மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
தனது கையடக்கத் தொலைபேசிக்கு மீள்நிரப்பு (றிலோட்) செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கு குறித்த நிலையத்தின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கஞ்சா பொதியினை தொலைத்தொடர்பு நிலையத்தில் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த புதன்கிழமை 24ம் திகதி மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்கு (கொமினிக்கேசன்) சென்று தனது கையடக்கத் தொலைபேசிக்கு றிலோட் செய்து விடுமாறும் பணத்தை பின்பு தருவதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு குறித்த நிலையத்தின் உரிமையாளர் மறுப்புத் தெரிவித்த நிலையில், பொலிஸ் கான்ஸ்டபிள் ´நான் யார் என்று உனக்கு நாளைக்கு காட்டுகின்றேன் என கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.
பின் நேற்று 25ம் திகதி வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் குறித்த தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தான் மறைத்து கொண்டு வந்த கஞ்சாப்பொதியை நிலையத்திற்குள் வைக்க முயற்சி செய்த போது அங்கு நின்றவர்கள் இவருடைய செயற்பாட்டை கண்டு அவரிடம் கேள்வி கேட்க முற்பட்டுள்ளனர்.
அதன்பின் தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் அவசர பொலிஸ் சேவைக்கு தொடர்பை ஏற்படுத்திய நிலையில் அவசர பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அவ்விடத்தில் ஒன்று கூடிய மக்கள் பொலிஸாரிடம் நியாயத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸார் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.
இது இப்படியிருக்க மீண்டும் இன்று 26ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் குறித்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் வேறு சில பொலிஸாரை அவ்விடத்திற்கு அழைத்து வந்து தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார்.
தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிளின் நடவடிக்கை தொடர்பாக தொலைத்தொடர்பு நிலையத்தின் உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மன்னாரில் தென்பகுதியைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்ஸிம் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பலர் நீதியான முறையில் கடமையாற்றுகின்ற நிலையில் மன்னாரைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் மனிதாபிமானமற்று அடாவடித்தனமாக நடந்து கொண்டதையிட்டு மன்னார் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஏறாவூரில் கைதி தப்பியோட்டம்-
அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் இன்று ஏறாவூரில் வைத்து தப்பிச் சென்றுள்ளார்.
அடையாள அணி வகுப்புக்காக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் இன்று ஏறாவூரில் வைத்து தப்பிச் சென்றுள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இக்கைதிக்கு நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதற்மைய இக்கைதிக்கான அடையாள அணி வகுப்பொன்று இன்று சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இதன் பிரகாரம், மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியை இன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து சிறைச்சாலை பஸ் வண்டியில் இவரை மறைத்து வைத்து சிறைச்சாலைக்கு அருகில் நின்ற வேளை இக்கைதி தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற சம்பவத்தினைத் தொடர்ந்து இக்கைதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் பயனளிக்கவில்லை.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இக்கைதிக்கு 04 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்காக 03 அடையாள அணி வகுப்புக்களும் பதிவாகியிருந்தன.
இவற்றில் ஒரு அடையாள அணி வகுப்பு இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிபதி த.கருணாகரன் முன்னிலையில் நடைபெற்றிருந்த வேளையில் இக்கைதி தப்பிச் சென்றுள்ளார்.
Post a Comment