இஸ்லாமிய கலாச்சாரமும் பௌத்த அடிப்படைவாதத்தின் சவாலும்



கலாநிதி லியனகே அமரகீர்த்தி
பொஸ்டன் குண்டு வெடிப்பை நான் கேள்வியுற்றபோது, எனக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. முதலில் ஹார்வாட்டிலிலுள்ள எனது ஆசிரியர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். இதில் யாரும் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்பது எனது இரண்டாவது எதிர்பார்ப்பு. மூன்றாவதாக, இக்குண்டு வெடிப்புக்கு முஸ்லிம் தொடர்புகள் எதுவும் இருக்கக் கூடாது என்று எண்ணினேன்.
எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க நகரான பொஸ்டன் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எந்தவொரு அடிப்படைவாதத் தாக்குதலாலும் பாதிக்கப்படக் கூடாது என்பது எனது கடைசி எதிர்பார்ப்பாக அமைந்தது. லிபரல் போக்குடைய, இடதுசாரிப் பண்பு கொண்ட, பரந்த நோக்குள்ள, புத்திஜீவித்துவ சாய்வு கொண்ட நகரம் அது.
எனது ஆசிரியர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை நான் விரைவில் தெரிந்துகொண்டேன். கவலைக்குரிய வகையில் எனது மகனின் தலைமுறையை ஒத்த யாரோ 8 வயது சிறுவன் உட்பட சிலர் இறந்து போயினர். அமெரிக்காவில் அதன் சொந்த அடிப்படைவாதிகள் உள்ளனர். அமெரிக்கா யுத்தத்திற்குச் செல்லும் போது, அது (வொஷிங்டன்), தானாகவே அடிப்படைவாதியாக மாறிவிடுகின்றது.
சர்வதேசப் பயங்கரவாதம் உண்மையிலேயே ஒரு பிரச்சினைதான். அந்தப் பயங்கரவாதத்தில் எல்லா அடிப்படைவாதிகளும் பங்காளிகள்தான். அமெரிக்காவின் கடந்த கால ஜனநாயகமற்ற செயற்பாடுகள்,தம்மபத வாசகத்தில் வருவதுபோல மாட்டுக்குப் பின்னே இருக்கும் வண்டியை பின்தொடர்வது போலத்தான் அமைந்துள்ளது. இலங்கையிலும் எமது கூட்டு கருமம் குறித்து நாம் மிகவும் அவதானமாகவே இருக்க வேண்டும்.
எனது மூன்றாவது எதிர்பார்ப்பு தனிப்பட்ட ஒன்று என்பதை விடவும், இலங்கையனாக இருப்பதனால்தான் அதிகம் என்னுள் கிளர்ந்தது. இலங்கையில் சிங்கள தேசியவாதத்தின் குரூர முகமான பொது பல சேனா (பௌத்த பல சேனை) இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகிறது. சிங்கள பெரும்பான்மையினரை ஒருபுறம் தள்ளிவிட்டு, சமூக, கலாச்சார, பொருளாதார தளங்களில் முஸ்லிம்கள் ஊடுருவி வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
இது பற்றிய தகவல் ரீதியான நிலைப்பாடு குறித்து எனக்குத் தெரியாது. (சிலவேளை இந்தத் தகவல் உண்மையாகக் கூட இருக்கலாம்.) ஆனால், சில விடயங்களை முன்மொழிகின்ற இந்த கட்டுக்கதைகள் உண்மைத் தகவல்களை விடவும் பாராதூரமானவை.
பொது பல சேனாவின் (அல்லது அந்த அமைப்பினால் கவரப்பட்ட மக்கள் கூட்டத்தினரின்) சில குற்றச்சாட்டுகள் மிகவும் அபத்தமானவை. முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில ஆடை விற்பனை நிலையங்கள் (சிலபோது ஆடை விற்பனை வலையமைப்புகள்), சிங்களப் பெண்களை கருத்தரிக்க விடாமல் தடுக்கும் விந்தையான உள்ளாடைகளை விற்பதாக இவர்கள் சொல்கின்றனர். நாட்டில் சிங்கள சனத் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான முஸ்லிம் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த ஆடை வலையமைப்பு உள்ளது என்பதே இவர்களது வாதம்.
ஸ்கொட்லாந்திலுள்ள எனது நண்பர் ஒருவர் அந்தக் குறித்த உள்ளாடையை வாங்க விரும்பினார். அவரது நாட்டில் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அது உதவும் என்பதே காரணம். ஆனால், பொது பல சேனாவின் கருத்துப்படி அந்த உள்ளாடைகள் சிங்கள பௌத்த பெண்களின் குறிப்பிட்ட அங்கங்களில் மட்டுமே செயலாற்றவல்லது. ஆகவே அவர் அதனை வாங்கவில்லை.
இவ்வாறான முட்டாள்தனமான வாதங்களுக்கு அப்பால் இவ்விரு சமூகங்களுக்கு மத்தியிலும் போதியளவு புரிந்துணர்வு உண்மையிலேயே காணப்படவில்லை. இதற்கு இவ்விரு சமூகங்களையும் சேர்ந்த சிவில் சமூகத்தினரே பொறுப்பாளிகள். இந்தப் புரிந்துணர்வின்மையே இவ்வாறான அபத்தம் நிறைந்த நகர்ப்புற கட்டுக்கதைகளை வளர்த்து விடுகின்றன. இக்கட்டுக் கதைகள் உண்மையானவையா என்பதை விடவும், அதிகம் அரசியல் தன்மை வாய்ந்தவையாகும்.
அமெரிக்காவிலும் இவை காணப்படுகின்றன. மெக்கார்த்தியிஸம் அதன் ஒரு விளைவேயாகும். இன்னும் மெக்கார்த்தியிஸம் முழுமையாக இல்லாமல் போய்விடவில்லை.
சிங்கள மக்களுக்கு எதிராக முஸ்லிம் அடிப்படைவாதிகள் இலங்கையில் எவ்வாறான கட்டுக்கதைகளைப் பரப்புகின்றனர் என்று எனக்குத் தெரியாது. இதற்குச் சமமான வேடிக்கையான கட்டுக்கதைகள் நிச்சயமாக இருக்கும். யாரும் நம்பாத நிலையில் அடிப்படைவாதங்கள் வேடிக்கை நிறைந்தவையே. ஆனால், பலரும் அவற்றை நம்புகின்றனர். சிங்கள மக்களும் நிச்சயமாக அவற்றை நம்புகின்றனர். பேஸ்புக்கை பார்ப்பதே இதற்குப் போதுமானது.
எவ்வாறாயினும், பொஸ்டன் குண்டு வெடிப்பில் முஸ்லிம் என்ற விடயம் இருக்கக் கூடாது என்று நான் எதிர்பார்த்ததற்கு, இனவாத பொது பல சேனா அதனால் நன்மையடைந்து விடும் என்பதும் ஒரு காரணம். (இக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பொது பல சேனா தலைவர்கள் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்தார்கள். பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்பதால் அமெரிக்கா அவர்கள் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கும் என்றும் ஒரு வாதம் உள்ளது. அந்த வாதம் பொய்யாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.)
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது போராட்டம் சரியானது எனவும் அது உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்திருப்பார்கள். சிங்கள அடிப்படைவாதத்தைவிட இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகம் பூகோள மயமானது.
அமெரிக்க ஏகாதிபத்தியம், உண்மையிலேயே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு துணைபோகிறது என்ற உண்மையை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய நாகரிகம் என்பது அடிப்படைவாதங்கள் பற்றியவையோ அல்லது குறுகிய மனப் பாங்குடையவை பற்றியவையோ அல்ல. பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பகிர்வு தொடர்பான மிகப் பெரிய வரலாறு ஒன்று அதற்கு உள்ளது. அமார்த்தியா சென்னின் Argumentative India (2005) என்ற நூல் இதன் சில விடயங்களை விபரிக்கிறது.
சென்னின் கருத்துப்படி, சில முஸ்லிம் அரசர்களும் அரசிகளும் ஜனநாயக விவாதங்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, அவற்றில் கலந்துகொண்டுமுள்ளனர். அவர்கள் தம்மை அறேபியர்களாக அல்லாமல் இந்தியவர்களாகவே கருதினர்.
 அறிவியல் பணிகள்
மனித நாகரிகத்திற்கு இஸ்லாத்தின் பங்களிப்பு குறித்து விளக்கும் குறிப்பிடத்தக்க பல அறிவியல் பங்களிப்புகள் காணப்படுகின்றன. பேராசிரியர் மேரியா ரோஸா மெனோகல் எழுதிய The Ornament of the World என்ற நூல், கிறிஸ்தவ, யூத, முஸ்லிம் சமூகங்கள் மத்திய கால ஸ்பெய்னில் ஐரோப்பிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு எவ்வாறு பங்களித்தன என விபரிக்கிறது.
இக்கட்டுரையை எழுதும் போது நான் ஸ்பெய்னில் இருக்கிறேன். இஸ்லாமிய மற்றும் அறபுக் கலாச்சாரத்தின் சாயல்களையும் வாடையையும், சந்தியாகோடி கொம்போஸ்டெலா போன்ற புராதன நகரங்களில் இன்றும் என்னால் கண்டுகொள்ள முடிகிறது. இத்தனைக்கும் இவ்வழகிய நகரம் கத்தோலிக்க நகராகவே அடையாளம் காணப்படுகிறது.
தென்னாசியாவிலுள்ள நவீன இலக்கிய கலாச்சாரங்களுக்கு இஸ்லாமிய கலாச்சாரம் எவ்வாறு பங்களித்துள்ளது என்பதை உருது, ஹிந்தி இலக்கிங்கள் தொடர்பான பல இந்திய அறிவியல் பணிகள் நன்கு சுட்டிக்காட்டுகின்றன. இஸ்லாமிய அறிஞர்களாலும் எழுத்தாளர்களாலும் தென்னாசியாவுக்குக் கொண்டு வரப்பட்ட புதிய இலக்கிய வகையினங்கள் எமது இலக்கிய கலாச்சாரத்தை மேலும் செழுமைப்படுத்தியுள்ளன. இதற்கு கஸல் மினச் சிறந்த உதாரணமாகும்.
பேராசிரியர் ஷம்ஸுர் ரஹ்மான் பாரூக்கி எழுதிய மிகச் சிறந்த நூலான Early Urdu Literary Culture and History நான் படித்த அவ்வாறான நூல்களுள் ஒன்றாகும். அந்த நூலை எனது மிகச் சிறந்த ஆசிரியர்களுள் ஒருவரான பேராசியர் முஹம்மத் உமர் மேனனுடன் இணைந்து நான் படித்தேன்.
பாரூக்கியின் நூலை வாசிக்கும்போது ஏன் இலங்கை முஸ்லிம் கல்வியாளர்களால் இவ்வாறான ஆய்வுகளில் ஈடுபட முடியவில்லை என எப்போதும் நான் வியப்பதுண்டு. இலங்கை முஸ்லிம் இலக்கியம் தொடர்பான முறையான ஆய்வை நான் இன்னும் காணவில்லை.
உண்மையில் தமிழில் நிறையவுள்ளன என நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், எமது முஸ்லிம் கல்வியாளர்கள் எமது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஆழப்படுத்தும் வகையில் அவ்வாறான ஆய்வுகளை முன்னிறுத்த வேண்டும். சிங்கள சமூகத்துடனான உரையாடலை வளர்த்தெடுப்பது,அவர்களது புலமையின் ஒரு நோக்கமாக நிச்சயம் அமைய வேண்டும். இதனை ஒரு பெரும்பான்மை சார்பானவாதம் என்று கொள்ளக் கூடாது. இது பரந்த நோக்குடைய ஒரு வாதமாகும்.
எனது நண்பரும் மிகச் சிறந்த கவிஞரும் ஆய்வறிஞருமான பேராசியர் எம்.ஏ. நுஃமான் அவ்வாறான முயற்சியை எடுத்துள்ளார் என்பதை இங்கு விதந்து கூற வேண்டும்.
சிங்கள தினசரியான ஜனரல அவருடன் மேற்கொண்ட நேர்காணல் மிதவாத மனம் கொண்ட தாராளவாத முஸ்லிம் புத்திஜீவியை வெளிப்படுத்திக் காட்டுகிறது. (நிலார் என். காஸிம் சில புத்தகங்கள் உள்ளன. அவை ஆய்வறிவு சார்ந்தவை என்பதை விடவும் அதிகம் இதழியல் தன்மை கொண்டவை.)
 தொடரும்…
*கட்டுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழக சிங்களத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக உள்ளார். ஸ்பெய்னின் சந்தியாகோ பல்கலைக்கழகத்தில் வருகை தரு புலமையாளராகவும் உள்ளார்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger