.

ஆனால் ஆட்சி அதிகாரமானது பரம்பரை பரம்பரையாக கைப்பற்றப்படுவதானது தென்னாசிய நாடுகள் பலவற்றில் மிக அதிகம் காணப்படுவதற்கான காரணங்கள் பலவுள்ளன.

அதாவது அரசியல் படுகொலைகள் தென்னாசியாவில் அதிகம் காணப்படுவதால் இவ்வாறான பரம்பரை அரசியல் ஆட்சி அதிகரிக்கிறது. இதேபோன்று இந்த நாடுகளின் எழுத்தறிவு வீதம் மிகவும் குறைவாகக் காணப்படுவதால் மில்லியன் கணக்கான வாக்குகள் பிரபலமான அரசியல் தலைவர்களின் பெயரால் மோசடி செய்யப்படுகின்றன. தென்னாசிய நாடுகள் பலவற்றில் தேர்தல்கள் நடைபெறும் போது உணவு அல்லது எரிபொருள் போன்ற அற்பப் பொருட்களை மக்களுக்கு வழங்கி அதன் மூலம் வாக்கு வேட்டைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

"பாகிஸ்தானிய கிராமங்களில் அந்த முழுக் கிராமங்களும், முழுக் குடும்ப உறுப்பினர்களும் தமது வாக்குகளை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அல்லது அரசியல் குடும்பத்திற்கு மட்டுமே வழங்குவதைக் காணலாம்" என Daily Ash-Sharq என்கின்ற உருது மொழி மூல பத்திரிகையின் ஆசிரியரான ரஷாக் சிஸ்ரி தெரிவித்துள்ளார்.

"அவர்கள் எல்லோரும் ஒரே விதமாகவே வாக்களிக்கிறார்கள். ஏனெனில் இவர்களது கிராமங்களுக்கு தேர்தல் பரப்புரையின் போது வரும் அரசியல்வாதிக்காக பாகிஸ்தானிய கிராம மக்கள் வாக்களிக்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றுவது மிகவும் கடினமானது" என ஆசிரியர் ரஷாக் சிஸ்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசிய நாடுகள் சிலவற்றில் அதிகாரம் மிக்க அரசியற் பின்னணியானது தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது மிகச் சாதரணமான காரணியாகும். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி மிக அதிகமாக உள்ள சமூகங்களில் அரசியலில் பங்குபெறும் வழியானது பலருக்கு மூடப்பட்டுள்ளது. சிலருக்கே இந்த வழி திறந்துள்ளது.

அரசியல் உறுதியின்மை, ஊழல்கள், அடுத்த கட்ட தலைமுறைக்குச் சொந்தமான இடத்தை மட்டும் அரசாங்கம் பாதுகாத்தல், அரசியல் பாரபட்சம் போன்றன நாட்டின் அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக காணப்படுகின்றன.

தேர்தல்கள் ஜனநாயக வழியில் மேற்கொள்ளப்பட்டு மக்கள் தமக்கான ஆட்சியாளர்களைத் தாமே தெரிவு செய்வதற்கான ஜனநாயக உரிமையைக் கொண்டுள்ளனர். இது நேர்மறையான சிந்தனையாக இருக்க முடியும். ஆனால் இவ்வாறான ஜனநாயக வழிமுறை பாதிக்கப்பட்டு மக்கள் முழுமையாக இதில் பங்குபெற அனுமதிக்காவிட்டால் இது எதிர்விளைவைக் கொடுக்கும்.

இவ்வாண்டு தென்னாசியாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் தேர்தல்களை நடாத்துகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவும், 2016ல் சிறிலங்காவும் தேர்தல்களை நடாத்தவுள்ளன. இத்தேர்தல்களில் இந்த நாடுகளின் பிரபலம் பெற்ற குடும்ப அரசியல்வாதிகள் அதிகாரம் செலுத்துவார்கள்.

பங்களாதேசில், இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் பங்குபெறும் பிரதான அரசியற் கட்சிகளை பெண்கள் தலைமை தாங்குகின்றனர். அதாவது அவாமி லீக் கட்சியை ஷேக் கசீனாவும், பங்களாதேஸ் தேசியக் கட்சியை காலிடா சியாவும் தலைமை தாங்குகிறார்கள். இவர்களில் ஒருவர் பங்களாதேஸ் அரசியலில் பிரபலம் பெற்ற முன்னாள் தலைவர் ஒருவரின் மகளாவார். மற்றையவர் முன்னாள் தலைவர் ஒருவரின் மனைவியாவார். இவ்விரு பெண்களும் முன்னர் நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்களாவர்.

இதேபோன்று சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பம் அரசியலில் முதன்மை இடத்தில் உள்ளது. அரசியல் யாப்பு அனுமதிக்காது விட்டாலும் கூட 2016ல் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடுவார். ஏற்கனவே இவரும் அரசியல் அதிகாரத்திலுள்ள இவரது மூன்று சகோதரர்களும் சிறிலங்காவின் வரவு செலவுத் திட்டத்தின் 70 சதவீதத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளனர். அத்துடன் மகிந்தவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் தற்போது அரசியலில் வளர்ந்து வருகிறார்.

இவ்வாண்டு நேபாளத்தில் தேர்தல் நடாத்தப்படவுள்ளது. பூட்டானிலும் இரண்டாவது தடவையாக தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இவ்விரு நாடுகளிலும் குடும்ப வாரிசுகள் தொடர்ந்தும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றனர்.

மாலைதீவில் வரும் செப்ரெம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிபரான மொகமட் வகீட் தனது அமைச்சரவைக்கு மாலைதீவின் முன்னாள் சர்வதிகாரியான மயூமுன் கஜூமின் மகளை நியமித்துள்ளார்.

மியன்மாரில், ஜெனரல் ஆங்சானின் மகளான ஆங் சான் சூஜி அரசியல் நடவடிக்கையில் பங்குபற்றுகிறார். இவர் பல ஆண்டுகாலம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் தற்போது மியான்மாரின் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கிறார்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் பின்னர் குடும்ப ஆட்சி நிலவுகிறது. அடுத்த ஆண்டில் இங்கு நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டு பிரதமராக வரலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இவர் பதவியில் அமர்ந்தால் இவரது பரம்பரையின் வாரிசாக பதவியைத் தக்கவைத்துக் கொள்கின்ற நான்காவது நபராகக் காணப்படுவார்.

ராகுல் காந்தி ஒரு பத்தாண்டாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தார். கடந்த மாதம் இவர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். "பிரதமராக வருவது எனது முதன்மையான நோக்கல்ல" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"இவ்வாறான கபடமற்ற பேச்சானது இந்தியாவின் மிகச் சிறந்த நலனாக இருக்கலாம். ஆனால் உண்மையான ஜனநாயகம் என்பது குடும்ப வாரிசுகளின் ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் சுதந்திரமாக செயற்பட வேண்டும். நீண்ட கால அடிப்படையில் நோக்கில் ஒரு நாட்டின் ஆட்சியானது பலமானதாக காணப்பட வேண்டிய தேவையுள்ளது. அதாவது ஒரு குடும்பத்தை விட நாட்டின் ஆட்சி பலமானதாக அமைய வேண்டும்" என அரசியல் ஆய்வாளரான கலாநிதி றிஸ்வி வலியுறுத்துகிறார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger