ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மலேசிய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்
மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை முன்னெடுப்பதாகக் கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி அமைச்சராகிறார்.
அண்மையில் அங்கு நடந்துமுடிந்த தேர்தலில், ஆளும் தேசிய முன்னணிக்கு ஹிண்ட்ராஃப் தனது ஆதரவை வழங்கியது.
அதில், ஹிண்ட்ராஃப் தலைவர் வேதமூர்த்திக்கு பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்ற நஜீப் ரசாக் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தமது அமைச்சரவையை அறிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதை பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்திய வேதமூர்த்தி, இதன்மூலம் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை என்றும் கூறினார்.
இதுவரை இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளுக்காக வெளியிலிருந்து போராடி வந்த தமது அமைப்பு இனி அரசுக்கு உள்ளேயிருந்து போராடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்த தேசிய முன்னணி, அதை நிறைவேற்றும் வகையில் ஒரு சிறப்புக் குழுவை நியமித்து அதை மேற்பார்வை செய்யும் அமைப்பின் தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வேதமூர்த்தி கூறுகிறார்.
'ஹிண்ட்ராஃப் கோரிக்கைகள் நிறைவேறும்'
பல ஆண்டுகளாக போராடிய ஹிண்ட்ராஃபுக்கு அதன் கோரிக்கைகளை செயல்படுத்த கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகவே அமைச்சுப் பதவியை தான் பார்ப்பதாகக் கூறும் அவர், நாடற்ற நிலையில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
தான் அமைச்சரவையில் சேர்ந்தாலும், ஹிண்ட்ராஃப் அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக மாறாது எனவும் வேதமூர்த்தி உறுதியாகக் கூறுகிறார்.
2007-ம் ஆண்டில் இந்திய மக்களின் உரிமைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, ஹிண்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த வேதமூர்த்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் விடுதலையானவுடனேயே நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்துவந்த வேதமூர்த்தி, அண்மையில் மீண்டும் மலேசியாவுக்குச் சென்றபின்னர், கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளுங்கட்சிக்கே ஆதரவளித்தார்.

Post a Comment