நைஜல் கிளார்க்
நிறுவனங்களை தொலைபேசியில் அழைக்கும்போது பலவிதமான விருப்பத் தெரிவுகளை அழுத்தச் சொல்லும் தொல்லைமிக்க கணினி அறிவிப்புகளில் இருந்து மக்கள் தப்பிக்க உதவும் புதிய இணையதளம் ஒன்றை பிரிட்டனில் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய தொல்லை தரும் அனுபவம்தான் இது.
வங்கிக்கோ, காப்பீடு நிறுவனத்துக்கோ, வரி அலுவலகத்துக்கோ அவர்கள் தருகிற ஒரு தொலைபேசி இலக்கத்தை நீங்கள் அழைக்கும்போது, எதிரில் மனிதக் குரலில் கணினிதான் பேசும்,
உங்களுக்கு இந்த சேவை வேண்டுமானால் இந்த எண்ணை அழுத்தமும் அந்த சேவை வேண்டுமானால் அந்த எண்ணை அழுத்தவும் என்று பல சுற்று தெரிவுகளை கடந்துதான் முகவர் மனிதர் ஒருவரிடம் பேச முடியும்.
பொறுமை இழக்கச்செய்கிற இந்த விஷயங்களால் மிகவும் வெறுத்துப்போன ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் தகவல்தொழில்நுட்ப மேலாளர் ஒருவர், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து, ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.
தொலைபேசியில் அழைக்கும்போது எந்த சேவைக்கு எந்த எண்ணை அழுத்த வேண்டும் என்று நூற்றுக்கணக்கான ஐக்கிய ராஜ்ஜிய நிறுவனங்களுக்கான பட்டியல் ஒன்றை இவர் தயாரித்துள்ளார்.
கிளார்க்கும் பிற தகவல்தொழில்நுட்ப நிபுணர்களுமாக சேர்ந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகளைச் செய்து, எந்த சேவைக்கு எந்த தெரிவு எண் என்று சிரத்தை எடுத்து குறிப்பெடுத்துக்கொண்டு அந்தத் தரவுகளை வைத்து pleasepressone.com என்ற இந்த இணைதளத்தை உருவாக்கியுள்ளனர்.
கணினி மயப்பட்ட இந்த அறிவிப்புகளாலும் தெரிவுகளாலும் ஏற்படக்கூடிய தொல்லையையும் குழப்பத்தையும் கோடிகாட்டுவதாக இந்த இணைதளம் அமைந்துள்ளது.
சில நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அழைத்தால், எண்பது வெவ்வேறு தெரிவுகளைக் கேட்டுத்தான் நமக்குத் தேவையான சேவைக்குரிய முகவரை சென்றடைய முடியும் என்ற நிலை இருப்பதாக நைஜல் கிளார்க் கூறுகிறார்.
ஐந்து நிமிடங்கள் வரை கணினி பேசுவதைக் கேட்டு தெரிவுகளைத் தேர்ந்தெடுத்தால்தான் சரியான முகவரிடம் பேச முடியும் என்ற நிலை பல சமயங்களில் ஏற்படுவதுண்டு என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு காப்பீடு நிறுவனத்துக்கு தொலைபேசியில் அழைத்தபோது ஏழு தடவை வெவ்வேறு தெரிவுக்கான இலக்கங்களை அழுத்தச் சொல்லிவிட்டு கடைசியில் அந்தப் பிரிவு மூடியிருக்கிறது என்று பதில் வந்த ஒரு அனுபவம் தனக்கிருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இப்படி ஒரு இணையதளம் தேவையா என தெரிந்தவர்களிடம் யோசனைகேட்டபோது, மிகவும் புண்ணியமாய்ப்போகும் என்று பலரும் உணர்வுபூர்வமாக ஊக்குவித்ததாக இவர் தெரிவிக்கிறார்.
.jpg)
Post a Comment