14 ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட நவாஸ் ஷெரிப் மூன்றாவது தடவையாக பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் பதவியை பொறுப்பேற்பார் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் அவரது கட்சியே பெரும்பாலும் வெற்றிபெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஆனால் தனித்து ஆட்சியமைக்கமுடியாது போகும் என்பதால் அவரது கட்சி தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமையக்கூடிய நிலையே காணப்படுகிறது.அதிகாரபூர்வமற்ற முடிவுகளின்படி, நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அதிகப்படியான நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
நவாஸ் ஷெரிப்பின் கட்சியால் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஷெரிப் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நவாஸ் அவரது வீட்டில் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்.
தேர்தல் முடிவுகளை பாகிஸ்தானின் மற்ற அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் புதிய பிரதமராக பதவியேற்கப்போகின்ற நவாஸ் ஷெரிப்புக்கு தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்துள்ளார்.
இதுவரை வந்த முடிவுகளின்படி, இம்ரான் கானின் நீதிக்கான இயக்கம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ அங்கம் வகித்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, இரண்டாவது இடத்தில் இருந்தாலும் படுதோல்வி நிலையில் உள்ளது.
மதச்சார்பற்ற கொள்கை காரணமாக அந்தக் கட்சி தாலிபன்களிடமிருந்து கடுமையான அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்தக் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் இராணுவ சதிப்புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப் 14 ஆண்டுகளுக்கு முன்னர் பதவி கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment